Primary tabs
- 4.7 புதுமைப்பித்தனும் கு.ப.ரா.வும்
படைப்பாளர் திறனாய்வில் ஈடுபட்டதற்கு இவர்கள் இருவரும் எடுத்துக்காட்டு. புதுமைப்பித்தன், கு.ப.ராசகோபாலன் இருவருமே ‘மணிக்கொடி’ (1933-45) என்ற இலக்கியப் பத்திரிகையில் எழுதியவர்கள்
; மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள். இலக்கியப் பத்திரிகை அல்லது சிற்றிதழ் என்பது, வணிகப் பத்திரிகைகளுக்கு அல்லது பிரபலத்தன்மைகளும் வெகுஜன பாமர ரசனையும் கொண்ட பத்திரிகைகளுக்கு மாற்றாக அமைவதாகும். இத்தகைய இலக்கிய இதழ்களுக்கு மணிக்கொடி முன்னோடியாகும். இலக்கியத்தில் படைப்பு முறையையும், தீவிரத்தன்மையையும், பரிசோதனை முயற்சிகளையும் முன்வைப்பவை இவை. இவற்றின் சரியான பிரதிநிதியாக அமைபவர் புதுமைப்பித்தன். இவர் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பது மட்டுமல்லாமல், சிறுகதையிலக்கியம் பற்றியும், பிற தற்கால இலக்கியங்கள் பற்றியும் தீவிரமான கருத்துகள் கொண்டவர்.வெகுஜன-ஜனரஞ்சக ரசனைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த புதுமைப்பித்தன், அத்தகைய ஜனரஞ்சகப் போக்கின் பிரதிநிதியாக இருந்த கல்கியை மிகத் தீவிரமாகச் சாடி, மறுத்து எழுதுகிறார். ஆர்வ நிலைகளை ஏற்படுத்துதல், மிகையான புனைவுகள், தொடர்கதைத் தன்மைகள் முதலியவற்றை எதிர்த்துப் புதுமைப்பித்தன் போர் தொடுக்கிறார். இலக்கியத்தில் ஜனரஞ்சகப் பண்பாடு
(Mass Culture) மற்றும் பிரபலத்துவம் (Populism) ஆகியவற்றிற்கு மாற்றாக, நவீனத்துவம் (Modernity) என்பதை முன்வைத்த கலகக் குரல் இவருடையது. ஆனால் இதனாலேயே, பலருக்கும் புரியாது என்று சொல்லுகிற முறையில் எழுதிய மௌனியை இவர் பாராட்டிப் பேசுகிறார். அதேபோது, நேரடியாகத், திராவிடர் பகுத்தறிவு இயக்கத்தின் குரலாக ஒலித்த பாரதிதாசனையும் இவர் பாராட்டுகிறார். பாரதிதாசன் பற்றி அதே காலத்தில் ஒரு உடனடித் தன்மையோடு எழுதியவர் புதுமைப்பித்தன். ‘பாரதியார் தமிழுக்கென்று விட்டுச்சென்றவை இரண்டு ; ஒன்று, அவருடைய கவிதை; இன்னொன்று பாரதிதாசன்' - என்பது புதுமைப்பித்தனுடைய பாராட்டு மொழி.கு.ப.ரா, தேசிய விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். பாரதியாரைக் கல்கியும் ராஜாஜியும், ‘அவர் கவிஞர் தான்
; நல்ல கவிஞராக இருக்கலாம் ; ஆனால் ஷேக்ஸ்பியர், மில்ட்டன், ஷெல்லி போல மகாகவி அல்ல’ என்று மறுத்துரைப்பர். பாரதி பற்றிய கல்கியின் இந்தக் கருத்தைத் தீவிரமாக மறுப்பவர், கு.ப.ரா. அவரும், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி) என்ற இன்னொரு எழுத்தாளரும் சேர்ந்து, கல்கியை மறுப்பதோடு, பாரதியார், மகாகவி தான் என்று வலியுறுத்தி எழுதினார்கள் (நூல் : ‘கண்ணன்- என்கவி’).