Primary tabs
-
மனிதனுக்கு ஒழுக்கம் முதன்மையான பண்பு. ‘ஒழுகு’ என்ற
வேர்ச் (root) சொல்லின் அடியாகப் பிறந்தது ஒழுக்கம்.
‘ஒழுகு’ என்பதற்கு ‘நட’ எனும் பொருள் உண்டு. எனவே,
ஒழுக்கம் என்பது நடத்தை. நல்ல நடத்தையையே அது
குறிக்கும். நன்னடத்தையாகிய ஒழுக்கம் என்ற பொருளை அறம்
எனும் சொல் உணர்த்தும்.சங்க காலத்தில், மக்களுடைய வாழ்க்கையின் அடிப்படையில்
அகஇலக்கியம், புற இலக்கியம் எனப் பாகுபாடு செய்து,
இலக்கியங்களைப் படைத்தனர். புறப்பொருளில் ஒன்றான
அறத்தின் சிறப்பினைக் கூறும் அறநூல்களை அடுத்த நிலையில்
இயற்றினர். அவை அமைப்பு முறையாலும், அறிவுறுத்தும்
கருத்துகளாலும் ஒரு தனி இலக்கிய வகையாக உருவாகியது.
இவற்றைப் பிற்காலத்தவர்கள் அற நூல்கள் என்று அழைத்தனர்.வாழ்க்கை நெறிக் கொள்கைகளை முழுமையாக விளக்கும் அற
நூல்கள் தோன்றுவதற்கு முன்னர், வழக்காற்று ஒழுக்க நெறி
(Customary Morality) எனக் கூறப்படும் - மக்களின் அன்றாட
வாழ்க்கையில் பின்பற்றும் ஒழுக்க நெறிகளை விளக்கும் நூல்கள்
தோன்றின. இவை மூதுரை எனவும், முதுமொழி எனவும்,
பழமொழி எனவும் வழங்கப்பெற்றன. காலப்போக்கில் அறிவு
வளர்ச்சியின் பயனாக இவற்றிலிருந்து வேறுபட்டதும்,
சிறந்ததும், செறிவுமிக்கதுமான அற நூல்கள் தோன்றின. இவை,
சொல்லாலும், பொருளாலும், கருத்தை உணர்த்தும் முறையாலும்
மூதுரை அல்லது முதுமொழி ஆகியவற்றிலிருந்து சிறிது
வேறுபட்டவை. இவற்றில் கருத்திற்கே முதலிடம்
கொடுக்கப்படுகிறது.