தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-தொகுப்புரை

  • பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மை யானவை ஏதோ ஒரு சமயத்தோடு பின்னிப் பிணைந்திருப்பனவே எனலாம். சங்க காலத்து இலக்கியங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வியலைக் காட்டுவன. அதற்குப்பின் வந்த இலக்கியங்கள் சமயச் சார்புடையனவாகவே அமைந்துள்ளன. ஆயினும் சங்கத்திற்குப் பின்வந்த பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கும்போது  சமயங்களின் சுவடுகள் ஆழமாகப் பதிந்துள்ளமையை அறிந்து கொள்ளலாம். தம் கோட்பாடுகளைப் பரப்ப முனைந்து நின்ற சமயங்கள் அனைத்தும் தமிழையும் மேம்படுத்தின என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமயம் வளர்ந்தபோது தமிழும் வளர்ந்தது. தமிழ் மேம்பட்டபோது சமயங்களும் மேம்பட்டன. இலக்கியங்களும் இலக்கணங்களும் பெருகித் தமிழுக்கு வளம் சேர்த்தன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கன்று.

    பௌத்த சமயம் தன் சமயக் கோட்பாடுகளைப் பரப்பிய போது காப்பியங்களும் பிறநூல்களும் தோன்றின. பௌத்த சமயத்தின் சாரத்தையே வடித்துக் கொடுத்துள்ளார் சாத்தனார். மணிமேகலை அதனைப் பறைசாற்றி நிற்கிறது. பௌத்த சமயக் கருத்துகளை மட்டுமன்றி மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பல அறநெறிகளையும் பரப்பிய பெருமைக்குரியது பௌத்த சமயம். சான்றாக, கொல்லாமை, கள் உண்ணாமை, எல்லாவற்றுக்கும் மேலாகப் பசிப்பிணியைப் போக்கும் அறச்செயல், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கும் சீரிய செயல் ஆகியவற்றைக் கூறலாம். இவையனைத்தையும் விரிவாக இப்பாடத்தில் பார்த்தோம்.

    இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சங்ககாலத்தில் பல்வேறு சமயங்களும் தமிழகத்தில் இடம்பெற்றிருந்தன என்பதற்கு இலக்கியங்கள் சான்றாகின்றன. அவரவர் சமயக் கோட்பாடுகளை மக்களிடையே பரப்பினார்கள். ஆனால் அங்குச் சமயக் காழ்ப்பில்லை; சமயப் பொறையே காணப்பட்டது. சிலப்பதிகாரக் காப்பியம் இதற்குச் சிறந்த சான்று. பல்வேறு போக்கில் மணிமேகலைக் காப்பியம் சிறந்த காப்பியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆயினும் அரிய அறங்கள் பலவற்றை மக்களின் மேம்பாட்டிற்காகக் கூறிய சாத்தனார், சமயப்பற்றின் காரணமாகச் சமயக் காழ்ப்பிற்கு அவரை அறியாமலேயே மணிமேகலையில் வித்திடுகின்றார். இதுவே பின்னர் குண்டலகேசியாக ஒரு காப்பியம் உருவாகவும் அதற்கு எதிரான நீலகேசி தோன்றுவதற்கும் காரணமாகியது எனலாம்.

    குண்டலகேசியும்  பௌத்த சமயக் காப்பியம் என்றாலும் முழுமையாகக் கிடைக்காததால் அதன் பயன்பாட்டை நாம் கவனிக்க இயலவில்லை.

    வீரசோழியம் என்ற  இலக்கண நூல் இன்றைய நிலையில் வழக்கொழிந்து போயினும் அது தோன்றிய காலத்தில் சிறப்பாக இருந்திருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. அதனால்தான் உரையாசிரியர் பலராலும் அதன் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.

    பௌத்த சமயத் தமிழ் நூல்கள் சில அழிந்துபட்டன. அவற்றையும் இங்கு அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவையும் கிடைத்திருந்தால் பௌத்த சமயத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து கொண்டிருப்போம்.  அப்படி அமையாமல் போனது பௌத்த சமயத்திற்கும் தமிழுக்கும் ஏற்பட்ட இழப்பு எனலாம். ஆயினும் பௌத்த சமயம் ஒரு காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததையும் அது தமிழுக்கு ஆற்றிய தொண்டினையும் மறக்க இயலாது. காலத்தால் இனி அழிக்க முடியாத பெருமை உடையது என்றும் கூறலாம்.

    இந்திய மண்ணில் பிறந்து, தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்து வளமாக வாழ்ந்த இந்தச் சமயம் இங்கு வேரின்றிப் போனது வருத்தத்தைத் தரும் வரலாற்று நிகழ்ச்சிதான். ஆயினும் உலகின் வேறுபல நாடுகளில் தன் சுவடுகளைப் பதித்து இன்றும் வாழ்வது மகிழ்ச்சியைத் தருகிறது எனலாம்.

    பல்வேறு அரசியல் காரணங்களாலும் சாதி, சமயக் காரணங்களாலும் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பலரும் (பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள்) பௌத்த சமயத்தைப் பின்பற்றிய செய்தி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அம்பேத்கர் இதற்கு மூலகாரணமாக அமைந்தார். அதன் தொடர்ச்சியே மதமாற்றம் எனலாம். இக்கால கட்டத்தில் மேற்கூறப்பட்ட பிரிவினர் பௌத்த சமயத்தைத் தழுவுவது நடைமுறைச் செயலாக மலர்ந்துள்ளது.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    யாக்கை நிலையாமை பற்றி மணிமேகலை உதயகுமரனுக்கு உணர்த்துவது யாது?
    2.
    விழுத்துணையாக அமைவது எது? ஏன்?
    3.
    பௌத்தசமயக் கோட்பாடுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
    4.
    உரவோர் துறந்தவை என எவற்றைக் கூறுகிறார் அறவண அடிகள்?
    5.
    பசிப்பிணியின் கொடுமையை விளக்கவும்.
    6.
    மக்கள் தேவர் இரு சாரார்க்கும் ஒத்த முடிவினை உடைய அறம் எது?
புதுப்பிக்கபட்ட நாள் : 15-06-2018 16:17:14(இந்திய நேரம்)