Primary tabs
-
4.5 திறனாய்வாளர்களில் மூன்று தரப்பினர்
திறனாய்வாளர்கள் எந்தத்துறை அல்லது எந்தத் தரப்பிலிருந்து - அதாவது, எந்தப் பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில், மூன்று வகையாக அவர்களைக் கண்டறிய முடியும். i) கல்வியாளர்கள் ii) படைப்பாளிகள் iii) பிற துறையினர்,
கல்விப் பணியில் ஈடுபட்டவர்களைக் கல்வியாளர் என்று குறிப்பிடுகிறோம். கல்வியாளர்கள் என்பவர்கள், மாணவர்க்காகக் கற்று, அதனை அவர்கள் மனங் கொள்ளுமாறு சொல்லுபவர்கள்
;சொல்ல வேண்டியவர்கள். எனவே, இலக்கியத்தை விளக்குவதும், மதிப்பிட்டுச் சிபாரிசு செய்வதும்; இவர்களின் நல்லன தீயன என்று பார்க்கும் அறக்கோட்பாடு, பழைமைவாதம் சேர்ந்த மரபு நெறி, போதனை பண்ணுகிற மனப்போக்கு, பலவற்றையும் கற்ற அல்லது கற்பதற்கு வாய்ப்புக் கிடைத்த சூழ்நிலை, ஒரு பாதுகாப்பான வாழ்நிலை முதலியவற்றைக் கொண்டிருப்பதும் இவர்களிடம் காணப்படுகிற சில பொது நிலைகள். இவர்கள் மத்தியில், மரபிலும், தொன்மை இலக்கியத்திலும் மூழ்கிவிடுகிறவர்கள் முதல், புறவயமான அறிவியல் நிலையிலும், மார்க்சியம் மற்றும் பல்துறை அணுகுமுறையிலும் பயிற்சியும் வல்லமையும் உடையவர்கள் வரை பலர் உண்டு. இவர்களில் சிலரை மட்டும் இங்குக் குறிப்பிடுவோம். முதல் திறனாய்வாளராகக் கருதப்படுகிற திருமணம் செல்வக்கேசவராயரும் சுவாமி வேதாச்சலம் என்ற மறைமலையடிகளும் ஆசிரியர்களாக இருந்தவர்கள். இவ்வகையில், எஸ்.வையாபுரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், கலாநிதி கைலாசபதி, நா. வானமாமலை, கோ. கேசவன்; அ. மார்க்ஸ், கா. சிவத்தம்பி, கோவை ஞானி, தமிழவன், எம்.ஏ. நுஃமான் - இப்படிச் சில பெயர்களை உதாரணத்துக்காக இங்குக் குறிப்பிடலாம்.இவர்கள் கவிதை, சிறுகதை, நாவல் முதலிய துறைகளில் படைப்பாளிகளாகவும் அதேபோது திறனாய்வாளர்களாகவும் பரிணமித்தவர்கள். இவர்களுடைய திறனாய்வில், படைப்பு மனம் இருக்கும்
; மரபுகளை - அவை இன்னின்னவை என்று பெரும்பாலும் தெரியாமலேயே கூட - மறுக்கின்ற தீவிரத்தனம் இருக்கும்; தம்மையும் தம்மைச் சார்ந்தோரையும் பாராட்டுகிற ஒரு பெருமித உணர்வு இருக்கும். படைப்பாளர் - திறனாய்வாளர்களுள் வ.வே.சு.ஐயர் முதன்மையானவர். குளத்தங்கரை அரசமரம் உள்ளிட்ட பல சிறுகதைகள் எழுதித் தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி என்ற பெயர்பெற்ற இவர், திறனாய்விலும் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து, தொ. மு.சி. ரகுநாதன், க. நா. சுப்பிரமணியன், வல்லிக்கண்ணன், சி.சு. செல்லப்பா முதலிய படைப்பாளிகள், சிறந்த திறனாய்வாளர்களாகவும் விளங்கினார்கள். அண்மைக்காலமாகப் படைப்பாளர் பின்புலங்களோடு திறனாய்வு செய்கிறவர்கள் பலர் ; பெயர்கள் சொல்லின் பெருகும். மேலும், பாரதியார், புதுமைப்பித்தன், வ.ரா., கு.ப. ராசகோபாலன் ஆகிய படைப்பாளிகளிடமும் திறனாய்வுக் கருத்துநிலைகள் குறிப்பிடத்தக்கவையாக உண்டு.மேற்கூறிய இரு துறைகளும் அல்லாத வேறு பணிகளில் ஈடுபட்டவர்கள் இவர்கள். வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட பலரும் திறனாய்வில் தடம் பதித்துள்ளனர். உதாரணம், டி.கே. சிதம்பரநாதமுதலியார். இவர் பண்ணையார் ; வழக்குரைஞர் ; அரசுத்துறையில் ஒரு தலைமை அதிகாரி ; அரசியலில் தொடர்பும், பெரிய தலைவர்களுடன் நெருக்கமும் கொண்டவர். தமிழில் ரசனை முறைத் திறனாய்வுக்கு இவரே முன்னோடி. அடுத்து, அரசியலில் முன்னாளிலிருந்த ப.ஜீவானந்தம், ம.பொ. சிவஞானம் ஆகிய இருவரும் திறனாய்வுத்துறையிலும் குறிப்பிடத்தக்கவர்கள். மார்க்கபந்து சர்மா, வெ. சாமிநாதசர்மா, சாமி சிதம்பரனார் மற்றும் அண்மையில் எழுதிவரும் வெங்கட் சுவாமிநாதன், எஸ். வி. ராஜதுரை, தி.க. சிவசங்கரன், வெ. கிருஷ்ணமூர்த்தி, ரவிக்குமார் முதலிய பல பெயர்களைக் குறிப்பிடலாம். எந்தப் பின்புலங்களிலிருந்து வந்தாலும், திறனாய்வு என்பது ஒரு தனித்துறை, அதிலே செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்ற உணர்வு, தமிழ்த் திறனாய்வாளர்கள் பலரிடமும் உண்டு என்பது கவனங் கொள்ளத்தக்கது.