தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.6

  • 1.6 தொகுப்புரை

    இதுவரை திருவள்ளுவரைப்பற்றியும் திருக்குறளைப் பற்றியும்
    கூறிய கருத்துகளைத் தொகுத்துக்கூறலாமா?

    • ஒழுக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் நீதி நூல்களிலிருந்து,
      திருக்குறள் வேறுபட்டது. மேம்பட்டது.
    • திருக்குறள் ஒரு வாழ்வு நூல்.
    • குறள் வெண்பாவால் அமைக்கப்பட்டமையால், குறள்
      என்றும், அதன் சிறப்புக் கருதி, ‘திரு’ சேர்த்துத் திருக்குறள்
      என்றும் அழைக்கப்பட்டது.

    திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளை
    உடையது. இதில் 133 அதிகாரங்களில் 1330 பாடல்களும் இடம்
    பெற்றுள்ளன.

    இது மனிதர்கள் அனைவருக்கும் பொருந்துகின்ற அறக்
    கருத்துகளை எடுத்துரைக்கின்றது. இதன் பெருமையை அறிந்து,
    இதனை உலகிலுள்ள பல மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்.

    வள்ளுவர் உலகிலுள்ள மக்கள் அனைவரையும் ஒரு குடும்பமாகக்
    கருதினார். எனவே, குறளில் இடம் பெற்றுள்ள, கடவுள் பற்றிய
    கோட்பாடு சமயம் கடந்த நிலையில் எல்லோருக்கும் பொருந்தும்
    வகையில் அமைந்துள்ளன.

    ‘மனிதனின் முயற்சியினால் ஆகாதது என்று எதுவுமே இல்லை’
    என்று குறிப்பிடுகிறார். ஒழுக்கம் பற்றி வள்ளுவர் கூறும்
    கருத்துகளும் வினை பற்றி வள்ளுவர் கூறும் கருத்தும் எல்லாரும்
    பின்பற்றக் கூடிய பொதுத்தன்மையுடன் அமைந்துள்ளன.

    தமிழ்நாட்டில் பிறந்த வள்ளுவர், தமிழ் மொழியிலேயே எழுதிய
    திருக்குறளில், அவரது மொழி, இனம், நாடு என்ற எல்லைகளைக்
    கடந்த நிலையில் உள்ள பொதுமைக்கூறுகளே காணப்படுகின்றன.

    சாதிய அடிப்படையிலான இந்திய சமூக அடிப்படையில்,
    சாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க விரும்பினார் வள்ளுவர்.
    எனவே, பிறப்பில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. ஒருவன்
    மேற்கொள்ளும் தொழிலினால்தான் அவன் அடையாளம்
    காட்டப்படுகின்றான் என்கிறார் வள்ளுவர். அவரது கருத்து
    இன்றளவுக்கும் நடைமுறை உண்மையாக அமைந்துள்ளது.

    கணத்திற்குக் கணம் மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலும்
    நிலையானது என்று ஒன்று இல்லை. நேற்று இருந்த மனிதன்
    இன்று இல்லை. சில மணித்துளிகளுக்கு முன் இருந்த மனநிலை
    மறுகணம் இருப்பது இல்லை போன்ற உயர்ந்த சிந்தனைகளை
    வள்ளுவர் வழங்கியுள்ளார்.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    திருவள்ளுவரினால் தமிழ்நாடு எத்தகைய
    புகழ் பெற்றது என்று பாரதியார்
    குறிப்பிடுகிறார்?

    2.

    வள்ளுவரை யார் யாரோடு ஒப்பிட்டு
    ஆராய்ச்சி செய்துள்ளனர்?

    3.

    வள்ளுவர் ஒரு புரட்சியாளர் என்று ஏன்
    அழைக்கப்படுகிறார்?

    4.

    நிலையாமையைப் பற்றி வள்ளுவர் கூறும்
    கருத்து யாது?

    5.

    நிலையாமையைப் பற்றி வள்ளுவர் கூறும்
    கருத்திலிருந்து நாம் தெரிந்து கொள்பவை
    யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:56:06(இந்திய நேரம்)