தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D06134-பாரதியாரும் திறனாய்வும்

  • 4.6 பாரதியாரும் திறனாய்வும்

         கவிஞராகவே அறியப்பட்டு வருபவர், சுப்பிரமணிய பாரதியார். இதுவன்றியும், இவர் பத்திரிகையாளராகவும், கட்டுரையாளராகவும் விளங்கினார். அவர் இலக்கியம் பற்றிய தம் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார் என்பது பலருக்கு வியப்பாகவும் இருக்கும்.

         இலக்கியத்தைப் பற்றிப் பாரதியாருக்கு அனுமானங்களும் சில கணிப்புக்களும் உண்டு. பாட்டுத்திறத்தாலே     இவ்வையத்தைப் பாலித்திட வேணும் என்ற போது, இலக்கியத்தின் நோக்கம் பற்றிய கணிப்பும், யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் இளங்கோவைப் போல் வள்ளுவன் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று சொல்லும்போது ஒரு மதிப்பீடும் - இப்படிப் பல தன்மைகளும் வெளிப்படுகின்றன. ஆனால், இவற்றிலும் சிறப்பாக, சில கட்டுரைகளிலே, கலை இலக்கியங்கள் பற்றி அவர் விரிவாகவும் தீர்க்கமாகவும் பேசியிருக்கிறார்.

         1916-ஆம் ஆண்டிலேயே இவர், ஜப்பானிய ஹைக்கூ பற்றி எழுதியிருக்கிறார். அதன் வரையறை, பண்பு, திறன் ஆகியன பற்றிப் பேசியிருக்கிறார். சுருங்கச் சொல்லி விளங்கவுரைக்கும் அதன் செறிவைத் திருக்குறளோடு ஒப்பிட்டிருக்கிறார். சில ஹைக்கூ கவிதைகளை மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார்; அதோடு     நிற்காமல், அந்தக் கவிதைகளை விமரிசனமும் செய்திருக்கிறார். (ஜப்பானிய கவிதை பற்றி முதலில் சொன்னவர் பாரதியாரே ஆவார்.)

         ‘ஸங்கீத விஷயம்’ என்ற கட்டுரை மிகவும் அற்புதமான ஒன்று. நாட்டுப்புறப்     பாடல்களின் மேன்மையைக் கூறி, வித்வான்கள் அவற்றிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தவும் செய்கிறார். “பொது ஜனங்களை நம்ப வேண்டும் ; இனிமேல் கலைகளுக்கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும்" என்று பேசுகிறார். கலையும் சமூகமும் பற்றிய உணர்வு நிலையின் வெளிப்பாடு, இது. மேலும் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய ராஜம் ஐயர் பற்றி இவர் பாராட்டியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு, பாரதியார், ஒரு திறனாய்வாளராகவும் காட்சி தருகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:42:25(இந்திய நேரம்)