தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-4.3-காந்தியச் சிந்தனைகள்

  • 4.3 காந்தியச் சிந்தனைகள்

    கல்கி விடுதலைப் போராட்ட வீரர், காந்தியப் பற்றுள்ளவர். அவர் வாழ்ந்த காலம் காந்தியுகம் என அழைக்கப்பட்ட காலமாகும். விடுதலை இயக்கத்தோடு இணைந்தே வாழ்ந்த கல்கி தம்முடைய காந்தியப் பற்றைக் கட்டுரையிலும், சிறுகதையிலும், புதினத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார்.

    4.3.1 தீண்டாமை

    காந்தியச் சமுதாய நெறிகளுள் ஒன்று தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும். மனிதருள் ஒரு பிரிவினரைத் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கும் கொடுஞ்செயல் தீண்டாமையாகும். தீண்டாமை இந்தியாவின் சாபக்கேடு என்றார் காந்தியடிகள். தியாக பூமியில் சம்பு சாஸ்திரி, சேரி வாழ் மக்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றித் தமது மாட்டுக் கொட்டகையில் தங்குமாறு ஏற்பாடு செய்தார். இதனால் பிராமணர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சம்பு சாஸ்திரியைத் தங்கள் சாதியிலிருந்து விலக்கி விட்டனர். சாஸ்திரங்களில் தீண்டாமை என்ற ஒன்று கிடையாது என்பதை, சம்பு சாஸ்திரி கிராம மக்களுக்குப் போதித்தார். சம்பு சாஸ்திரியின் பாத்திரம், ஓர் அந்தணரே முன்வந்து தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களை அணைத்துக் கொள்வதாக உருவாக்கப்பட்டது. பாரதியார், ராஜாஜி போன்ற அந்தணக் குலத்தைச் சார்ந்த பலர் விடுதலைப் போராட்டத்தில் காந்தியைப் போல உழைத்தனர். இது, தியாக பூமி நாவலில் எதிரொலிக்கிறது.

    4.3.2 மதுவிலக்கு

    விடுதலை இயக்கக் காலத்தில் மக்களிடையே குடிப்பழக்கம் பரவிக் கிடந்ததைத் தம் புதினங்களில் சுட்டிக் காட்டி, மதுவிலக்குப் பிரச்சாரம் செய்துள்ளார் கல்கி.

    சம்பு சாஸ்திரி, ஊர் ஊராகச் சென்று கூட்டு வழிபாடு செய்து வந்தார். மக்களிடம் கூட்டு வழிபாட்டின் மூலம் தெய்வ பக்தியையும், நாட்டுப்பற்றையும் அவர் வளர்த்தார். அதனுடன், கள் உண்ணாமைக்கு எதிராக மக்களைத் திரட்டினார். கள்ளுக்கடையில் இருந்த சிலர் சாஸ்திரியைக் கண்டவுடன் கலயங்களைப் போட்டுவிட்டு ஓடத் தொடங்கினர். சிலர் கள்ளுக்கடையை மூடிவிட்டனர். சாஸ்திரியால் கிராமங்களில் இருந்த குடிப்பழக்கம் அடியோடு நின்று போனது.

    4.3.3 பெண் விடுதலை

    கல்வியில் லாத பெண்கள்
    களர் நிலம் -அந்நிலத்தில்
    புல்முளைத் திடலாம் ; நல்ல
    புதல்வர்கள்
    முளைப்ப தில்லை

    எனப் பாரதிதாசன் பெண் கல்வி பற்றிப் பாடினார். கல்கி தம் புதினங்களில் பெண் கல்வி மற்றும் பெண் விடுதலையைப் பற்றியும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

    தியாக பூமி என்ற நாவலின் உட்பிரிவில் பெண்விடுதலை பற்றிக் கூறியுள்ளார். கிளர்ச்சியில் ஈடுபட்ட மகளிர்,

    கற்பு நெறியென்று சொல்ல வந்தார் - இரு
    கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்

    என்று வீறு கொண்டெழுந்து பாரதியின் பாடலைப் பாடுவதாகவும், மகாத்மா காந்தியின் போதனைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் செவி சாய்ப்பதாகவும் நாட்டுத் தொண்டில் ஈடுபட்டு, சிறை புகுந்ததாகவும் காட்டிக் கல்கி தம் புதினத்தில் பெண் விடுதலையை வெளிப்படுத்தியுள்ளார்.

    இந்நாவலில்,..

    தாயின் அடிமைத்தனத்தை நீக்குங்கள், உங்கள்
    அடிமைத்தனம் தானே விலகிப் போகும்

    என்று காந்தி மகான் உரைத்த வழியிலேயே பெண்கள் தங்கள் விடுதலையைப் பெற முயல்கிறார்கள். கல்கி, தியாகபூமியில் பெண் விடுதலைக்காக ஒரு புரட்சியையே உண்டு பண்ணியுள்ளார் என எண்ணுமளவிற்குச் சாவித்திரி என்னும் பாத்திரத்தைப் படைத்துள்ளார்.

    4.3.4 விடுதலைத் தாக்கம்

    தியாகபூமி தமிழகத்தில் நிகழ்ந்த சத்தியாக்கிரகப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. இப்புதினத்தில் சம்பு சாஸ்திரி கிராமங்களுக்கெல்லாம் சென்று சத்தியாக்கிரக இயக்கத்தின் போக்கையும், தன்மையையும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.

    சாஸ்திரியின் பேச்சைக் கேட்ட மக்கள் தங்கள் உடல், பொருள் அனைத்தையும் நாட்டிற்காகத் தரத் துணிந்தார்கள். சாஸ்திரியோடு சாருவும் இணைந்து கொண்டு நாட்டுச் சேவையில் ஈடுபட்டாள்.

    இந்நாவலில் தாம் உணர்த்த விரும்பும் சிந்தனைகளைக் கல்கி எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று பார்த்தோம். அவற்றை, ஓர் அழகிய கலைவடிவமாகத்தரக் கல்கி பயன்படுத்திய உத்திகள் பற்றி இனிக் காணலாம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1

    சம்பு சாஸ்திரியின் முதல் மனைவி யார்?

    2
    சாவித்திரியின் பண்பு நலன் குறித்து எழுதுக.
    3
    தியாகபூமியில் இடம்பெறும் தீண்டாமை குறித்து எழுதுக.
    4

    மதுவிலக்குப் பற்றிய கருத்துகள் புதினத்தில் இடம் பெறுதல் குறித்து எழுதுக.

    5
    பெண் விடுதலை பற்றிய கருத்துகளை எழுதுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 16:37:00(இந்திய நேரம்)