தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-4.4-உத்திகள்

  • 4.4 உத்திகள்

    நாவலின் சிறப்புக்குக் காரணமாக அமைவது அதனுள் பொதிந்து கிடக்கும் திறன்மிகு கூறுகளேயாகும். படைப்பாசிரியரின் வெற்றிக்கும், தோல்விக்கும் இக்கலை நுட்பத் திறன்களே காரணமாக அமைகின்றன. இவற்றை உத்திகள் என்று கூறுவார்கள். தியாகபூமியில் தலைப்புப் பொருத்தம், நனவோடை, முன்நோக்கு, தொடக்கம், முடிவு ஆகிய உத்திகள் அமைந்துள்ள தன்மையை இனிக் காண்போம்.

    4.4.1 தலைப்புப் பொருத்தம்

    தலைப்பு, ஒரு படைப்பினை ஆசிரியன் எந்தப் பார்வையிலிருந்து வெளிப்படுத்தக் கருதுகின்றான் என்பதைக் காட்டக் கூடியது. கதையின் தலைமைப் பண்பைச் சுட்டும் வகையில் தமது புதினத்திற்குத் தியாக பூமி என்ற தலைப்பினைக் கல்கி வைத்துள்ளார். இந்நாவலுக்குக் கல்கி பாரத நாட்டுக்கான சாவித்திரியின் தியாகத்தை அடிப்படையாக வைத்துத் தியாக பூமி எனப் பெயரிட்டுள்ளார்.

    “பாரத தேசம் ஆதி காலத்திலிருந்தே தியாகத்துக்குப் பேர் போனதம்மா. அதனாலே தான் இந்த தேசத்தைத் தியாகபூமி என்று சொல்கிறார்கள்” என்று சம்பு சாஸ்திரி சாவித்திரியிடம் கூறுகின்ற மொழியிலிருந்து நாவலுக்கான தலைப்பு பெறப்பட்டுள்ளது.

    தமிழகமே அகிம்சைப் போரில் தியாகபூமியாக மாறியதை நாம் இக்கதையில் காணமுடிகிறது.

    4.4.2 நனவோடை உத்தி

    இது கதையின் அமைப்பு முறையைச் சார்ந்த உத்தியாகும். பாத்திரங்களின் நினைவோட்டம், நினைவு நிலை தாண்டிய அடிமன ஓட்டம் ஆகியவற்றைத் தருவதன் மூலம் கால, இட, வரிசை முறைகளை முன்பின்னாக மாற்றிக் கதை சொல்லும் உத்தியே நனவோடை உத்தி ஆகும். தியாக பூமியில் சம்பு சாஸ்திரியையும், சாவித்திரியையும் கொண்டு நினைவுக் காட்சிகளைக் கல்கி அமைத்து உள்ளார்.

    சாஸ்திரி மங்களத்தை, இரண்டாம் தாரமாக மணந்து கொண்டதற்கான காரணத்தைக் கல்கி நினைவுக் காட்சி மூலமாக விளக்கியுள்ளார்.

    கல்கி இந்நாவலில் நனவோடை உத்தியைப் பயன்படுத்தியமைக்கு மற்றுமொரு சான்று பின்வருமாறு ‘சாருவுக்கு ஆறு ஏழு வயதுதான் இருக்கும். அந்தக் குழந்தை இருந்தால் அதற்கும் இப்போது ஏழு வயதுதான் இருக்கும்' என்று உமாராணி தன் மகளின் நிலையை எண்ணுகிறாள்.

    4.4.3 முன்நோக்கு உத்தி (Flash Forward)

    இது பின்னால் நிகழவிருப்பதை முன்னரே குறிப்பிட்டுக் காட்டுவதாகும். கதையின் பின் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே கூறும் இயல்புடையவர் கல்கி. இவ்வாறு கூறுவதால் சில சமயம் கதையின் விறுவிறுப்புக் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கான சான்று பின்வருமாறு.

    “சாவித்திரி! சாவித்திரி! ‘இந்தச் சனியன் பிடித்த நெடுங்கரைக்குத் திரும்பிப் போக மாட்டோமா' என்று ஒரு நாளைக்கு நீ தாபங் கொள்ளப் போகிறாய்! இப்போது நீ வெறுக்கும் நெடுங்கரை அப்போது உன்னை வரவேற்குமா?” எனச் சாவித்திரிக்கு இனி நேர இருக்கும் இன்னல்களை ஆசிரியர் முன்கூட்டியே கோடிட்டுக் காட்டி விடுகிறார். சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் இத்தகைய முன்னோக்கு உத்தி அமைந்துள்ளது என்பதும் குறிக்கத்தக்கது.

    4.4.4 கதைத்தொடக்கம்

    கதைத் திறனில் தலைமை இடத்தைப் பெறுவது தொடக்கம். தியாக பூமியை ஆசிரியர் ‘பாகம்' என்ற பிரிவாக, நான்கு பகுதிகளாகப் பிரித்துள்ளார். கல்கி புதினத்தின் ஒவ்வொரு பாகப் பகுதியைத் தொடங்கும் போதும் ஒரு இலக்கியப் பாடலின் அடியைக் காட்டித் தொடங்கியுள்ளார்.

    எடுத்துக்காட்டாக, இரண்டாம் பாகத்தில் மழை என்ற அத்தியாயத் தலைப்பில் “மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?” என்று கபிலர் பாடல் அடியுடன் தொடங்கியுள்ளார். இவ்வாறே நான்கு பகுதிகளும் பாடலுடன் தொடங்கப் பெற்றுள்ளன.

    நாவலின் தொடக்கம் - சம்பு சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திச் செல்லும் போக்கில் படைக்கப் பெற்றுள்ளது.

    4.4.5 கதை முடிவு

    நாவலின் தொடக்கத்தைப் போல முடிவிற்கும் தனிச்சிறப்பு உண்டு. நாவலின் வெற்றிக்கு முடிவு இன்றியமையாததாகிறது. தியாகபூமி இறுதியில் சம்பு சாஸ்திரியின் நிறைவடையும் தூய உள்ளத்தோடு முடிவடைகிறது. புதினத்தை ‘வைஷ்ணவ ஜனதோ' என்ற பாடலின் பொருளோடு கல்கி முடித்துள்ளார்.

    இனி, நாவலின் பல்வேறு சிறப்புகளுக்கும் அடிப்படையாகவும் உறுதுணையாகவும் அமையக் கூடிய கல்கியின் நடைச் சிறப்பைக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:19:43(இந்திய நேரம்)