தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கிறித்தவப் புதினப் படைப்புகள்

  • 2.2. கிறித்தவப் புதினப் படைப்புகள்

    கிறித்தவர்கள் உரைநடை வளர்ச்சிக்குத் துணைபுரிந்ததோடு, உரைநடையில் இலக்கியங்கள் தோன்றவும் வழிவகுத்தனர். கதை இலக்கியங்களில் புராண மாந்தர்களும் மன்னர்களும் கதைத் தலைவர்களாகப் படைக்கப்படுவது பெருவழக்கமாக இருந்தது. இச்சூழலில் கிறித்தவர்கள் தமிழ்ப் புதின இலக்கியத்திற்குத் தோற்றுவாய் செய்தனர்.

    • புதினம்

    புதினம் உரைநடையில் அமைந்த கதை வடிவமாகும். புராணங்கள், காப்பியங்கள் போன்றவற்றிலிருந்து புதினம் வேறுபட்டது. புதினம் ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் தமிழில் எழுந்தது. அதிகப் புனைவுகள் இல்லாத நடப்பியல் தன்மை கொண்டது. பொதுவாக, சமகாலச் சிக்கல்களைக் கருவாகக் கொண்டது. வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டும் புதினங்கள் படைக்கப்பட்டுள்ளன. கதை மாந்தர், கதைப்பின்னல், பின்னணி, உத்தி ஆகியன புதின உருவாக்கத்தில் இன்றியமையாதவை. கிறித்தவர்கள் பலர் புதினங்களை எழுதி, தமிழ்ப் புதின வளர்ச்சிக்குத் துணைசெய்துள்ளனர்.

    • புதினப் படைப்பாளர்கள்

    நீதிபதி வேதநாயகம் பிள்ளை, அருமைநாயகம், ஜெகசிற்பியன், டி.செல்வராஜ், ஹெப்சிபா ஜேசுதாசன், டேனியல், டேவிட் சித்தையா, ஆர்.எஸ். ஜேக்கப், ஐசக் அருமைராஜன், பி.ஏ.தாஸ், கார்த்திகா ராஜ்குமார், மோசஸ் பொன்னையா, தமிழவன், பாமா, விடிவெள்ளி போன்றோர் கிறித்தவப் புதினப் படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆயினும் இவர்தம் படைப்புகள் அனைத்தையும் கிறித்தவப் புதினங்கள் என்ற வரையறைக்குள் அடக்க இயலாது. மாதவய்யா, க.நா.சுப்பிரமணியம் போன்றோர் கிறித்தவர் அல்லர்; உள்ளடக்கம் நோக்கி இவர்தம் புதினங்கள் கிறித்தவப் புதினங்கள் என்றே கருதப்படுகின்றன. சாமுவேல் பவுல், சரோஜினி பாக்கியமுத்து போன்றோர் கிறித்தவ நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர். கிறித்தவப் பின்னணி, கிறித்தவப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு எண்ணற்ற புதினங்கள் தமிழில் எழுந்துள்ளன.

    • புதினப் படைப்புகள்

    கிறித்தவர்கள் படைத்துள்ள புதினங்கள் பெரும்பாலும் நடப்பியல் சார்ந்தவை. சமகாலச் சமுதாயச் சிக்கல்களை மையமிட்டு எழுதப்பட்டவை. வர்க்க-சாதிய-பாலியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தைக் காண, கிறித்தவப் படைப்பாளர்கள் முற்பட்டனர். கிறித்தவச் சமுதாயத்தில் காணப்படும் குறைபாடுகளை இடித்துரைக்கவும் அவர்கள் தவறவில்லை. மன்னிப்பு, இரக்கம், எளிமை, அன்பு முதலிய தனி மனித அறங்களை வற்புறுத்தும் புதினங்களையும் கிறித்தவர்கள் படைத்துள்ளனர்.

    பெண் மேம்பாடு, வர்க்கப் போராட்டம், சாதிய ஏற்றத்தாழ்வு, தலைமுறை மாற்றம் ஆகியன கிறித்தவப் புதினப் படைப்பாளர்களால் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. சில புதினங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு இங்கு விளக்கப்படுகின்றன.

    2.2.1 பெண் மேம்பாடு

    • பிரதாப முதலியார் சரித்திரம்

    பெண்களுக்கு ஏற்றம் தருவதில் கிறித்தவப் புதினங்கள் முன் நிற்கின்றன. தமிழில் தோன்றிய முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் பெண்ணுக்கு ஏற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது. புதின ஆசிரியரான நீதிபதி வேதநாயகம் பிள்ளை இப் புதினத்தில் இரண்டு இலட்சியப் பெண்களைப் படைத்துள்ளார். ஒருவர் பிரதாப முதலியாரின் தாயார்-சுந்தர அண்ணி, இன்னொருவர் பிரதாப முதலியாரின் மனைவி - ஞானாம்பாள்.

    ஞானாம்பாள் கல்வியும் அழகும் நிரம்பியவர். காடு சென்ற கணவன் விபத்தில் சிக்குகிறான். ஞானாம்பாள் அவனைத் தேடிச் செல்கிறாள். ஆண் வேடம் போட்டுக் கொண்டு ஓர் ஊரை அடைகிறாள். எதிர்பாராத விதமாக அவளுக்கு அரசுப் பொறுப்பு கிட்டுகிறது. ஆண் வேடத்தில் ஆட்சி நடத்துகிறாள். குற்றவாளியாகத் தன் முன் நிறுத்தப்படும் கணவனைப் பாதுகாக்கிறாள். நாட்டில் பல சீர்திருத்தங்களையும் செய்கிறாள். பின்னர் உண்மையை எடுத்துக்கூறி அந்நாட்டின் மகுடத்தையும் ஏற்கிறாள். பெண்ணின் அறிவுத் திறனும், ஆட்சித்திறனும் வேதநாயகம் பிள்ளையால் சிறப்பாக இப்புதினத்தில் எடுத்துரைக்கப்படுகின்றன.

    வேதநாயகம் படைத்த இன்னொரு நாவலான சுகுணசுந்தரி புதினத்தில் பெண் உரிமைகள் வற்புறுத்தப்படுகின்றன. இப்புதினத்தில் தலைவி நாடு கடத்தப்படுகிறாள். அவள் கன்னி மாடம் ஒன்றில் அடைக்கலம் புகுகிறாள். அங்குப் பெண் கல்விக்கு ஆதரவாகப் பேசுகிறாள். வரதட்சணை, குழந்தைத் திருமணம், கைம்மை போன்றவற்றை எதிர்த்துப் பேசுகிறாள்.  இவை அக்காலக் கிறித்தவர்கள் வற்புறுத்திய நெறிகள் ஆகும். இங்ஙனம், கிறித்தவப் புதினங்கள் பெண் மேம்பாட்டுச் சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன.

    2.2.2. வர்க்கப் போராட்டம்

    பணக்கார வர்க்கத்தினரின் சுரண்டலுக்கும் கொடுமைக்கும் ஆளாகும் ஏழைகளின் அவலமும், எதிர்ப்பும், போராட்டமும் கிறித்தவப் புதினப் படைப்பாளர்களால் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. டி.செல்வராஜ், ஐசக் அருமைராஜன், டேனியல், ஆர்.எஸ்.ஜேக்கப் ஆகியோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். ஐசக் அருமைராஜனின் கல்லறைகள் மற்றும் டி.செல்வராஜின் மலரும் சருகும் ஆகிய புதினங்கள் இங்கு விளக்கப்படுகின்றன.

    • கல்லறைகள்

    பணக்கார வர்க்கத்தினரின் வெறியாட்டம், அதற்குத் துணை போகும் காவல்துறை, ஏழைகள் படும் துன்பம் முதலியவற்றைக் குமரி மாவட்ட வட்டாரத் தன்மையோடு இப்புதினம் சித்திரிக்கிறது.

    இக் கதையில் வரும் செல்வமணி ஓர் ஏழை; சாலை ஓரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சிற்றுண்டிக் கடை வைத்துப் பிழைப்பு நடத்துபவர். இவருக்கு இரண்டு பெண்மக்கள். தேவசகாயம் என்பவன் கிழங்குத் தோட்ட முதலாளி; தொழிலாளர்களைத் துன்புறுத்துபவன். கிழங்கு பிடுங்குவோர் சங்கத்தின் தலைவனான சங்கரன், செல்வமணி குடும்பத்துக்கு ஆதரவு தருகிறார். உரிய கூலி கேட்டு நிகழ்ந்த போராட்டத்தில் சங்கரன் சிறையில் அடைக்கப்படுகின்றார். செல்வமணியின் மகள்களைத் தம் ஆசைக்கு இணங்க வைக்க தேவசகாயம் முயல்கிறான். அதில் ஏற்பட்ட தோல்வியால் செல்வமணியைப் பழிவாங்க எண்ணுகிறான். செல்வமணியைத் தேவசகாயத்தின் ஆட்கள் தாக்குகின்றனர். செல்வமணியின் சிற்றுண்டிச்சாலை இடித்துத் தள்ளப்படுகிறது. குடும்பம் நடுத்தெருவிற்கு வருகிறது. அந்த ஊர் பங்குத் தந்தை (Parish Priest) அவர்களுக்கு ஆதரவு தருகிறார். செல்வமணி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

    இதற்கிடையே தேவசகாயத்தின் மகன் செல்வமணியின் மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். இதைத் தேவசகாயத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. செல்வமணியின் இரண்டு பெண்களையும் குடிசையோடு எரித்து விடுகிறான். குடிசைகள் எரிந்த இடத்தில் இருவருக்கும் கல்லறைகள் எழுப்பப்படுகின்றன. குடிசைகள் மட்டுமா எரிக்கப்படுகின்றன? மானுடமே எரிக்கப்படுகிறதல்லவா? கல்லறைகள் மனித நேயத்தைப் புதைத்து எழுப்பப்பட்டன என்பதை நினைக்கும் பொழுது மானுடம் எப்போது வெல்லும் என்ற வினாவை உள்ளத்தில் எழுப்பி அவலத்தை நிரப்புகிறது. இறுதியில் மருத்துவ மனையிலிருந்து திரும்ப வந்த செல்வமணி தம் மக்களின் பரிதாப முடிவைக் கண்டு பயித்தியமாய் அலறுகிறார்.

    முதலாளி வர்க்கம் ஏழைகளுக்குக் கொடுக்கும் இன்னல்களையும், ஏழைகள் மானத்தோடு வாழ முடியாத நிலையினையும் இக்கதை எடுத்துக்காட்டுகிறது.

    • மலரும் சருகும்

    டி.செல்வராஜின் தேனீர், மலரும் சருகும் முதலிய புதினங்களில் வர்க்கப் போராட்டம் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. இவரது தேனீர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இன்னல்கள் பற்றியது.

    இவரது மலரும் சருகும் புதினம், வர்க்கப் போராட்டத்தையும், சமுதாய மாற்றத்தையும் மையமாகக் கொண்டது. இப்புதினத்தில் மூன்று தலைமுறைகள் அடங்கியுள்ளன. பழைய தலைமுறையைச் சேர்ந்தவன் மாடசாமி குடும்பன்; மதம் மாறிய அவன் மகன் ஈசாக்கு, மத நம்பிக்கை மிகுந்த அவன் மனைவி பூரணம், புதிய தலைமுறையைச் சேர்ந்த ஈசாக்கின் மகன் மோசே.

    மோசே பணம் படைத்தவர்களுக்கு எதிராகப் போராட்டக் குரல் எழுப்புகிறான். தன் தந்தை வாங்கிய கடனுக்காகத் தன் நிலத்தைக் காந்திமதிநாதம் பிள்ளையிடம் இழந்து, அந்த நிலத்திலேயே கூலிக்கு வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். விவசாயச் சங்கத்தில் சேர்ந்து காந்திமதிநாதம் பிள்ளைக்கு எதிராகப் போராடிச் சிறைக்குச் செல்கிறான். எத்தகைய கொடுமையிது!

    கதையின் உச்சக்கட்டமாய் விவசாயப் புரட்சி எழுகிறது. ராணுவ வீரன் ரங்கன் தலைமை ஏற்கிறான். காவல்துறை சிறைப்படுத்துகிறது. காவல் துறை வாகனத்திற்குப் பின்னால் மாடசாமி குழந்தையோடு ஓடுகிறான். அடிபட்டுப் பிணமாகச் சாய்கிறான். அவனது மார்பில் கிடந்த குழந்தை துள்ளுகிறது. மாடசாமி சருகாகி உதிரும்போது, குழந்தை மொட்டாக உயிர்க்கிறது. தலைமுறைகள் உதிரும்போது புதிய தலைமுறைகள் எழுவதை அற்புதமான புதினமாக்கியுள்ளார் டி.செல்வராஜ். எந்த ஓர் இயக்கமும் - மனித மேம்பாட்டுக்காக இயங்கும்போது முற்றுமாக அழிந்துபடுவதில்லை. மாறாகப் புதிய எழுச்சியோடு போராட்டம் தொடர்கிறது. தொடரும் என்ற நம்பிக்கைத் தளிரைத் தருவது தான் ‘மார்பில் கிடந்த குழந்தை துள்ளுகிறது’ என்பது அளிக்கும் அருமையான செய்தி.

    ஐசக் அருமைராஜின் கீறல்கள் புதினமும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. சமூகக் கீறல்களைக் கொத்திச் சீர்படுத்த முடியாது; இடித்துவிட்டுப் புதிதாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்துகிறார் ஆசிரியர். மேலும் வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக மதமும் போராட்டத்தில் குதிக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறது இப் புதினம்.

     

    2.2.3 சாதிய ஏற்றத் தாழ்வு

    இந்திய சமுதாயத்தில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வும் குறிப்பிடத்தக்க சிக்கலாகக் கிறித்தவப் புதினப் படைப்புகளில் எடுத்தாளப்பட்டுள்ளது. சாதி, பிறப்பினடிப்படையில் மக்களைப் பாகுபடுத்துகிறது. அடிப்படை மனித உரிமைகளை மறுப்பதோடு, மனிதர்கள் ஒதுக்கப்படுவதற்கும் இழிவுபடுத்தப்படுவதற்கும் வழி வகுக்கிறது. மனமொத்த ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்குப் பெருந்தடையாகச் சாதி அமைவதைப் பெரும்பாலான புதினங்கள் சிக்கலாக எடுத்துக் கொள்கின்றன. டேவிட் சித்தையாவின் கல்லறைப்பூக்கள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

    • கல்லறைப்பூக்கள்

    இன்றைய கிறித்தவரிடையே காணப்படும் சாதிப் பாகுபாட்டை இப்புதினம் காட்டுகிறது. சாதிய ஏற்றத் தாழ்வை அகற்றும் நோக்கில் இப்புதினம் படைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் காதலிப்பதால் ஏற்படும் சிக்கல் ஒரு வகை, கிறித்தவர்களுக்குள்ளேயே சாதி வேறுபாடு காரணமாகக் காதலில் சிக்கல் ஏற்படுகிறது. இதுவே கல்லறைப் பூக்களின் கதை.

    • கதை

    ஆரோக்கியசாமி செருப்புத் தைக்கும் தொழிலாளி. இவர் மகள் பிரமிளா. இவளைத் தேவநேசம் பிள்ளையின் தங்கை மகன் தயானந்தன் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். அருளப்பன் என்பவன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். நற்குணங்கள் நிரம்பியவன். இவனைப் பொன்னையா நாடாரின் மகள் கிருபா நேசிக்கிறாள். கீழ்க்குலத்தைச் சேர்ந்த ஒருவரின் வளர்ப்பு மகன் செல்லதுரையும் தேவநேசம் பிள்ளையின் மகள் நிர்மலாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். சாதி இவர்கள் காதலைப் பிரிக்கிறது. இவர்களது காதல் கல்லறைப் பூக்களாக மலர்கிறது.

    சாதியின் ஆணி வேர்கள் சமயங்களின் ஆணிவேரோடு பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றுள் ஒன்றை அழித்தால் மற்றொன்று அழிந்து விடுமோ என்ற அச்சம் ஆதிக்க வாதிகளுக்கு இருக்கிறது. எழுதப்படாத இப்படிப்பட்ட விலக்குகள் மனித மனங்களைச் சிதைக்கின்றன. மனித உணர்வுகளை மிதிக்கின்றன. ஒரே சமயத்திற்குள் காதல் மறுக்கப்படுகிறது. காதலர்கள் அடிக்கப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் காதல் இதயங்களே கல்லறைப் பூக்கள்.

    இப்புதினத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்த செல்லதுரை பின்வருமாறு குரல் எழுப்புகிறான். ''சாப்பாட்டுக்காக நாங்கள் மதம் மாறவில்லை-சம உரிமைகளுக்காகத்தான்.... அதை நீங்கள் எங்களுக்குத் தராவிட்டால் நாங்கள் மறுபடியும் தாய் மதத்திற்குத் திரும்பிப் போய்விட மாட்டோம். உயிர்த்துடிப்போடு இருக்க வேண்டிய முழக்கம் - சமரம் (போர்) தொடங்குவோம்! - சமத்துவத்திற்கான சமரம். சம நீதிக்கான, சம உரிமைக்கான சமரம். . . ! ஏனெனில், ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகப் போராடுகிற இறைவன் யார் என்றும், ஓடாக உழைத்துக் களைத்தவர்களுக்கு இளைப்பாறுதல் தருகிற மனிதர் யார் என்றும், அந்தச் சமயம்தான் எங்களுக்கு இன்றைக்கு இனம் காட்டியிருக்கிறது.''

    மனித நேயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, மதமும் சாதியும் மனிதர்களைப் பிரிக்குமானால், கிறித்தவ நெறிகளே அவற்றைக் களைய வேண்டும் என்பதே இப்புதினத்தின் செய்தியாகும்.

     

    2.2.4 மாறி வரும் சமுதாயப் போக்குகள்

    கிறித்தவம் சமுதாய மாற்றத்தை வரவேற்கிறது. மாறி வரும் சமுதாயப் போக்குகள் குடும்ப உறவுகளிலும் மதிப்புகளிலும் ஏற்படுத்தும் மாற்றங்களைக் கிறித்தவப் புதினங்கள் பதிவு செய்துள்ளன. இதற்கு ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

    • புத்தம் வீடு

    ‘புத்தம் வீடு’ வட்டார வழக்குப் புதினமாகும். இப்புதினம் மாறிவரும் சமுதாயத்தின் போக்குகளை ஒரு குடும்பத்தின் கதையாகச் சொல்கிறது. பனைவிளை திருவிதாங்கூர் பகுதியிலுள்ள ஒரு கிராமம். இக் கிராமத்திலுள்ள புத்தம் வீடு பனையேறிகளுக்கும் ஆண்டையான கண்ணப்பச்சி குடும்பத்திற்கும் நிகழும் போராட்டமே இப்புதினமாகும்.

    • கதை

    பனைவிளை கிராமத்தில் ஓடு போட்ட வீடு கண்ணப்பச்சியின் புத்தம் வீடு ஒன்றுதான். கண்ணப்பச்சிக்கு இரண்டு மகன்கள். இருவரும் பொறுப்பற்றவர்கள்; குடிகாரர்கள்; குலப்பெருமை பேசுபவர்கள். மூத்தவன் பொன்னுமுத்துவுக்கு ஒரு மகள்; அவள் பெயர் லிசி. இளைய மகன் பொன்னுதம்பிக்கும் ஒரு மகள்; அவள் பெயர் லில்லி. புத்தம் வீடு நொடித்துப் போனபோதும் மாதா கோவிலில் அவர்களுக்கு மரியாதை குறையவில்லை.

    லில்லி பருவம் அடைந்ததும் வீட்டில் அடைக்கப்படுகிறாள்; அதிகக் கட்டுப்பாடுகள்; பெண்கள் அதிகம் படிக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குப் போகலாம். அவ்வளவுதான். பனையேறி குடும்பத்திலிருந்து மருத்துவரான ஒருவருக்கு லில்லியை மணம் முடித்து வைக்கிறார்கள். புத்தம் வீட்டுக்குப் பனையேறியாக வந்த அன்பையன் என்பவரின் மகன் தங்கராசுவை லிசி நேசிக்கிறாள் தங்கராசு அவளுடன் ஐந்தாவது வகுப்பு வரை படித்தவன்.

    கண்ணப்பச்சியின் ஆண்மக்களுக்குள் பகை ஏற்படுகிறது. தங்கராசுவின் பனை வீசும் அரிவாளை எடுத்துத் தன் தம்பியைக் கொலை செய்கிறான் அண்ணன். கொலைப்பழி தங்கராசு மீது விழுகிறது. தங்கராசு இந்தக் கொலையைச் செய்திருக்க மாட்டான் என லிசி நம்புகிறாள். ஒரு நாள் லிசியின் தந்தை, தன் தம்பியைக் கொன்றது நான்தான் என்று கூறிவிட்டு இறந்து போகிறார். இது வெளியே தெரிந்தால் குடும்பப் பெயருக்குக் கேடு எனப் புத்தம் வீட்டார் மறைக்கப் பார்க்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்படாததால், தங்கராசு விடுதலை செய்யப்படுகிறான். நடைமுறை வாழ்வின் மாற்றங்களைப் புரிந்து கொண்ட கண்ணப்பச்சி, லிசி-தங்கராசு திருமணத்திற்குச் சம்மதிக்கிறார். திருமணம் நடைபெறுகிறது.

    இக்கதையில் மூன்று தலைமுறைகள். கண்ணப்பச்சி - மகன்கள் - பேத்திகள். தலைமுறை மாறும்போது நடைமுறை மாறுகிறது; குலப்பெருமைகள் மாறுகின்றன. புத்தம்வீடு படிப்படியாகத் தன் நிலையிலிருந்து இறங்குவதை ஹெப்சிபா சிறப்பாகப் படைத்துள்ளார். பனையேறிகளின் வாழ்க்கை,  பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடு, பொருளாதாரப் பற்றாக்குறை, கூட்டுக்குடும்பம் தொடர்பான செய்திகளையும் இப்புதினம் பேசுகிறது.

     

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    தற்காலத் தமிழ் உரைநடையின் முன்னோடிகள் சிலரைக் குறிப்பிடுக.

    2.

    பெண் மேம்பாட்டுக்குக் கிறித்தவப் புதினங்களின் பங்களிப்பினை விளக்குக.

    3.

    வர்க்கப் போராட்டத்தைக் கிறித்தவப் புதின ஆசிரியர்கள் எங்ஙனம் எடுத்துக் காட்டியுள்ளனர்?

    4.

    கிறித்தவத்தில் காணப்படும் சாதிப் பாகுபாடு ‘கல்லறைப்பூக்கள்’ புதினத்தில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது?

    5.

    ‘புத்தம் வீடு’ யார் எழுதியது? இப்புதினம் எதை மையப்படுத்துகிறது?

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 14:42:42(இந்திய நேரம்)