தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கிறித்தவச் சிறுகதைப் படைப்புகள்

  • 2.3 கிறித்தவச் சிறுகதைப் படைப்புகள்

    புதினங்களைப் படைத்த கிறித்தவ அறிஞர்கள் சிறுகதைப் படைப்பிலும் பின் தங்கவில்லை. சிறந்த சிறுகதைகளைப் படைத்து, சிறுகதை வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். விவிலியத்தில் அமைந்த கதைகள் அவர்களுக்குப் பெருந்தூண்டுகோலாய் அமைந்தன. விவிலியத்தில் ஏராளமான கதைகள் உள்ளன. கிறித்து அருளிய உவமைக் கதைகள் சிறுகதைகள் பலவற்றிற்கு மூலமாக விளங்குகின்றன. ‘கெட்ட குமாரன் கதை’, ‘நல்ல சமாரியன் கதை’ போன்றவை இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. வீரமாமுனிவர் எழுதிய ‘பரமார்த்த குரு கதை’ முதல் தமிழ்ச் சிறுகதையாகக் கருதப்படுவதுண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இதழ்களின் வளர்ச்சியும் சிறுகதை வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

    • கிறித்தவச் சிறுகதைகள்

    கிறித்தவச் சிறுகதைப் படைப்புகளை டேவிட் சித்தையா மூன்று கட்டங்களாகப் பிரிக்கிறார். முதல் கட்டத்தில் (1940-60) சமயக் கருத்துக்கள் முதன்மை பெறுகின்றன. இரண்டாம் கட்டத்தில் (1961-70) சமூக ஏற்றத்தாழ்வு, தனி மனித மாற்றம் ஆகியன முதன்மை பெறுகின்றன. மூன்றாவது கட்டத்தில் (1971-91) மனித நேயம் முதன்மை பெறுகிறது; வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றிலும் வளர்ச்சி காணப்படுகிறது.

    • கிறித்தவம் பற்றிய சிறுகதைகள்

    சுமார் 600-க்கும் மேற்பட்ட கிறித்தவ எழுத்தாளர்களின் சிறுகதைகள் கிடைக்கின்றன. இவற்றுள் ஐந்தில் ஒரு பங்கு கிறித்தவம் பற்றியவை. இவற்றை இரண்டாகப் பகுக்கலாம்.

    1)
    கிறித்தவக் கோட்பாடுகளை உணர்த்தும் சிறுகதைகள்
    2)
    கிறித்தவத்திற்கு எதிராக உள்ள கிறித்தவர்கள், திருச்சபையில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றைக் கண்டிக்கும் வகையில் அமைந்த சிறுகதைகள்.

    • கிறித்தவச் சிறுகதை ஆசிரியர்கள்

    கிறித்தவச் சிறுகதைப் படைப்பாளர்களுள் இரணியல் கலைத்தோழன், இன்னாசி, கார்த்திகா ராஜ்குமார், செல்வி சினேகலதா, டேவிட் சித்தையா, பி.ஏ.தாஸ், ஆர்.ஏ.துரைஜீவன், பிரேம்குமார் தர்மராஜ், பிரசாத் ரிச்சர்ட், ஆர்.பிரசாத், ரதி அகஸ்டின், ஆர்.எஸ். ஜேக்கப், ஹெலன் ஞானப்பிரகாசம், ஸ்வீட்லின் பிரபாகர், பிளாரன்ஸ் வில்லியம், கோயில்வரம், ஹெர்பர்ட் சச்சிதானந்தம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    • கரு

    கிறித்தவச் சிறுகதைகள் இரக்கம், அன்பு, எளிமை முதலிய தனி மனிதப் பண்புகளை வற்புறுத்தும் வண்ணம் அமைந்துள்ளன; ஏழ்மை, வறுமை முதலிய சமுதாய அவலங்களையும், சாதி, பெண்ணடிமைத்தனம் முதலிய சமுதாயச் சிக்கல்களையும் இவை கையாண்டுள்ளன.

    2.3.1. ஏழ்மை

    அடிப்படை வாழ்வுக்குக்கூடப் போதுமான பணவசதி இல்லாதவர்கள் ஏழைகள். இவர்கள் அன்றாடம் துன்பங்களைச் சந்திக்கிறார்கள். இதனை எடுத்துக்காட்டுவதே பின்வரும் கதை.

    • ஒலிக்கவில்லை

    ‘சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லாமல் இருந்தது’ என்ற விவிலிய வசனமே 'ஒலிக்கவில்லை' என்ற கதையின் கரு. இதன் ஆசிரியர் ஆர்.எஸ்.ஜேக்கப்.

    முத்து கை வண்டித் தொழிலாளி; அவனது மனைவி பிச்சம்மாள். வீட்டு வேலை செய்பவள். தத்தம் வேலைகளை முடித்துவிட்டு, ஓர் அச்சக வராண்டாவில் தங்கி வந்தனர். பின்னர், குளக்கரையில் சாக்குப்பைகளைக் கொண்டு ஒரு குடில் அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு முதல் குழந்தை பிறக்கிறது. குளிர் தாங்க முடியாமல் அந்தக் குழந்தை இறந்து போகிறது. பிறகு, வீணாகக் கிடக்கும் செங்கற்களைப் பொறுக்கிச் சேர்த்து, சாலை ஓரத்தில் ஒரு மண் குடிசை அமைக்கின்றனர். சொந்த வீடு கட்டிய மகிழ்ச்சி நிலைக்கவில்லை. போக்குவரத்துத் துறையினர் புல்டவுசரை வைத்துக் குடிசையை அகற்றுகிறார்கள். அன்று கிறிஸ்துமஸ். பிச்சம்மாளுக்குப் பிரசவவலி தொடங்குகிறது. அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான் முத்து. மருத்துவமனையில் படுக்கை காலியாக இல்லை. மூன்று நாள் கழித்து வரும்படி கூறுகின்றனர். கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் உள்ளே நுழைகின்றனர். ‘சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லாதிருந்தது’ என்ற வசனத்தை அடிப்படையாகக் கொண்டு குருவானவர் செய்தி அளித்துக் கொண்டிருந்தார். இந்த வசனம் வீதி எங்கும் ஒலித்த போதும், பிச்சம்மாளின் காதில் வேத வசனம் ஒலிக்கவில்லை எனக் கதையை முடிக்கிறார் ஆர்.எஸ்.ஜேக்கப்.

    • விவிலியமும் நடைமுறையும்

    தினம் வேதம் படிக்கிறோமே தவிர அதன் உட்பொருளை உணர்வதில்லை. ஏசுவின் வாழ்க்கை காட்டும் பாதையில் மக்கள் செல்வதில்லை; அவருடைய எளிமை, அன்பு, நேயம், மன்னிக்கும் பாங்கு எதையும் கற்றுக் கொள்வதில்லை. வெறும் வார்த்தைகளால் ஆகிய வேதத்தை எந்தவித உணர்வுமின்றி இயந்திரகதியில் சடங்காகக் கேட்கும் பண்பு, எதார்த்தம் எவ்வளவு அர்த்தமற்றதாக அவலம் நிறைந்ததாக உள்ளது!

    • ஏழைகளின் நிலை

    கிறித்து பிறப்பின் போது, சத்திரத்தில் இடமில்லாமல் தவித்ததை விவிலியம் எடுத்துக் கூறுகிறது. எளியவரோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இறைவனின் பண்பினை இது காட்டுகிறது. மேலும், உண்பதற்கும் உடுத்துவதற்கும் வழியில்லாது அன்றாடம் துன்பப்படும் எளியவர்களின் அவல வாழ்க்கை, அண்டிப் பிழைப்பதற்குச் சாலை ஓரங்களை நாடும்பொழுது, அரசு அலுவலர்களால் ஆடு மாடுகளைப் போல் விரட்டப்படும் நிலை, குருவிக் கூண்டு போன்ற இவர்தம் குடிசைகளைப் பிய்த்து எறியும் நடப்புகள் ஆகியவற்றை இச் சிறுகதையில் எதார்த்தமாகப் படைத்துள்ளார் ஆசிரியர்.

    2.3.2 சொல்லும் செயலும்

    சொல்லுவது போல் செயல்படுவதுதான் பயனுள்ள வாழ்க்கையாகும். செயல் இல்லாத வெறும் வாய்ச்சொற்களால் பயன் ஏற்படப் போவதில்லை என்பதைப் பின்வரும் கதை உணர்த்துகிறது.

    • செருப்பும் செயலும்

    கோயில் பிச்சை என்பவனுக்கு ‘அணுகுண்டு பிரசங்கியார்’ என்று பெயர். இவர் ஒரு கிராமத்திற்குப் பிரசங்கம் பண்ண அழைக்கப்பட்டிருந்தார். அதற்காகப் பேருந்து ஒன்றில் ஏறுகிறார். இளைஞன் ஒருவனும் அவசர அவசரமாக ஓடிவந்து அதே பேருந்தில் ஏறுகிறான். அவன் ஒரு கட்டடத் தொழிலாளி. ஏறும் வேகத்தில் அவனது ஒரு செருப்பு பேருந்திலிருந்து தவறி விழுகிறது. பிரசங்கியார் ‘ஐயோ! செருப்பு! செருப்பு!’ எனப் பதறுகிறார். பேருந்து ஓடத்தொடங்கி விட்டது. அந்த இளைஞன் அவசர அவசரமாக அடுத்த செருப்பையும் கழற்றி எறிந்து விடுகிறான். ‘ஏன் தம்பி இப்படி செய்றீங்க’ என்று பிரசங்கியார் கேட்டார் ''எடுக்கிறவன் இரண்டையும் எடுத்துக் கொள்ளட்டும்'' என்றான் இளைஞன். பேருந்து தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. இந்தக் குணம் யாருக்கு வரும்?

    • இளைஞனும் பாட்டியும்

    கண்டக்டர் ஒரு பாட்டியிடம் எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்தார். பாட்டி டிக்கட்டுக்காகக் கொடுத்த பணத்தில் 25காசு குறைந்தது. பாட்டி பரிதாபமாகக் கையை விரித்தார். பாட்டியைச் சிலர் கிண்டலாக ஏசினர். பிரசங்கியாரின் பக்கத்திலிருந்த அந்த இளைஞன் எழுந்து பாட்டிக்குத் தேவையான காசைக் கொடுத்தான். ஆரவாரமின்றி இவன் செய்வது மானுடத்தின் பெருமையைப் பேசுகிறதல்லவா?

    • இளைஞனும் குழந்தையும்

    பேருந்து தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. ஒரு குழந்தை வாந்தி எடுக்கத் துடிக்கிறது. கண்டித்து அடக்குகிறாள் அக்குழந்தையின் தாய். தன் துண்டைக் கொடுத்து உதவுகிறான் அந்த இளைஞன். எத்தகைய உதவி என்றாலும் இயல்பாகச் செய்யும் அந்த இளைஞனின் பண்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பிரசங்கியார் இறங்குவதற்கு அடுத்த நிறுத்தத்தில் அவன் இறங்க வேண்டும். இன்னொருவருக்கு இடம் கொடுப்பதற்காக பிரசங்கியாரோடு இறங்கிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான் இளைஞன் மிக இயல்பாக.

    • இளைஞனும் பிரசங்கியாரும்

    துண்டும் செருப்பும் இல்லாமல் நடந்து செல்லும் அந்த இளைஞனின் தோற்றம் பிரசங்கியாருக்குத் தேவதூதனாகத் தெரிகிறது. பிரசங்கம் செய்யாமலேயே ஊருக்குத் திரும்புகிறார் பிரசங்கியார். கட்டடத் தொழிலாளியான அவன் செய்கைகளை நினைத்துப் பார்க்கிறார்.

    • தேவையறிந்து உதவுக

    தேவதூதன் என்பவன் யார்? சிறியதோ பெரியதோ எதுவாக இருந்தாலும் யாருக்கு எப்போது தேவையோ அப்போது இயல்பாக முன்வந்து உதவுகிறவனே தேவதூதன்.

    அன்பும் அருளும் மனித நேயமும் உடையவன்தானே
    தேவதூதனாக இருக்க முடியும்

    செயலில் மனித நேயத்தைக் காட்டும் இவன் செயல்களைக் கண்டு நெகிழ்ந்து போகிறார் பிரசங்கியார். வெறும் பேச்சால் மட்டும் பயனில்லை என்பதை உணர்கிறார் பிரசங்கியார்.


    2.3.3 எளிமை

    ஆடம்பரத்தையும் அலங்காரத்தையும் இறைவன் விரும்புவதில்லை. எளிமையை இறைவன் விரும்புவார் என்பதைப் பின்வரும் கதை உணர்த்துகிறது.

    • குடில்

    கார்த்திகா ராஜ்குமாரின் ‘குடில்’ என்னும் சிறுகதை ‘மனிதம்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ‘குடில்’ என்பது கிறித்தவர்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் காலங்களில் வைக்கப்படுவதாகும். கிறிஸ்து பிறப்பின் காட்சியை வீடுகளில் நவராத்திரிக் கொலுவைப் போல அலங்கரித்து வைப்பார்கள். பெரும்பாலும் குடில் அமைப்பதில் சிறுவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர்.

    இக்கதையில் வரும் சிறுவன் பெயர் ஜோ. அவனுக்கு ஒரு தங்கை. பெயர் லீனி. ஜோவிற்குக் குடில் வைக்க ஆசை. அதற்குத் தேவையான வண்ண விளக்குகள் எல்லாம் வாங்க வேண்டும். எப்படியாவது 50 ரூபாய் சேர்க்க வேண்டும். லீனி தான் விரும்பி உண்ணும் இனிப்புப் பண்டங்களைத் தியாகம் செய்து, காசு சேர்த்துக் கொடுத்தாள். தேவையான பணமும் சேர்ந்து விட்டது. ஜோவிற்கு ஒரே மகிழ்ச்சி. ஆலயப் போதகர் பெயர் தோமை. ஜோவுடன் நன்கு பழகுவார். இவன் பூசை நேரங்களில் அவருக்குத் துணை செய்வான். ஆலயத்தில் ‘குடில் அமைத்தல்’ பற்றிப் பேச்சு வந்தது. அப்பொழுது போதகர், 'குடில் விஷயத்தில் நாம் தப்பு செய்து கொண்டிருக்கிறோம்’ என்றார். ஜோவிற்கு ஒன்றும் புரியவில்லை; போதகர் விளக்கினார். இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். எளிமையான கோலத்தை விரும்பி ஏற்றுக் கொண்டார். அவரைக் கந்தைத் துணியில் சுற்றி வைத்தார்கள். ஆனால் நாம் அவர் பிறந்த கோலத்தை அலங்காரப்படுத்தி வைக்கிறோம். அலங்காரமான இடத்தில் இயேசு பிறப்பாரா? போதகர் சந்தேகத்தை எழுப்பினார். போதகர் சொன்னது ஜோவிற்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. யோசிக்கவும் செய்தான். ஆனாலும், குடில் அமைக்கும் எண்ணத்தை அவன் விட்டுவிடவில்லை.

    • ராபியும் ஜோவும்

    ஜோவின் நண்பன் பெயர் ‘ராபி’. குடில் அமைப்பதற்கு அவனைத்தான் நம்பியிருந்தான் ஜோ. ராபி நாலைந்து நாட்களாகவே பூசைக்கு வரவில்லை. ராபியின் வீடு கொஞ்சம் தூரம் தள்ளி இருந்தது. ராபி வீட்டிற்குப் புறப்பட்டான் ஜோ. சேர்த்து வைத்த பணத்தையும் எடுத்துக் கொண்டான். வரும்பொழுது ‘வண்ண ஒளிவிளக்குகள்’ எல்லாம் வாங்கி வந்து விட வேண்டும். ராபியையும் உடன் அழைத்து வரவேண்டும் என்பது ஜோவின் திட்டம்.

    • ராபியின் துன்பம்

    ராபியின் வீட்டில் நிலைமை எதிர்மாறாக இருந்தது. ராபி அழுது கொண்டிருந்தான். அவன் அம்மாவுக்கு உடல் நலமில்லை. அப்பா ஊரில் இல்லை. டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். மருந்து வாங்க அவனிடம் பணம் இல்லை.

    • ஜோவின் இரக்கம்

    ஜோ ஒரு நிமிடம் ராபியையே பார்த்துக் கொண்டிருந்தான். ஜோ தான் குடிலுக்கு ஆசையாய்ச் சேர்த்த பணத்தை அவனிடம் கொடுக்கிறான். போய் மருந்து வாங்கி வரச் சொல்லுகிறான். அடுத்தநாள் பூசை முடிந்தவுடன், ஜோவிடம் குடில் அமைப்பது முடிந்து விட்டதா? என போதகர் கேட்டார். ஜோவால் நடந்ததைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஜோவைப் பாராட்டுகிறார் போதகர். அவன் செய்தது சரிதான் என்று கூறுகிறார். தன் அறைக்குச் சென்று ஓர் அழகான சின்ன குடில் படத்தையும் ஜோவிடம் கொடுக்கிறார். 'நிச்சயமாக உங்க வீட்டில்தான் இயேசு பிறக்கப் போறார்; ஏன் என்றால், அவருக்குப் பிடித்தமானதைச் செய்தது நீதான்' என்று கூறி அவனை அனுப்பி வைக்கிறார். எப்பொழுதும் இல்லாத மகிழ்வு அந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்தது எனக் கதையை முடிக்கிறார் ஆசிரியர்.

    2.3.4. குழந்தைத் தொழிலாளர்கள்

    குடும்ப வறுமை காரணமாக இளம் வயதிலேயே வேலைக்குச் செல்லும் சிறுவர் சிறுமியரைக் காண்கிறோம். பள்ளிக்குச் செல்ல வேண்டிய பருவத்தில் தொழிலகங்களில் இவர்கள் வாடுகின்றனர். அத்தகைய குழந்தைகளைப் பற்றிய கதை இது;

    • பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது

    பூங்காக்களில் காணப்படும் ‘பூக்களைப் பறிக்காதீர்’ என்ற அறிவிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நம்மில் பலரும் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆயினும், அது நம் மனத்தில் என்ன உணர்வை ஏற்படுத்தியது? பெரும்பான்மையும் ஒன்றுமில்லை என்பதுதான் விடையாக இருக்கும். ஏனென்றால் அது ஒரு கட்டளையாக இருப்பதால் நம் உள்ளத்தை ஈர்ப்பதில்லை; அதனால், எந்தவித பாதிப்பும் உண்டாவதில்லை, ஆனால் அதுவே பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது என்ற கதைத் தலைப்பைப் பார்க்கும் போது அது நம் கவனத்தை ஈர்க்கிறதைத் தவிர்க்க முடிவதில்லை. அது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. மொட்டு மலர்ந்து காயாகிக் கனிந்து விடுவதுதான் அதன் முழுவாழ்வாகும். மலரைப் பறிப்பது அதன் வாழ்நாளைக் குறைப்பது போன்றதுதான். அதனால்தான் ‘பூக்களைப் பறிப்பது வருந்தத் தக்கது’ என்ற தலைப்பு நம்மைப் பாதிக்கிறது; சிந்திக்கத் தூண்டுகிறது. மலரின் வாழ்வு இடையில் முடிவதே வருந்தத் தக்கது எனின் இளம் வயதில் ஒரு சிறுவனின் வாழ்வு பறிபோவது பெரும் துயரத்தை அளிக்கும். இளம் வயதில் வாழ்வு பறிபோகும் சிறுவன் ஒருவனின் வாழ்க்கையே இந்தக் கதை.

    • எபியின் ஆசிரியர்

    எபி பத்து வயதுச் சிறுவன். புத்திசாலி, படிப்பில் கெட்டிக்காரன். இவாஞ்சலின் ஆசிரியருக்கு அவனை மிகவும் பிடிக்கும். எபிக்கு தன் ஆசிரியர் மேல் அதிக மரியாதை உண்டு.

    • எபியின் கல்வி

    எபியின் அப்பா ஒரு கட்டடத் தொழிலாளி. ஒரு நாள் அடுக்குக் கட்டடம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து விடுகிறார். கை, கால் எலும்புகள் முறிந்து போகின்றன. அப்பா படுத்த படுக்கையாகிறார். குடும்பமும் படுத்து விடுகிறது. எபியின் படிப்பு நின்று போகிறது. அம்மாவும் இவாஞ்சலின் ஆசிரியரும் எபியை ஆறுதல் படுத்துகின்றனர். 'நீதான் பெரிய பையன்; பொறுப்பாக நடந்துக்க! அழுதா எப்படி?' -அவனுக்கு அறிவுரை கூறுகின்றனர்.

    குழந்தைத் தொழிலாளி எபி

    குடும்ப பாரம் அவன் தலை மீது விழுகிறது. வேலைக்குப் போகத் தீர்மானிக்கிறான். ஒப்பந்தக்காரரின் தோட்டத்தில் வேலைக்குச் சேர்கிறான். குடும்பச் சுமை திணிக்கப்படும் ஒரு குழந்தைத் தொழிலாளி ஆகிறான் எபி. அம்மாவின் அரவணைப்பு, ஆசிரியரின் அன்பு ஆகியவை இருந்தாலும் ஏழைகளின் வாழ்விற்கு இதுதான் முடிவு என்பதைக் கார்த்திகா ராஜ்குமார் நன்கு எடுத்துக்காட்டியுள்ளார்,

    மலரும் பருவத்திலேயே தம் வாழ்க்கையை இழந்து தவிக்கும் எத்தனையோ குழந்தைத் தொழிலாளர்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் இக்கதையின் ஆசிரியர் கார்த்திகா ராஜ்குமார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 16:15:21(இந்திய நேரம்)