தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.5

  • 1.5 திருவள்ளுவர்

    உலகிலுள்ள அறநெறியாளர்களுள், உலகளாவிய பார்வை
    உடையவர்கள் (Universal Outlook) மிகச் சிலரே. அந்த மிகச்
    சிலருள் ஒருவர் திருவள்ளுவர்.

    தமிழ்நாட்டில் பிறந்து, தமிழர்களிடையே வாழ்ந்த வள்ளுவர்
    கூறிய கருத்துகள், தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமா
    சொந்தமானவை? இல்லை. உலகில் வாழும் மனித குலம்
    முழுமைக்கும்     சொந்தமானவை. எல்லாக் காலத்திலும்,
    எல்லோருக்கும்; இனம், மொழி, நாடு என்ற எல்லையைக் கடந்து
    பொருந்துபவை.


    • சிறப்புகள்

    வள்ளுவரின் சிறப்பு இயல்புகளைப் பற்றி வ.வே.சு. ஐயர் என்பவர்,


    மிகவும் நுட்பமான கருத்துகளைச் சுருக்கி, ஏழு சீர்களில்
    அமைத்துள்ளார். இச்சிறிய இன்னிசைக் கருவியில்அவர்
    சிறந்த இசை வல்லுநரைப் (Expert) போல் எவ்வளவு
    அழகாக இனிய கீதத்தை எழுப்பி இருக்கிறார்’


    என்று வியக்கின்றார்.


    • பெருமை

    வள்ளுவரது உலகளாவிய சிந்தனையைக் கண்டு வியந்த, மகாகவி
    பாரதியார்,


        வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
        வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

    (பாரதியார் கவிதைகள், செந்தமிழ்நாடு : 25-26)


    என்று பெருமையாகப் பாடுகிறார். சேக்ஸ்பியரால் இங்கிலாந்து
    புகழ் பெற்றது போல், ஹோமரால் கிரேக்கம் சிறப்பு
    அடைந்ததுபோல், வள்ளுவரால் தமிழ்நாடு புகழ் அடைந்தது.

    திருவள்ளுவரது சிந்தனைகள், மொழி, இனம், சமயம், நாடு
    என்னும் எல்லையைக் கடந்தது. எனவே, ஆங்கில நாட்டு அறிஞர்
    டாக்டர் ஜி.யு.போப் என்பவர், ‘அனைத்துலக மனிதனைப் பற்றிப்
    பாடிய பெருமைக்கு உரியவர் வள்ளுவர்’ என்று குறிப்பிடுகிறார்.

    திருவள்ளுவரின் கருத்துகளின் சிறப்பினையும், செறிவினையும்
    உணர்ந்த, அறிஞர்கள் பலர், உலகில் மிகச் சிறந்த
    சிந்தனையாளராகக் கருதப்படும் சாக்ரடிஸ், கன்பூசியஸ்,
    செனேக்கா, போன்றோரோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.


    • வாழ்க்கை

    இவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிப் பல கதைகள் உண்டு.
    அவற்றிற்குச் சரியான சான்றுகள் இல்லை.


    1.5.1 புரட்சியாளர்

    மேலை நாடுகளில், பிரபு, அடிமை, குடியானவன் என்ற சமூகப்
    பிரிவுகளே இருந்தன. ஆனால் இந்தியாவில், பிறப்பை
    அடிப்படையாகக் கொண்ட சாதிப் பிரிவுகள் பல உண்டு. இந்தியச்
    சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவைகள் பெரிய
    தடைகளாக உள்ளன. இக்கொடுமையை மாற்ற முயன்ற ஒரு
    புரட்சிக்காரராக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
    வள்ளுவர் திகழ்ந்தார். ஒருவன் பிறந்த குடி, பிறரிடமிருந்து
    அவனைப் பிரிக்காது; ஒதுக்காது. அவன் செய்யும் தொழிலே
    அவனை வேறுபடுத்திக் காட்டும் என்று கீழே குறிப்பிடும் குறள்
    மூலம் எடுத்துக்காட்டுகிறார்.


    பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
    செய்தொழில் வேற்றுமையான்


    (குறள்:972)


    (பிறப்பு ஒக்கும் = பிறப்பு முறை ஒரு தன்மையதே,
    ஒவ்வா
    = நிகரானவை அல்ல)

    பாரம்பரியமாகச் சிலர் சமூகத்தின் மேல் மட்டத்திலிருந்து
    கொண்டு அதிகாரம் செய்து கொண்டிருந்தனர். சிலர்
    அவர்களுக்கு     ஏவல்     செய்யும் பணியாளர்களாகவும்,
    அடிமைகளாகவும் இருந்தனர். இதன் காரணமாக அமைந்த சமூக
    ஏற்றதாழ்வு ஒரு காலக்கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது.
    இதனால் அரசர்கள், பிரபுக்கள், குடியானவர்கள், அடிமைகள்
    என்ற சமூகப் பிரிவுகள் ஏற்பட்டன. பின்னர், அண்மைக்காலத்தில்
    ஏற்பட்ட வர்க்கப் போராட்டத்தினால், முதலாளி தொழிலாளி
    என்று பொருளாதாரத்தின் அடிப்படையில் சமூகம் பிரித்து
    நோக்கப்பட்டது. பின்னர் பொருளாதார முன்னேற்றத்தின்
    அடிப்படையில் முன்னேறிய நாட்டைச் சார்ந்தவர். முன்னேறாத
    நாட்டைச் சார்ந்தவர், முன்னேறிக் கொண்டிருக்கும் நாட்டை
    சார்ந்தவர் என்று பகுத்துப் பார்த்தனர். இன்று உலகளாவிய
    நிலையில் நோக்கும்பொழுது, ஒருவன் செய்யும் தொழிலே
    அவனை அடையாளம் காட்டுகின்றது.

    ஒருவன் சார்ந்த நாட்டையோ, இனத்தையோ சுட்டாமல், ‘இவர்
    ஓர் அறிவியலாளர், பொறியாளர், பேராசிரியர், மருத்துவர்’
    என்றே அழைக்கும் மரபு பெருகி வருகிறது. இதனையே
    வள்ளுவர், ஒருவன் செய்யும் தொழிலே அவனை வேறுபடுத்திக்
    காட்டுகின்றது     என்று குறிப்பிடுகின்றார். முன்னேறிய
    நாடுகளாகிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் எந்தவித
    வேறுபாடும் இல்லாமல், தொழில் செய்து வாழ்வதோடு,
    அவர்கள் செய்யும் தொழில்களின் வாயிலாகவே அடையாளம்
    காட்டப்படுகின்றனர்.

    எனவே, சாதிவேறுபாடுடைய இந்திய சமூக அமைப்பை மாற்றி
    அமைக்க முயற்சித்த வள்ளுவர், இன்றைய சமூக வளர்ச்சி
    நிலையிலும் பின்பற்றக்கூடிய - பொருந்துகின்ற முறையை 2000
    ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டது பெரும் புரட்சிகரமான
    செயல். இது வள்ளுவரது தொலைநோக்கிற்கு ஒரு சிறந்த
    எடுத்துக்காட்டு.



    பயில் முறைப் பயிற்சி - II


    இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

    கெடுக உலகியற்றியான்

    (குறள்:1062)


    மாணவர்களே!

    மேற்காணும் குறள் இறைவனையே ‘கெடுக’ என்று
    சபிப்பதாக     அமைந்துள்ளது.      வள்ளுவரின்
    இறைக்கோட்பாடு, மனித முயற்சியில் நம்பிக்கை, புரட்சிச்
    சிந்தனை ஆகிய கோணங்களில் இருந்து இக்குறளின்
    கருத்தைச் சிந்தியுங்கள். இக்குறளின் வழியாக வள்ளுவச்
    சிந்தனையை மதிப்பீடு செய்து பாருங்கள்.


    1.5.2 சிந்தனையாளர்

    இந்த உலகில்வாழும் மனிதன் உட்பட்ட உயிரினங்களின் யாக்கை
    (உடல்) அழிந்து போகக்கூடிய ஒன்று. அழியக்கூடிய இந்த
    உடலைப் பற்றி - குறிப்பாக நிலையாமையைப் பற்றிச்
    சமயவாதிகள், பல விளக்கங்களைக் கொடுக்கின்றனர். வள்ளுவரும்
    இத்தகைய நிலையாமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அது
    எல்லோருக்கும்     பொருந்துகின்ற எல்லாக் காலத்திற்கும்
    பொருந்துகின்ற, இன்றளவும் நிரூபிக்கக்கூடிய ஓர் அரிய கருத்தாக
    விளங்குகின்றது.


    • நடைமுறை வாழ்க்கை

    இன்று நாள்தோறும் பெருகி வரும் சாலை விபத்துகளாலும்,
    இருதய நோய்களாலும், கொஞ்சம் கூட எதிர்பார்க்காத
    வகையாலும் ‘இறப்பு’ ஏற்படும்பொழுது, ‘ஐயோ நேற்று
    பார்த்தேனே, இன்றுதானே பேசினேன்’ என்று கூறித் தங்கள்
    அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்துவர். அதோடு
    விட்டு விடுவதில்லை. ‘நீர்மேல் குமிழியாம் வாழ்க்கை’, ‘நேற்று
    இருப்பவன் இன்று இருப்பதில்லை’ என்று நிலையாமையைப்
    பற்றிய பல தத்துவங்களையும் எடுத்துரைப்பர். ஆனால்
    வள்ளுவரும் இந்த நிலையாமையைப் பற்றிக் கூறி, இந்த
    உலகம் எத்தகையது என்பதை எடுத்துரைக்கின்றார்.


    நெருநல்உளன் ஒருவன் இன்றுஇல்லை என்னும்
    பெருமை உடைத்து, இவ்வுலகு


    (குறள்:336)


    நேற்று இருந்த ஒருவர், இன்று இல்லை. அதாவது, நேற்று
    உயிரோடு பார்த்த ஒருவனை இன்று பார்க்க முடியவில்லை. ஏன்
    என்றால் அவன் இறந்து விட்டான். இந்த உலகத்தின் இயல்பு
    இதுதான், குறளுக்கு உரை எழுதியவர்களும், விளக்கம்
    சொன்னவர்களும் பெரும்பாலும் மேற்குறிப்பிடும் வகையிலேயே
    பொருள் கூறுகின்றனர்.


    • வள்ளுவரின் சிந்தனை வளம்

    வள்ளுவரை ஓர் எல்லைக்குள் நிறுத்தி, பாரம்பரியமாக உலக
    நிலையாமையைப் பற்றிச் சொல்லிவரும் கருத்தின் அடிப்படையில்
    இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் வள்ளுவர், பல படி உயர்ந்த
    நிலையில், மிகச் சிறந்த ஒரு சிந்தனையை வெளியிடுகிறார்.

    சக்கரம் போல் சுழல்வது வாழ்க்கை. நிமிடத்திற்கு நிமிடம்,
    கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டே இருப்பது வாழ்க்கை.
    வாழ்க்கை மாறிக்கொண்டும்,     ஓடிக்கொண்டும் இருக்கும்.
    எனவேதான், ‘நில்லா உலகில் நில்லேன்’ என சமயத்தலைவர்கள்
    குறிப்பிடுவர். இவ்வாறு சென்ற நிமிடம் இருந்த ஒரு மனிதன்,
    அடுத்த நிமிடம் இருப்பது உறுதியில்லை என்பர். அதைப்போல்,
    உயிரோடு இருக்கும் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு கணமும்
    மாறிக்கொண்டே இருக்கிறான்.


    • மனம் மாறும் தன்மை

    நேற்று இருந்தவாறா, நாம் இன்று இருக்கிறோம்? நேற்றைய மன
    நிலையா இன்னும் மாறாமல் தொடர்கிறது? இல்லையே. நேற்று
    அதிர்ச்சி தந்த ஒரு செய்தி இன்றும் அவ்வாறா உள்ளது? ஒரு
    துன்பச் செய்தியைக் கேட்ட பொழுது ஏற்பட்ட அதிர்ச்சி
    தொடர்ந்து மாறாமல் அப்படியே இருக்கிறதா? துன்பம் மாறாமல்
    இருந்தால், மன அமைதியுடன் வாழ இயலுமா? வீட்டை விட்டுப்
    புறப்படும்போது இருந்த மனநிலை, அலுவலகத்திற்கு வந்த
    பின்னர் மாறுகிறது. சூழலுக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு
    கணமும் மாறிக்கொண்டேயிருக்கிறது. இந்த நடைமுறை
    உண்மையையும் வள்ளுவர் கருத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!
    சிந்தித்துப் பாருங்கள்.


    • சிந்தனையின் ஆழமும் அகலமும்


    நேற்று என்பது நாளை (date) மட்டுமா குறிக்கிறது? கழிந்த
    காலத்தையும் குறிக்கிறது. கால அளவு என்பது விளக்கம்
    கொடுப்பவரைப் பொறுத்து அமையும். கணத்திற்குக் கணம்
    மாறிக்கொண்டே இருப்பது உலகம். நமக்கே சற்று நேரத்திற்கு
    முன்பு இருந்த மனநிலை இப்பொழுது இருக்கிறதா? இல்லையே.
    இந்த உண்மையைத்தான் வள்ளுவர் மேற்குறிப்பிட்ட குறளில்
    குறிப்பிடுகிறார். இவ்வாறு வள்ளுவர் கூறும் கருத்தின்
    பரப்பளவைச் சற்று விரிவுபடுத்தினால் வள்ளுவரின் உயர்ந்த
    சிந்தனையை அறிந்து கொள்ளலாம்.

    மேலும், இந்த உலகத்தில், நாம் பெற்ற உடலும், உயிரும்,
    பொருளும் நிலையாமை உடையன. மாறிக்கொண்டே இருப்பவை
    என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறது. இந்த உண்மையை
    ஏற்றுக் கொண்டு, குறளுக்கு உரை எழுதிய காளிங்கர்,
    தோன்றியபொழுது இருக்கும் ஒன்று மறுகணம் அவ்வாறே
    இருக்காது என்று விளக்கம் கொடுப்பதையும் எண்ணிப் பாருங்கள்!
    வள்ளுவரின் சிந்தனையின் ஆழ்ந்த கருத்தையும், பரந்துபட்ட
    பார்வையையும் எண்ணிப் பாருங்கள்!

    இவ்வாறு வள்ளுவரின் ஒவ்வொரு குறளுக்கும், பொருள்
    கொடுப்போரின் சிந்தனை வளத்திற்கும், பார்வைக்கும் ஏற்றவாறு
    மிகவும் சிறப்பு அடையும்.


    1.5.3 முயற்சியின் மாட்சி

    இன்றைக்கு உலகில் ஏற்பட்டுள்ள எல்லா அறிவியல்
    சாதனைகளுக்கும்,     வெற்றிக்கும்      அடிப்படையாக
    அமைந்திருப்பது எது? தொடர்ந்து நடைபெற்று வரும் மனிதனின்
    முயற்சிகள், இவற்றை நன்கு உணர்ந்தவர் வள்ளுவர். எனவே
    முயற்சியைத் தளரவிடாமல், ஒத்திப் போடாமல் தொடர்ந்து
    முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று
    விரும்புகிறார் வள்ளுவர்.

    சில நேரங்களில், தெய்வத்தின் அருள் இல்லாமல், சில செயல்கள்
    நமது முயற்சிக்குத் தக்க முழுப்பயனைத் தராமல் அமையலாம்.
    அதனால் மனத் தளர்ச்சி ஏற்படலாம். மேற்கொண்டு அப்பணியில்
    ஈடுபட நம் மனம் இடம் கொடுக்காத சூழல் ஏற்படும். இது
    எல்லோருக்கும் வாழ்க்கையில் நிகழும் ஓர் அனுபவம். இதற்கு
    விடையளிக்கிறார் வள்ளுவர். ஒரு செயல், நாம் முயற்சி செய்தும்
    முடியாமல் போகலாம். ஆனாலும் நாம் எவ்வளவு முயற்சி
    செய்தோமோ அந்த அளவுக்கு அது பலன் தரும். உங்கள் உடல்
    உழைப்பு வீணாகாது என்று மனத்திற்கு ஆறுதல் அளிக்கிறார்
    வள்ளுவர். இதனை,


    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்


    (குறள்:619)


    (மெய் = உடல், கூலி = பலன்)

    எனும் குறள் மூலம் தெரிவிக்கிறார்.

    தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், மனம் தளராமல்
    இடைவிடாத முயற்சி செய்பவர்கள் ஊழ்வினையையும் வென்றுவிட
    முடியும் என்று குறிப்பிடுகிறார்.


    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்
    தாழாது உஞற்று பவர்


    (குறள்:620)


    (உப்பக்கம் = புறம்பாக, உலைவுஇன்றி = தளராமல்,
    உஞற்றுபவர் = முயற்சிப்பவர்)

    ஊழ் மீது நம்பிக்கை கொண்டு, தன் வாழ்க்கையின் இன்ப
    துன்பங்களுக்கும், வெற்றி தோல்விகளுக்கும், ஊழின் மீதே
    பழிபோடும் காலச் சூழலில் வாழ்ந்தவர் வள்ளுவர். அத்தகைய
    சூழலில், வள்ளுவர் கூறிய கருத்துகளை எண்ணிப் பாருங்கள்!
    அவை ஊழின் மீது கொண்ட நம்பிக்கைக்கே ஒரு சவாலாக
    அமைகிறது. இல்லையா? நம்மை இயங்க வைக்கும் ஊழையே நம்
    முயற்சியால் புறமுதுகு காட்டி ஓடச் செய்யலாம். அதாவது ஒருவன்
    செய்யும் முயற்சி, ஊழைக்கூட புறம்பாக ஒதுக்கி முன்னேற வழி
    செய்யும் என்கிறார் வள்ளுவர். எனவே, ஊழினிடம் பொறுப்பை
    ஒப்படைத்துச் சோம்பி இருக்காதீர். முயற்சிகளில் ஈடுபடுங்கள்
    என்று குறிப்பிடுகிறார். இது வள்ளுவரின் உயர்ந்த சிந்தனைக்கு
    ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:56:01(இந்திய நேரம்)