Primary tabs
-
4.5 மொழிநடை
ஓர் ஆசிரியரின் தனித் தன்மையை வெளிப்படுத்த வல்லது நடை. ஒரு நல்ல நாவலாசிரியரை அவரது நடை வாயிலாகவே இனங்கண்டு கொள்ளலாம். கேலி, கிண்டல், நகைச்சுவை, கற்பனை அனைத்தும் கலந்த எளிய இனிய நடையே கல்கியின் நடை. கல்கி தம்முடைய கற்பனா சக்திக்கும், கருத்தாழத்துக்கும், உணர்ச்சி வெளியீட்டுக்கும், கலை நுகர்ச்சித் திறனுக்கும், எடுத்துச் சொல்லும் திறமைக்கும் ஏற்றவாறு தமக்கெனத் தனிநடை வகுத்துக் கொண்டார்.
கல்கியின் நடையில் முதன்மையாவதும், பாராட்டத் தக்கதும் அவரது நகைச்சுவையேயாகும். கல்கியின் நகைச்சுவைக்குப் பெரும்பகுதி காரணமாக அமைபவை கதை நிகழ்ச்சிகளே.
தியாக பூமியில் பஜனை என்னும் பகுதியில், மக்கள் பஜனைக்கு வருவது பெரும்பாலும் பொழுது போக்குக்காகவும்; சுண்டல், வடை இவற்றுக்காகவுமே எனச் சுட்டிக் காட்டும்போதும், சாமாவய்யர், தீட்சிதர் போன்றோர்களும் சுண்டல் வாங்கி உண்பதற்காகவே பஜனையில் கலந்து கொள்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் போதும் நடையில் நகைச்சுவை சிறக்கிறது.
சாருவுக்கு அவளது தலைமையாசிரியையைக் கண்டாலே சிறிதும் பிடிக்காது. உமாராணியின் வீட்டில் இருந்த ஜில்லி என்ற நாயைக் கண்டவுடன், அவளுக்குத் தன் தலைமை ஆசிரியை நினைவுக்கு வந்து விடுவதாகக் கல்கி நகைச்சுவை உணர்வுடன் நாவலை நகர்த்திச் சென்றுள்ளார்.
“யமுனா அந்த ஜில்லியின் மூஞ்சியைப் பார்த்தா நம்ம பள்ளிக் கூடத்து ஹெட்மிஸ்ட்ரஸ் மூஞ்சி மாதிரியில்லை?” என்று சாரு கூறியவுடன் எல்லாக் குழந்தைகளும் கலகலவென்று சிரித்து விட்டனர். கல்கியின் நகைச்சுவை நடை எளிதில் புரிந்து கொள்ளும்படியாகவும், படிப்பவர் தம்மை மறந்து சிரிக்கும் படியாகவும் அமைந்துள்ளமைக்கு இது ஒரு காட்டு.
கல்கி பழந்தமிழ் இலக்கியத்தில் பயிற்சியும், பற்றும் உடையவர். ஆதலால் அவருடைய புதினங்களில் இயல்பாகவே வருணனைகள் சிறப்பாக அமைந்துள்ளன. அவரது படைப்பில் இடம்பெறும்,
இயற்கை வருணனை
பாத்திர வருணனை
உணர்ச்சி வருணனை
நிகழ்ச்சி வருணனை
ஆகிய நான்கு விதமான வருணனைகளைப் பற்றி இனிக் காணலாம்.
இயற்கை வருணனை
புதினத்தில் ஆங்காங்கே இடம்பெறும் அழகிய இயற்கை வருணனைகள் புதினத்தின் சுவையைக் கூட்டுகின்றன. தியாக பூமியில் மழை பற்றிய வருணனை இடம் பெறுகிறது.
‘மழை என்றால் எப்பேர்ப்பட்ட மழை! பிரளய காலத்து மழை என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத் துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது'
மழையின் மிகுதியை இவ்வருணனை உணர்த்துகின்றது.
பாத்திர வருணனை
கல்கி தியாகபூமியில் உள்ள ஒவ்வொரு பாத்திரத்தையும், நடைமுறையில் நாம் காணும் மனிதர்களாகவே படைத்துள்ளார். சம்பு சாஸ்திரியாரைப் பின் வருமாறு வருணித்துள்ளார்:
‘நெற்றியில் விபூதியும், முகத்தில் புன்சிரிப்பும் கழுத்தில் துளசி மணி மாலையும், கக்கத்தில் மடி சஞ்சியுமாகக் காணப்பட்டார்.'
உணர்ச்சி வருணனை
கல்கி தியாகபூமியில் சாவித்திரி, சாரு ஆகியோரது பாச உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். ‘அம்பிகே! பராசக்தி. நீ நினைச்சால் முடியாதது ஒண்ணுமில்லைன்னு தாத்தா சொன்னாளே? எனக்கு ஓர் அம்மா கொடுக்கக் கூடாதா, நல்ல அம்மாவா?' என சாரு பூஜை மாடத்தின் முன் நின்று உள்ளம் உருகப் பிரார்த்திப்பது உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு நல்ல சான்று.
நிகழ்ச்சி வருணனை
ஆசிரியர் நிகழ்ச்சிகளை மிக அழகாக வருணிக்கும் பாங்குடையவர். நாவலின் தொடக்கத்தில் இவர் இரயில் நிலையத்தின் பரபரப்பைக் கூறுகிறார்.
‘தூங்கி வழிந்த ரயிலடிக் கடைக்காரன் திடுக்கிட்டு எழுந்திருந்தான். அவன் எதிரே ஒரு தட்டில் நாலைந்து எள்ளுருண்டையும், மூன்று வாழைப்பழங்களும் இருந்தன. அவற்றின் மீது மொய்த்த ஈக்களைப் பரபரப்புடன் ஓட்டினான்' என்ற நிகழ்ச்சி வருணனை இயல்பானதாகும்.
கதை வளர்ச்சிக்கு உதவுவது உரையாடல். கதைமாந்தரின் உள்ளத்து உணர்ச்சிகளை உரையாடல் வாயிலாக உணரலாம்.
தங்கம்மாள்:குடித்தனப் பெண்ணுக்கு அதைவிட அழகு என்னத்துக்குங் காணும் ?தீட்சிதர் :
அம்மா ! நீங்க சொல்றது ரொம்ப சரி. அதைவிடத்தான் அழகு என்னத்துக்கு! அய்யர்வாள் நீங்களே சொல்லுங்கோ. நாமெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிற போது பெண் அழகைப் பார்த்தா பண்ணிண்டோம்?ராஜா :இல்லை. நாம் பண்ணிக்கலை. அதுதான் தெரிஞ்சிருக்கே? ஆனால் அந்த மாதிரி நம்ம பிள்ளையாண்டான் பண்ணிக்குவானா?மேற்கண்ட உரையாடல் அந்தணர் பேச்சுத் தமிழில் கதைமாந்தரின் தன்மைக்கு ஏற்றபடி அமைந்துள்ளது. பேச்சு நடையில் பாத்திரங்கள் இயல்பாக எப்படிப் பேசுவது பொருத்தமாக இருக்குமோ அப்படியே இந்நடை இருப்பதைக் காணலாம்.
படைப்பாளியின் படைப்பின் ஆற்றலை உணர்த்தக் கூடிய உத்திகளுள் உவமை சிறப்பிடம் பெறுகிறது. ஒரு கருத்தை அல்லது ஒரு மனநிலையை அல்லது ஒரு சூழ்நிலையை ஆற்றலோடு புலப்படுத்த ஆசிரியர் உவமையைக் கையாண்டுள்ளார்.
சம்பு சாஸ்திரி குப்பத்தை விட்டுப் போவதற்கான காரணத்தைக் கூறும் போது உவமையை ஆசிரியர் கையாண்டுள்ளார்.
“ஆயிரக்கணக்கான ஜனங்கள் தங்கள் சொந்தக் காரியங்களையெல்லாம் விட்டுத் தேசத்துக்காக உழைத்து வருகிறார்கள். எத்தனையோ பேர் தங்கள் உடல், பொருள், ஆவியைத் தத்தம் (தியாகம்) செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் இராமருடைய பாலத்துக்கு அணிற்பிள்ளை மணலை உதிர்த்ததுபோல என்னாலான தேச சேவையை நானும் செய்ய உத்தேசித்திருக்கிறேன் !” (ப.279)
இராமாயணத்தில் இராமர் தம்மைப் பின் தொடர்ந்த அயோத்திவாசிகள் தூங்கும்போது போனதுபோல் தாமும் அர்த்த ராத்திரியில் கிளம்பிப் போய்விட வேண்டியது தான், என்று சாஸ்திரி முடிவு செய்திருந்தார்.
இவ்வாறு இராமாயணச் செய்திகளை ஆசிரியர் கல்கி உவமையில் கையாண்டிருக்கும் திறம் பாராட்டுதற்குரியது.