Primary tabs
-
4.0 பாட முன்னுரை
கல்கியின் மொத்த இலக்கியப் படைப்பின் பரப்பளவைப் பார்த்தால், நூற்றாண்டு விழாக் காண்கிற கல்கி ஒரு சகாப்தமாகக் காட்சி தருகின்றார். தமிழ் உரைநடை வரலாற்றில் கல்கியின் நடை ஒரு தனி முத்திரை பதித்திருக்கின்றது. கல்கியின் மொழிப்பற்றுப் போலவே நாட்டுப்பற்றும் தனிச்சிறப்புடையது. கல்கியின் படைப்புகள் தமிழ்ப் பண்பாட்டின் மீட்டுருவாக்கமாகத் திகழ்கின்றன. எழுச்சிமிக்க எழுத்துகளை மட்டுமல்ல; எழுத்தாளர்களையும், இதழாசிரியர்களையும் உருவாக்கிய ஒரு பல்கலைக்கழகமாகவும் திகழ்பவர் கல்கி.
கள்வனின் காதலி, தியாகபூமி, மகுடபதி, சுதந்திரம் ஆகிய சமூக நாவல்களை எழுதிய கல்கி பின்னரே வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளார். சாதிக்கொடுமை, விதவையின் வேதனை, பொருந்தாமணத்தின் கொடுமை, விடுதலைப் போராட்ட வேட்கை போன்ற கருத்துகளின் அடிப்படையில் இவர்தம் சமூகப் புதினங்கள் அமைந்துள்ளன.