தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-வீரசோழியம்

  • புத்தமித்திரர் என்னும்  பௌத்த சமயத்தவரால் எழுதப்பட்ட நூல் வீரசோழியம். இஃது ஓர் இலக்கண நூல். வடமொழி இலக்கணத்தை ஓரளவிற்குத் தழுவித் தமிழின் ஐந்திலக்கணங்களையும் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) சுருக்கமாகக் கூறுவது.

    புத்தமித்திரரை ஆதரித்த வீரராசேந்திரன் என்னும் வீரசோழன் பெயரால் இந்நூல் இயற்றப்பட்டதாகலின் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இதற்கு வீரசோழியக் காரிகை என்ற பெயரும் உண்டு.

    நூலின் அமைப்பு

    எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஒவ்வொன்றுக்கும் ஓர் அதிகாரம் என்ற வகையில் ஐந்து அதிகாரங்கள் கொண்டது. அதிகாரங்கள் படலங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. நூலின் துவக்கத்தில் ஒரு பாயிரம் உள்ளது.

    நூலின் சிறப்பு

    வீரசோழியம் இப்போது வழக்கொழிந்து போனாலும் அது தோன்றிய காலகட்டத்தில் சிறப்பாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை இயற்றிக் கச்சிக்குமரக் கோட்டத்தே அரங்கேற்றும் காலத்தில், அப்புராணத்தின்    முதற்செய்யுளில்    வருகிற திகடசக்கரம் (திகழ்+தசக்கரம்) என்னும் சொல் புணர்ச்சிக்கு இலக்கணம் காட்டும்படி அவையிலுள்ளோர் தடை நிகழ்த்தியபோது, அவர்களுக்கு இந்த வீரசோழியத்திலிருந்து இலக்கணம் காட்டப்பட்டது என்றும், பின்னர் அவையிலுள்ளோர் அப்புணர்ச்சியை ஒத்துக் கொண்டனர் என்றும் ஒரு வரலாறு கூறப்படுகின்றது. இதன் காலம் 11-ஆம் நூற்றாண்டு என்பர்.

    வீரசோழியம் என்னும் இந்த நூலும் இதன் உரையும் தமிழ்நாட்டின் சரித்திரம் முதலியவற்றை ஆராய்வதற்கு ஓரளவு உதவி புரிகின்றன.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:45:58(இந்திய நேரம்)