தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சமயக் கருத்துகளும் சடங்குகளும்

  • 4.4 சமயக்கருத்துகளும் சடங்குகளும்

    இறைவனின் தனித்தன்மை, கலிமா வேதநூலில் கூறப்படும் மெய்ஞ்ஞானம் ஆகியவற்றை மிகுராசு மாலை குறிப்பிடுகின்றது. (கலிமா = இஸ்லாம் சமய மூலக்கொள்கை) தொழுகை, நோன்பு ஆகிய சடங்குகளைப் பற்றியும் கூறுகின்றது.

    4.4.1 எல்லாம் வல்ல இறைவன்

    மிகுராச மாலையில் இஸ்லாம் சமயக் கருத்துகள் மிக விரிவாகவே அமைந்துள்ளன. இறைவன் அல்லாஹ் என்ற அறபு மொழிச் சொல்லால் குறிக்கப்படுகிறான். இச்சொல் ஆண், பெண் என்ற பால் சுட்டாத பொதுச் சொல்லாகும். இதனை,

    பெண்ணே டாணல்லா திருக்கும் நாயன் (செய். - 128)

    எனவரும் செய்யுளடி காட்டுகின்றது. இறைவன் தனித்தவன்; இணைதுணை இல்லாதவன்; அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெற்றெடுக்கப் படவுமில்லை. அரூபி என இஸ்லாமிய இறையியல்புத் தத்துவத்தை இது குறிப்பிடுகின்றது. மிகுராசு மாலையில் இக்கருத்து.

    மாதா பிதாவு மிலையான தூய வல்லோன் (செய். - 305)

    என்றும்,

    இணைஇலான் (செய். - 182)

    என்றும் இடம் பெற்றுள்ளது.

    ''மிகுராசு மாலைக் கடவுள் வாழ்த்து''ப் பகுதியில் மெய்ப்பொருளாய் இருப்பவன்; அயர்விலாதான்; அண்டமும் பிண்டமும் பேரண்டமும் பொருந்தி இருப்பவன்; எல்லாப்புகழும் அவனுக்கே உரியது; அவன் தனித்தவன்; நிகரில்லாதவன்; தனக்கு நிகர் தானே என்னும் தன்மையன் (செய். - 1) என்கிறார். மேலும், நிகரற்ற அவன் அன்னையின் கருவறைக்குள் சுக்கிலமாய்ச் சென்ற துளி நீரை முறைப்படுத்தி, தசைக்கட்டியாக்கி, உடலாக்கி உயிர்கொடுத்தான்; இதைச் செய்தது அவனையன்றி வேறு யாருமில்லை. ஆதலால் வல்லமை மிக்க அவனையே வணங்குகின்றோம்” என்று வணக்கத்திற்குரிய காரண காரியத்தைக் காட்டுகின்றார்.

    இக்கருத்து இஸ்லாமியத் திருமறையாகிய அல் குர்ஆனில் 17ஆம் அத்தியாயத்தில் 37 முதல் 39 வரை பயின்று வரும் திருவசனத்தின் கருத்தாகும்.

    • கலிமா

    இஸ்லாம் சமய மூலக்கொள்கை கலிமா எனப்படுகின்றது. இதற்கு மொழிதல் என்று பொருள். வணக்கத்திற்குரிய பாத்திரவான் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நபிகள் பெருமானார் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட திருத்தூதுவர் ஆவார் என்னும் பொருளில் அறபு மொழியில்

    லாயிலா ஹா இல்லல் லாஹு முஹம்மதுற் றசூலுல் லாஹி

    என அமைந்த திருவசனமே கலிமாவாகும்.

    இதனை நாவால் மொழிந்து மனத்தால் உண்மை எனக்கொள்வதே இஸ்லாமிய நம்பிக்கையாகும். இத்தகைய நம்பிக்கையுடன் இறைவழிபாடு செய்பவர்களே சொர்க்கம் புகுவார் என மிகுராசு மாலை (செய். - 3) யில் குறிப்பிடப்படுகிறது.

    4.4.2 வேதநூல் கூறும் மெய்ஞ்ஞானம்

    இஸ்லாம் சமயத்தவர்க்கு அருளப்பட்ட புனித வேதநூல் அல் குர்ஆன் ஆகும். அல்குர்ஆன் என்பதற்கு விளக்கவுரை, தெளிவுரை, விரிவுரை என்று பொருள். இது முப்பது பாகங்களும் 114 அத்தியாயங்களும் 6666 திருவசனங்களும் கொண்டுள்ளது. இம்மை மறுமைக்குரிய வாழ்வியல் அணுகுமுறைகள் இதனில் அமைந்துள்ளன.

    இம்மை மறுமையாகிய இருமையின் வெற்றிக்கு பக்குறா, ஆல, இம்ரான் ஆகிய இருஅத்தியாயங்கள் மிகவும் ஆழ்ந்த பொருளில் அமைந்துள்ளதாக மிகுராசு மாலை குறிப்பிடுகின்றது. (பஃறொடை வெண்பா.10)

    பக்குறா, ஆல, இம்ரான் என்பவற்றிற்கு முறையே பசு, இம்ரானின் சந்ததிகள் என்று பொருள். இவை அல்குர்ஆனின் இரண்டாம் மூன்றாம் அத்தியாயங்களின் பெயர்களாகும். இவை இம்மை, மறுமை வாழ்விற்கு வெற்றிதரும் அத்தியாயங்களாக மிகுராசுமாலை குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது.

    • மெய்ஞ்ஞானம்

    இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறியின் ஊற்றுக்கண் நபிகள் பெருமானார் ஆவார். இவர் மெய்ஞ்ஞானத்தை மிகுராசுப் பயணத்தின் போது அறிந்ததாக மிகுராசுமாலை குறிப்பிடுகின்றது.

    இஸ்லாமியம், இறைத்தலத்தை அறுஷ் என்றும், இறைவன் வீற்றிருக்கும் சிங்காதனத்தைக் குறுஷ் என்றும் வழங்குகிறது. இறைவனின் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய செயற்பண்புகளை அறியும் நிலையை ஜபரூத் என்பர். ஜபரூத் எனப்படும் சக்தியின் பண்புகள் வெளிப்படும் போது உருவாகும் ஆன்ம - வானவர் உலகு மலக்கூத்து எனப்படும். மெய்ஞ்ஞான மாட்சிமையாகிய ஜலால் ஜமால் என்னும் பேறுகளைப் பெற்று ஒருமைநிலையை அடைவது பறுதானியத்து எனப்படும்.

    மெய்ஞ்ஞானியாகிய பயணி, ஒவ்வொரு நிலையை அடையும் போதும் அங்கே இருக்கும் தடுப்புத் திரைகள் ஹிஜாப் எனப்படும். நபிகள் பெருமானார் இவ்வகையில் ஒவ்வொரு தடுப்புத் திரையையும் தாண்டி மெய்ஞ்ஞானம் உற்றதை மிகுராசு மாலை பின்வரும் வகையில் காட்டுகின்றது.

    நபிகள் பெருமானார் விண் தலத்தில் நுண்துகள் பொங்கித் துள்ளும் வெண்மையான பனிப்படலத் திரைகள் பலவற்றைக் கடந்து சென்றார். (செய். - 557) பின்னர் நபிபிரான் தனிநிலை யுற்றதையும், அடுத்தடுத்து இவ்வாறே ஒவ்வொரு தடுப்புத் திரையும் கடந்து சுல்தானி என்னும் ஆதிக்க நிலை எய்திய தன்மையையும் மிகுராசு மாலையார் மிகத்தெளிவாகவும் விரிவாகவும் காட்டுகின்றார்

    4.4.3 தொழுகை

    இஸ்லாம் சமயத்தவர்கள் தினம் ஐந்து வேளை இறைவழிபாடு செய்ய வேண்டும் என்பது கட்டாயக் கடமை ஆகும். இக்கடமை விதிப்பு மிகுராசுப் பயணத்தின்போது இறைவனால் அருளப்பட்டதாகும்.

    நபிகள் பெருமானார் விண்ணேற்றம் பெற்று அல்லாஹ்வின் திருமுன் அவனுடைய சன்னிதானம்வரை சென்றார். இன்ன தன்மை எனச் சொல்ல முடியாத பேரொளிப் பிழம்பாக இறைக்காட்சியைக் கண்டார் (செய். - 579). யாருக்கும் கிடைத்தற்கரிய காட்சியைக் கண்ட நபிகள் பெருமானார் தம்மைப் பின்பற்றுவோருக்குரிய இறைக்கட்டளையை அருளுமாறு வேண்டினார். அந்நிலையில் பல்வேறு கட்டாயக் கடமைகள் அருளப்பட்டு தினம் 50 வேளை இறைவணக்கம் செய்ய வேண்டும் என்னும் இறையாணை பிறந்தது. நபிபிரான் ஒப்புக்கொண்டு திரும்பும்போது, மூசா நபி எதிர்ப்பட்டு தங்களைப் பின்பற்றும் மக்களால் இதைச் செய்ய இயலாது எனக்கூறி, திரும்பச் சென்று மிகக்குறைந்த வேளையைப் பெற்று வருமாறு அறிவுறுத்தினார். நபி பிரானும் மீண்டும் இறைச் சன்னிதானத்திற்குச் சென்று தினம் 5 வேளை இறைவனைத் தொழ வேண்டும் என்ற ஆணையுடன் திரும்பினார். (செய். - 640)

    எனவே, இறைவனின் ஆணையால் இஸ்லாமியர் தினமும் இறைவனை ஐந்து வேளை தொழுகின்றனர் எனலாம்.

    • நோன்பு

    இஸ்லாமியர்க்கு விதிக்கப்பட்ட கட்டாயக் கடமைகளுள் நோன்பும் ஒன்று ஆகும்.

    ஐயாறு முப்பது நோன்பை தொகுத்த தையும் ஆதிதன்
    மெய்யாய் விதித் திடக்கைக்கொண்டு
    (செய். - 638)

    எனவரும் அடிகள் காட்டுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 13:12:19(இந்திய நேரம்)