Primary tabs
-
இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று என்பதை முன்னரே பார்த்தோம். இப்போது மணிமேகலையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். இதுவே தமிழில் எழுந்த முதல் பௌத்தக் காப்பியம். மணிமேகலையைப் பற்றிய சில சிந்தனைகள்......
நூலாசிரியர்மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் காணப்படுகிறது. இவருக்கிருந்த தமிழ் இலக்கியத் திறனும் பௌத்த சமயத் தத்துவங்களில் கொண்டிருந்த புலமையும் ஈடுபாடும் இந்நூலிலிருந்து புலனாகின்றன. உலகில் பசிப்பிணி அறவேண்டும் என்ற உயரிய நோக்குடன் மானிட நேயமும் பெண்ணின் பெருமையும் விளங்கும்படி காப்பியம் படைத்த பெருமைக்குரியவர் சாத்தனார்.
6.1.1 கதை மாந்தர்கள்மணிமேகலைக் காப்பியத்தின் கதையை நீங்கள் ‘காப்பியங்கள்’ என்னும் பாடப்பகுதியில் படித்திருப்பீர்கள். எனவே இந்தப் பாடத்தில் வரும் பகுதிகளில் தோன்றுகின்ற கதை மாந்தர்களைப் பற்றிய அறிமுகத்தை இங்கே காணலாம்.
-
மணிமேகலை
காப்பியத் தலைவி. பௌத்தத் துறவியாகி மக்களின் பசிப்பிணி நீக்கிச் சமயத் தொண்டாற்றியவள்.
- மாதவி
மணிமேகலையின் தாய். கணவன் கோவலன் கொலையுண்ட பிறகு பௌத்த சமயத் துறவியானாள். மகளையும் அதில் ஈடுபடுத்தினாள்.
- சித்திராபதி
மாதவியின் தாய்; மணிமேகலையை, மன்னன் மகன் உதயகுமரனோடு இணைத்து வைக்க முயன்றாள்.
- உதயகுமரன்
மன்னன் மகன். மணிமேகலையின்பால் காதல் கொண்டவன். எப்படியேனும் அவளை அடையத் துடித்தவன்.
- சுதமதி
மணிமேகலையின் தோழி- சங்க தருமன்
பௌத்தத் துறவி- மணிமேகலா தெய்வம்
மணிபல்லவம் என்னும் தீவில் வாழும் ஒரு தெய்வமகள். கோவலன் இந்தத் தெய்வத்தின் பெயரையே தன் மகளுக்குச் சூட்டினான். இந்தத் தெய்வம்தான் மணிமேகலைக்குப் பலவகைகளில் உதவி செய்தது.- தீவதிலகை
இரத்தின தீவகம் என்னும் தீவில் இருந்த பதும பீடத்தின் காவல் தெய்வம். பல வகைகளில் மணிமேகலைக்கு உதவியது.- ஆபுத்திரன்
கருணை மிகுந்தவன். மக்களின் பசிப்பிணியைத் தீர்ப்பதற்காக அமுதசுரபியைப் பெற்றவன். பிறகு அதை ஒரு பொய்கையில் விட்டுச் சென்றான். அதுவே பின்னர் மணிமேகலையின் கைக்கு வந்தது.- ஆதிரை
மணிமேகலை தான் பெற்ற அமுதசுரபியில் முதல் முதலாகப் பிச்சையேற்றது இந்தக்
கற்புக்கரசியிடம்தான்.- சாதுவன்
ஆதிரையின் கணவன். மரக்கலம் உடைந்து நாகர் தீவில் கரையேறி அம்மக்களுக்கு அறிவுரை கூறியவன்.- அறவண அடிகள்
பௌத்தத்துறவி; சமய அறிஞர்; மணிமேகலைக்கு அறநெறி உணர்த்தியவர்; காஞ்சியில் வாழ்ந்தவர்.- கந்திற்பாவை
சக்கரவாளக் கோட்டத்தில் ஒரு தூணில் வாழும் காவல் தெய்வம்- காயசண்டிகை
கந்தர்வப் பெண். ஒரு முனிவரின் சாபத்தால் யானைத் தீ என்னும் பெரும்பசி நோய்க்கு ஆளானவள். மணிமேகலை அமுத சுரபியிலிருந்து உணவளித்ததும் அந்தச் சாபம் விலகியது. உதயகுமரனிடமிருந்து தப்புவதற்காக மணிமேகலை இந்தக் காயசண்டிகையின் உருவில் நடமாடினாள். இதையறிந்து பின் தொடர்ந்த உதயகுமரனைக் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் வெட்டிக் கொன்றான்.
6.1.2 காப்பியத்தின் தனிச்சிறப்பு
மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்ற சிறப்பிற்கு உரியது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையும் விளக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற்றப்பட்டு அங்குள்ளோர்க்கு அமுதசுரபி கொண்டு மணிமேகலை அவர்களின் பசிப்பிணியை நீக்குவதும் காப்பியத்தின் தனிச்சிறப்பாகும். இனி, இக்காப்பியம் கூறும் சமயக் கோட்பாடுகளையும் பிறவற்றையும் பார்க்கலாம். அதற்கு முன் பௌத்த சமயத்தைத் தோற்றுவித்த புத்தரைப் பற்றி மணிமேகலை என்ன கூறுகிறது என்று பார்க்கலாமா?
-