தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D06134-தொடக்ககாலத் திறனாய்வாளர்கள்

  • 4.2 தொடக்க காலத் திறனாய்வாளர்கள்

         இன்றைய திறனாய்வு என்பதனைப் பொறுத்த அளவில், தமிழில் முதல் திறனாய்வாளர் யார் என்பது அண்மைக்காலம் வரை விவாதிக்கப்பட்டு வந்தது. Kamba Ramayanam - A study என்ற நூலையும் ‘கவிதை’ என்ற கட்டுரையையும் (1918) எழுதிய வ.வே. சுப்பிரமணிய ஐயர் தான் முதலாமவர் என்று தொ.மு.சி.ரகுநாதன், சி.சு. செல்லப்பா முதலியவர்கள் கூறினார்கள். அதன்பின்னர், சாலை இளந்திரையன், கலாநிதி கைலாசபதி ஆகியோர், திருமணம் செல்வக்கேசவராய முதலியார் தான் முதலாமவர் என்று கூறினர். இதுவே இன்று தொடர்ந்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

         செல்வக்கேசவராயர் கல்வியியலாளர் ; அன்று உரைநடை வேகமாக வளர்ந்து வந்தது ; செல்வக்கேசவராயர் கம்பனிடம் ஈடுபாடு கொண்டவர். ‘வசனம்’ என்ற கட்டுரையில், தமிழில் உரைநடையின் வளர்ச்சியை மதிப்பீடு செய்கிறார். வசனத்தின் நடை பற்றியும் விளக்குகின்றார். ‘செய்யுள்’ என்ற கட்டுரை, அழகும் நுட்பமும் கொண்டது. இதில் அவர் ஆங்கிலத் திறனாய்வு முறையைப் பின்பற்றியிருப்பதாக, க.நா. சுப்பிரமணியன் என்ற திறனாய்வாளர் மதிப்பிடுகிறார். 1897-ஆம் ஆண்டிலேயே இவர் கம்பன் பற்றி ஆராய்ந்து சித்தாந்த தீபிகை என்ற இதழில் எழுதியிருக்கிறார். இவரையடுத்து, மறைமலையடிகளைக் குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்காகவும் மற்றும் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியரின் கருத்திலிருந்தும் உரைகூறுகிற முறையிலிருந்தும் மாறுபடுவதற்காகவும், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, (1903) பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை (1906) ஆகிய இரண்டு சிறுநூல்கள் எழுதினார். உரைமரபு சார்ந்த திறனாய்வு இவற்றிலே காணப்படுகிறது. பொழிப்புரை, கருத்துரை, விளக்கம் என்ற முறை பின்பற்றப்படுகிறது. சங்கப்பாடல் அடிகளை முன்பின்னவாக மாற்றிக்,     கொண்டுகூட்டிப்     பொருள்     உரைக்கின்றவர் நச்சினார்க்கினியர். பத்துப்பாட்டு எனும் தொகை நூல் முழுக்க இவ்வாறு வாக்கியங்களை முறிக்கின்ற மாட்டு எனும் இலக்கணம் இருப்பதாகச் சொல்லிப் பாட்டுகளை விருப்பம்போல் சிதைத்து விடுவார் நச்சினார்க்கினியர். இதனை மறுக்கிற விதமாகவும் வாக்கிய மரபிலிருந்து பொருள்கள் நேராகவும் தெளிவாகவும் எவ்வாறு புலப்படுகின்றன     என்பதைக்    காட்டுகின்ற விதமாகவும் மறைமலையடிகள், முல்லைப்பாட்டுக்கும் பட்டினப்பாலைக்கும் உரையெழுதுகின்றார். மேலும், இப்பாடல்களின் பொருட்சிறப்பையும், அணிநயத்தையும் ஒலிநயத்தையும் புலப்படுத்தி விளக்கம் தந்திருக்கிறார்.

         இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், The Tamilian Antiquary என்ற ஆராய்ச்சி இதழ், தொடர்ந்து பல ஆண்டுகள் வெளிவந்தது. தமிழ் இலக்கியம், பண்பாடு, சமூக வரலாறு முதலிய துறைகளில் ஆழங்கால்பட்டு எழுதிய பல ஆய்வுக் கட்டுரைகளை இது வெளியிட்டு வந்தது. ஜி.யூ.போப், கே.ஜி.சேஷ ஐயர், மு.இராகவையங்கார்,     ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை, வெ.கனகசபைப்பிள்ளை, பெ.சுந்தரம் பிள்ளை முதலிய பல அறிஞர்களின் ஆய்வுகளை இந்த இதழ் வெளியிட்டுவந்தது. பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை (1906) திருஞானசம்பந்தரின் காலம் குறித்து எழுதிய ஆய்வுக்கட்டுரை, (இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது), கால ஆராய்ச்சி பற்றிய மிகச் சிறந்த கட்டுரையாகும். அது போன்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி குறித்த கட்டுரை, பத்துப்பாட்டுத் தொகை நூல்களின் சிறப்புகளைப் பகுத்து ஆராய்கின்ற முறையில் ஆராய்ந்து கூறுகின்றது.

         வ.வே.சு. ஐயர், ‘கவிதை’ பற்றி (1924) எழுதினார். பழம்பாடல்கள் பற்றியே பேசினாலும், கவிதையின் பண்புகளைத் தனியே எடுத்து விதந்து கூறியமையும், செய்யுள் எனக் கூறாது, கவிதை என்ற சொல்லைப் பயன்படுத்தியமையும் இக்கட்டுரையின் சிறப்புகள். மேலைநாட்டார் கூறும் கவிதைப் பண்புகள் சிலவற்றை இவர் எடுத்துக்காட்டுகிறார். பின்னர், இவர் ‘Kambaramayanam - A Study’ என்ற ஒரு நூலை எழுதினார். கம்பனை வடமொழியின் வால்மீகியோடும் ஆங்கிலத்தின் மில்ட்டனோடும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ள இந்த நூல், தமிழில் ஒப்பிலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. கம்பனே பிறரினும் சிறந்தவன் என்பது இவருடைய முடிவு. மேலும், ‘இரசனைச்சுகம், கம்பராமாயணத்தில் அதிகம் காணப்படுகிறது என்பதே எனது கட்சி' என்று இவர் சொல்லுவார். இவருடைய அணுகுமுறையில், ரசனையும், கம்பன் பற்றிய ஒரு வியப்பு நிலையும் காணப்படுகின்றன.

         இவ்வாறு, தமிழ்த் திறனாய்வு முன்னோடிகளிடம் மரபு மீதான சார்பு, ரசனை மீதான ஆர்வம்/ பயிற்சி, தமிழிலக்கியம் மற்றும் தமிழர் பண்பாடு குறித்த ஒரு செம்மாப்புணர்வு முதலியவை தூக்கலாகக் காணப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:42:12(இந்திய நேரம்)