Primary tabs
-
4.2 கதைமாந்தர்
ஒரு நாவலின் அடித்தளமே கதைமாந்தரைப் படைப்பதைத் தவிர வேறு அன்று என்று கூறுவார் ஆர்னால்டு பென்னட் என்ற அறிஞர். ஒரு நாவலுக்கு உயிர் கொடுக்கும் இன்றியமையாத கூறு பாத்திரப் படைப்பு.
தியாக பூமியில் ஸ்ரீதரன், சாவித்திரி, சம்பு சாஸ்திரி, சாருமதி முதலானோர் முதன்மைப் பாத்திரங்களாகவும், மங்களம், தீட்சிதர், இராஜாராமய்யர், நல்லான் போன்றோர் துணைப் பாத்திரங்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர்.
தியாகபூமி புதினத்தின் தலைவி சாவித்திரி. இவள் இந்த நாட்டின் பழைமையான பண்பாட்டு மரபில் வந்த பெண்மை நலம் கொண்டவள். மண் அடிமைத்தனமும், பெண் அடிமைத்தனமும் நீக்கப்பட வேண்டும் என்ற உரிமையுணர்வு மிக்கவள். பாரதி காட்டிய புதுமைப்பெண்; இளமையிலேயே தாயைப் பறி கொடுத்தவள்; குழந்தை சாருவின் தாய்; ஸ்ரீதரனின் மனைவி.
சாவித்திரியை மணந்த ஸ்ரீதரனுக்கு அவளுடைய பழைமையான பண்பாடுகள் பிடிக்கவில்லை. ‘புதுமை' என்பதை அவன் தவறாகப் புரிந்து கொண்டிருந்தான். சாவித்திரி துன்பம் மிகுந்த நிலையிலும் இறை நம்பிக்கையோடு செயல்பட்டவள்.
மீனாட்சி மருத்துவமனையில் உள்ள பணிப் பெண்களை எல்லாம் பார்க்கும் போது, தானும் சுதந்திரமாக வாழவேண்டும் என்றும், பிறர் கையை எதிர்பார்க்காது வாழ வேண்டும் என்றும் தீர்மானிக்கிறாள்.
சாவித்திரியின் வாழ்க்கை, விடுதலைக்குப் போராடிய வாழ்க்கை. இவள் திருமணத்திற்கு முன் சித்தியின் கொடுமையிலிருந்து விடுதலை பெறத் துடித்தாள். திருமணம் முடிந்ததும் கணவனோடு வாழத் துடித்தவள் கணவனால் பல தொல்லைகளுக்கு ஆட்பட்டாள். குழந்தைக்குத் தாயானதும் எவ்வாறு வாழ்வது என எண்ணி ஏங்கினாள். உமாராணியாகச் செல்வம் படைத்தவளாக மாறியதும் தந்தையையும், குழந்தையையும் தேடி அலைந்தாள். பெண்ணுரிமைக்காகப் போராடினாள். இறுதியில் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டாள். கதைத் தலைவனைவிடத் தலைவியான சாவித்திரி பாத்திரமே கதை இயக்கத்திற்குப் பெரும் பங்காற்றுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெடுங்கரை கிராமத்தில் அந்தணர் குலத்தில் தோன்றியவர், சாவித்திரியின் தந்தை; இறை நம்பிக்கை உடையவர்; கிராம மக்களைத் தம்முடைய சாதி பேதம் இல்லாத இடையறாத அன்பினால் சீர்திருத்திய செம்மல்.
அரிசன மக்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று எண்ணி வாழ்ந்த காலத்தில் சாஸ்திரி அக்கிரகாரத்தில் உள்ள தமது மாட்டுக் கொட்டகையில் அவர்களுக்குத் தங்க இடமளித்து உணவளிக்கிறார். இதனால் அந்தணர்கள் தம் சாதியிலிருந்து சாஸ்திரியைத் தள்ளி வைக்கின்றனர்.
மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு முதலிய பிரச்சாரங்களில் ஈடுபட்டு ஊர் ஊராகச்சென்று, தொண்டு செய்யும் சாஸ்திரி சாவடிக் குப்பத்துக் காந்தியாகவே மாறிவிடுகிறார்.
தியாகபூமி புதினத்தின் தலைவன்; சாவித்திரியின் கணவன்; சாருமதியின் தந்தை; புதினத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் மட்டும் இடம் பெறுபவன்.
தங்கம்மாள் தன் மகன் ஸ்ரீதரனைக் கேட்காமலே அவனுடைய திருமணத்திற்கு வரதட்சணை பேசி ஆயிரம் ரூபாய் முன்பணமும் (அட்வான்சும்) வாங்கியாகிவிட்டது என்று மகனுக்குக் கடிதம் எழுதுவதிலிருந்து தாய்க்கு அடங்கிய பிள்ளையாக ஸ்ரீதரன் இருப்பதை அறியலாம்.
ஆடம்பர மோகம் கொண்ட ஸ்ரீதரன், ஸீஸியைக் காதலித்தான். ஸீஸியின் ஆடம்பரமும், அழகும் ஸ்ரீதரனைக் கவர்ந்தன. இதனால் சாவித்திரியைப் பல கொடுமைகளுக்கு ஆளாக்கினான். பல நாட்களுக்குப் பின் ஸீஸி ஸ்ரீதரனைப் பகிரங்கமாய் நிராகரித்துப் போய் விட்டாள்.
புதினத்தின் தொடக்கத்தில் போக பூமியில் வாழ்ந்த இவன் இறுதியில் தியாக பூமியில் அடியெடுத்து வைக்கிறான். அன்னை பாரத நாட்டின் கால் விலங்குகளைத் தகர்க்கக் கைவிலங்குப் பூணுகிறான்.
சாவித்திரியின் குழந்தை சாருமதி. சம்பு சாஸ்திரியின் பேத்தி. தியாகபூமியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த பாத்திரம். பிறந்த உடனேயே தாய்தந்தையால் கைவிடப்பட்டுத் தன் தாத்தா சம்பு சாஸ்திரியால் உறவு முறை தெரியாமலே வளர்க்கப்பட்டாள். இசை ஈடுபாடும், தெய்வ பக்தியும், நாட்டுப் பற்றும் சாருமதியிடம் மிகுதியாகக் காணப்பட்டன.
சாருமதி, சாவித்திரியும் ஸ்ரீதரனும் தம்முள் ஒன்றுபட்டு நிச்சயம் தன்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தாள். அவர்களும் வந்தனர்.
தியாகபூமியில் இடம்பெற்ற முதன்மைப் பாத்திரங்களின் பண்பு நலன்கள் குறித்து இப்பாடத்தின் மூலமாக அறிந்து கொண்டோம். இனி, இந்தியப் பெருநாட்டைத் தியாக பூமியாகக் காட்டும் கல்கி, அத்தியாக பூமியின் மேன்மைக்காகப் பெரும் தியாகங்களைச் செய்யுமாறு மக்களுக்கு விழிப்பூட்டிய காந்தியடிகளின் சிந்தனைகளை நாவலில் எவ்வாறு அமைத்துக் காட்டுகிறார் எனக் காணலாம்.