தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 3.4

  • 3.4 புதல்வர்

    குழந்தைச் செல்வத்தை ஒரு பேறாகத் தமிழர் கருதி வாழ்ந்தனர்.
    சங்க     இலக்கியங்கள்     பலவற்றிலும்     குழந்தையைப்
    பெரும்செல்வமாகக் கருதிப் பாடிய பாடல்கள் பல உண்டு.
    புறநானூற்றில், பாண்டியன் அறிவுடைநம்பி, மக்கள் பேற்றின் -
    அதாவது புதல்வர்களைப் பெறுவதால் ஏற்படும்-சிறப்பைப்பற்றி
    மிக அழகிய பாடல் ஒன்றில் பாடியுள்ளார்.

    பலவற்றைப் படைக்கும் ஆற்றல்பெற்ற பெருஞ்செல்வராக
    இருந்தாலும், தனது செயல்களால் பெற்றோரை மகிழச்செய்கின்ற
    புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்க்கை பயனற்றதே என்கிறார்
    அறிவுடை நம்பி.


         படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
         உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
         குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
         இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
         நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
         மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
         பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே

    (புறம் : 188)


    (உடை = உடைமை, இடைப்பட = மெல்லமெல,
    இட்டும்
    = கொடுத்தும், துழந்து = (கையால்) துழாவி,
    அடிசில்
    = உணவு, மெய் = உடல், விதிர்த்து = சிதறி,
    மயக்குறு
    = இன்பத்தால் மயக்கி மகிழச் செய்யும்,
    பயக்குறை = பயன்+குறை)

    பலவற்றைப் படைத்துப் பலரோடும் அமர்ந்து உண்ணும்
    ‘உடைமை‘ எனப்படும் பெரும்செல்வம் பெற்றவராயினும் என்ன?
    மெல்ல மெல்ல, குறு குறு என நடந்து சென்று, தம் அழகிய
    சிறிய கையை நீட்டி, உண்கலத்து நெய்யுடைச் சோற்றில் இட்டும்
    அக்கையாலேயே, பெற்றோரைக் கட்டிக் கொண்டும், வாயால்
    கவ்வியும், கையால் துழாவியும், தன் உடல் முழுவதும் சிதறியும்,
    அக்குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்
    புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே என்பது
    இப்பாடல் தரும் செய்தி. இதைப்போல குழந்தைச் செல்வம்
    பற்றிப் பல பாடல்கள் உள்ளன.

    திருவள்ளுவரும், இல்வாழ்க்கையின் பெரும் பயன்களுள் ஒன்றாகக்
    குழந்தை பெறுதலைக் குறிப்பிடுகிறார்.


    3.4.1 புதல்வரும் இன்பமும்

    சிறுவர்களாக இருக்கும் பொழுது தம் புதல்வர்களால் கிடைக்கும்
    இன்பத்தை வள்ளுவர் சிறப்பாகக் கூறுகிறார். இவர்களின் உடலைத்
    தொடும் பொழுது கிடைக்கும் இன்பத்திற்கும், அவர்களது மழலைச்
    சொல்லைக் கேட்கும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கும் இணை ஏது?
    இணையே இல்லை. புல்லாங்குழலின் இசை இனிமையானது;
    யாழின் இசை இனிமையானது என்று சொல்பவர்கள் யார்? தம்
    குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்களே என்கிறார்
    வள்ளுவர்.


    ‘குழல் இனிது, யாழ் இனிது’, என்ப - தம் மக்கள்
    மழலைச் சொல் களோதவர்.


    (குறள்:66)


    (மழலை = குழந்தைகளின் திருத்தம் இல்லாத இனியபேச்சு)

    - என்பது குறள்.

    தம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டு அறியாதவர்கள்,
    குழலின் இசை இனிமையாக இருக்கிறது, யாழின் இசை
    இனிமையாக இருக்கிறது என்று கூறுவார்கள். குழந்தையின்
    மழலைச் சொல்லைக் கேட்டவர்கள் அவ்வாறு கூறுமாட்டார்கள்.

    இத்தகைய இன்பம் தரும் புதல்வர்கள், இந்த உலகத்தில் அறிய
    வேண்டிய நல்ல ஒழுக்கங்களை அறிந்து சிறப்புறுவாராயின்,
    அப்படிப்பட்ட புதல்வர்களை உடையோர், உண்மையிலேயே
    மிகவும் பேறு பெற்றவர்கள்.


    3.4.2 புதல்வரும் பெற்றோரும்

    குழந்தைகளின் நல்ல குணங்களும், நல்ல செயல்களும் அவர்களின்
    வளர்ப்பு முறையில் அமைந்துள்ளது. வளர்ப்பு முறைக்குப்
    பெற்றோரே முழுப்பொறுப்பு. எனவே, அவர்களது கடமைகளாகச்
    சிலவற்றை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    • தந்தையின் கடமை
    தந்தை, தன்னுடைய மகனுக்குச் செய்யக் கூடிய பெரிய கடமை
    எது? கல்வி கற்ற சான்றோர் அமர்ந்திருக்கும் அவையில்,
    கல்வியால் சிறப்பு உடையவனாக அமரச் செய்வதாகும், என்கிறார்
    வள்ளுவர்.


    தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்


    (குறள்:67)


    (மகற்கு = மகனுக்கு, ஆற்றும் = செய்யும், நன்றி = நல்லசெயல்
    அவையத்து = அவையில், முந்தி = முன்னால், செயல் = செய்தல்)

    • தாயின் மகிழ்ச்சி
    புதல்வனைப் பெறும் போது அடைந்த மகிழ்ச்சியை விட, ஒரு
    தாய் அவனைச் சான்றோன் எனக் கேட்கும் பொழுது மிகவும்
    மகிழ்ச்சி அடைவாள் என்கிறார் வள்ளுவர்.


    ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்


    (குறள்:69)


    (பொழுதின் = பொழுதைவிட, உவக்கும் = மகிழ்ச்சி அடையும்)

    ஒரு சமுதாயம் பல தனிமனிதர்களை அங்கமாகக் கொண்டது.
    சமுதாயத்தின் அமைப்பிலும் வளர்ச்சியிலும் தனி மனிதனுக்குப்
    பங்கு உண்டு. தனி மனிதன் சான்றாண்மை உடையவனாக
    இருந்தால், அவன் சார்ந்த சமுதாயமும் சான்றாண்மை உடையதாக
    அமையும். எனவே, குழந்தையாக இருக்கும் பொழுதே ஒருவன்
    கல்விகற்ற, சான்றாண்மை உடையவனாக வளர்க்கப்பட வேண்டும்
    என்பது வள்ளுவர் கருத்து.

    ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பது தமிழ்ப்
    பழமொழி. எனவே தான், குழந்தைப் பருவத்திலேயே, சான்றோர்
    அமர்ந்திருக்கும் அவையில், முந்தியிருக்கும் வகையில் கல்வி
    கொடுக்க வேண்டும்; சான்றோன் என்று கூறும்படி வளர்க்க
    வேண்டும்; என்று தம் புதல்வர்களுக்குப் பெற்றோர் செய்ய
    வேண்டிய கடமைகளை இந்த இரு குறள்களிலும் வள்ளுவர்
    அறிவுறுத்துகிறார்.

    பண்பட்ட ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்று எண்ணிய
    வள்ளுவரின் உயர்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடே இவை.


    3.4.3 புதல்வரின் கடமை

    சான்றோர்கள் பாராட்டும் வகையில் வளர்க்கப்பட்ட மகன்
    தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை வள்ளுவர்
    வலியுறுத்துகிறார். அவனது அறிவையும் ஒழுக்கத்தையும்
    காண்பவர்கள்,    இத்தகைய சிறப்புடைய     புதல்வனைப்
    பெற்றவர்கள் எத்தகைய தவத்தைச் செய்தார்களோ என்று
    வியப்பு     அடைய வேண்டும். அதுவே அவன் தன்
    தந்தைக்குச் செய்யும் கடமை என்கிறார் வள்ளுவர்.

    தான்     பிறந்த     நாளிலிருந்து,     தன்னை வளர்த்து,
    நல்லொழுக்கங்களைப் புகட்டி, கல்வி கற்கவைத்து, ஒரு நல்ல
    மனிதனாக ஒரு பணியை மேற்கொள்ளவைத்து உருவாக்கிய
    தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய மறு உதவி அல்லது கடமை
    எது? தன் அறிவாற்றலையும், நற்குண நற்செயல்களையும்
    காண்போர், இவன் தந்தை, இத்தகைய சிறப்புடைய ஒருவனை
    மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் செய்திருப்பாரோ என்று
    வியக்கவேண்டும். இவ்வாறு வியக்கும் வண்ணம் புகழோடு அவன்
    வாழ வேண்டும் என்கிறார் வள்ளுவர். இக்கருத்தினை,


    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்


    (குறள் : 70)


    (ஆற்றும் = செய்யும், நோற்றான் (கொல்) = தவம் செய்தான்)

    என்ற     குறளில்     குறிப்பிடுகிறார்.     இல்வாழ்க்கையில்
    ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் இவை, இவை என
    வரையறை செய்த வள்ளுவர். அக்கடமைகளை அவர்கள்
    ஒழுங்காகச்     செய்வதினால்     வரும்     சிறப்புகளையும்
    எடுத்துரைத்துள்ளார்.



    பயில்முறைப் பயிற்சி

    ‘என் நோற்றான் கொல்‘ என்ற தொடரில் ‘கொல்‘ என்னும்
    சொல் வியப்பையும் ஐயத்தையும் வெளிப்படுத்தும்
    வினாக்குறியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே
    ‘என்நோற்றான் கொல்‘ என்பதை ‘என்ன தவம்
    செய்தனரோ?‘ எனப் பொருள் விரிக்க வேண்டும்.
    இவ்வகையில் ‘கொல்‘ என்பது மரபு இலக்கணத்தில் ‘ஐய
    இடைச்சொல்‘ என வழங்கப்படுகிறது.

    கீழ்க்காணும் குறள்களின் பொருள்களை நூலகத்தில்
    கண்டறிந்து, ‘கொல்‘ என்னும் ஐய இடைச்சொல்
    எடுத்தாளப்பட்டிருக்கும் வகை அறிக.


    1

    அணங்குகொல் ஆண்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும் என் நெஞ்சு (1081)


    2


    துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
    என்னை கொல் ஏதிலார் மாட்டு? (188)


    3


    துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றையவர்கள் தவம் (263)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:59:14(இந்திய நேரம்)