தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆவாரை

 • வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1898)

  பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் தண்டபாணி சுவாமிகள் ஆவார். தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் திருப்புகழ்ச்சுவாமிகள், முருகதாச சுவாமிகள் எனவும் அழைக்கப்பெறுகிறார். சந்தக்கவிகளையும் வண்ணப் பாடல்களையும் பாடுவதில் வல்லவர் ஆனதால் வண்ணச்சரபம் என்றும் போற்றப் பெறுகிறார்.

  தமிழில் இவர் பாடிய நூல்கள் மிகப்பல. இவற்றை இவரே தம் கைப்பட ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளார். அவை அனைத்தும் இன்று கிடைக்கப் பெறவில்லை. இவர் சமயச்சார்பற்ற பொது நெறி நூல்களை இயற்றியுள்ளார். கொல்லாமை, புலால் உண்ணாமையை வலியுறுத்திப் பாடியவர். தெய்வ வடிவம் பலவாயினும் பொருள் ஒன்றே என்ற தெளிவை விளக்குபவர்.

  தமிழில் தேவார ஆசிரியர்களைப் போன்று திருக்கோயில்களுள்ள பல தலங்களுக்கும் நேரில் சென்று பாடியும் அவற்றை ஓலையில் எழுதி வைத்தும் மகிழ்ந்தவர். அகப்பொருள் துறைகளுடைய பெரிய சந்த வண்ணப் பாக்களையும் திருப்புகழ்ப்பாக்களையும் ஏராளமாகப் பாடியவர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்லவர். சிறந்த இசை வல்லுநர். தமிழில் அறுவகை இலக்கணம், ஏழாமிலக்கணம் மற்றும் புலமை இலக்கணம், வண்ணத்தியல்பு நூல் எனப் புது நூல்களைப் படைத்தவர், தமிழ் எழுத்து வரிவடிவங்களை இலக்கணமாக வடித்துத் தந்தவர். தமிழலங்காரம் பாடிய தனித்தமிழ்க் கவிஞர். சாத்திர நூல்கள் பல பாடியவர். தமிழில் முதன் முதலாகப் புலவர் புராணம் எனும் தலைப்பில் தமிழ்ப் புலவர் வரலாறு படைத்தவர்.

  நாற்கவிகள் படைப்பதில் வல்லவரான இவருடைய கவிதைகள் எளிமையும், இனிமையும் கொண்டவை. ஓலைச்சுவடிகளில் சர்வ சாதாரணமாகவும், மிக அழகாகவும், தெளிவாகவும், பிழையின்றியும் எழுதும் ஆற்றல் மிக்க இவர் அன்றாடம் எழுதத் துணை நின்ற எழுத்தாணிக்குச் சர்வ சாதாரணி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தவர்.

  இவருடைய பாடல்கள் ஐம்பதாயிரத்திற்கு மேலுள்ளன. இவற்றை, சௌரம், சைவம், சாக்தேயம், வைணவம், காணாபத்தியம், கௌமாரம் எனப் பிரித்தறியலாம். எஞ்சியவற்றைச் சமரசம், சமயாதீதம், இலக்கணம், பலவகை நூல்கள் போன்ற பிரிவில் அமைக்கலாம். இவற்றுள் பல அச்சில் அவ்வப்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் பல பதிப்புகள் இன்று கிடைப்பதரிது. முழுத்தொகுப்பும் வெளிவரவில்லை.

  இவருடைய காலத்திலேயே அனலிலும் புனலிலும் அழிந்தவை போக, எஞ்சியிருக்கும் நூல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை இப்பொழுது தமிழ்ப் பல்கலைக்கழகம் கணினி வழியே பாதுகாத்து உலகிற்கு அளிப்பதில் முன்நின்று செயலாற்றி வருகிறது.

  ஓலைச்சுவடிகளில் நூலாசிரியரின் கையெழுத்துப்படி கிடைப்பது மிக அரிது. இவ்வகையில் இவருடைய ஏடுகள் மிகவும் அருமையானவை இவருடைய நூல்களின் மூல ஏடுகள் ஓலைச்சுவடிகளாகக் கோவை கௌமார மடாலயத்தில் பாதுகாக்கப் பெற்றுள்ளன. சிரவை ஆதீனத்தின் குருமுதல்வர் தவத்திரு முனைவர் குமரகுரு சுவாமிகள் அவர்கள் இச்சுவடிகளை மின்படி எடுக்க வழங்கியருளியமைக்காக நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

  1981ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கணிப்பொறியியல் துறையும் ஓலைச்சுவடித்துறையும் இணைந்து அனைத்துலக ஓலைச்சுவடிகள் விளக்க அட்டவணைகளை (ஐந்து தொகுதிகள்) கணிப்பொறி வழி உருவாக்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் 1986ஆம் ஆண்டு வெளியிட்டன. ஓலைச்சுவடி அட்டவணையை கணிப்பொறி வழி உருவாக்கிய முதல் முயற்சி இதுவேயாகும். இத்திட்டத்திற்கு மைய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவி பெறப்பட்டது.

  தற்போது, கணிப்பொறி தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் ஓலைச்சுவடிகளை உள்ளது உள்ளபடியே வருடி மூலம் கணிப்பொறியேற்றம் செய்வதற்கும்; கணிப்பொறியில் மின்படிவத்திலுள்ள ஓலைச்சுவடிகளை உலகளாவிய நிலையில் தமிழ் ஆய்வாளர்களிடமும் ஆர்வலர்களிடமும் கொண்டு செல்ல இணையமேற்றம் செய்வதற்கும் தமிழ்ப் பல்கைக்கழகம் முனைந்துள்ளது.

  முதற் கட்டப் பணியாக, முயற்சியாகத் தமிழில் மிகுதியான நூல்கள் இயற்றியும் அவற்றை ஓலையில் தம் கைப்பட எழுதியும் வைத்த பெரும்புலவர் தண்டபாணி சுவாமிகள் அவர்களின் பெருமை கருதி அவருடைய பாடல்கள் அனைத்தும் மூலமாக ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் மின்னாக்கம் செய்து, இணைய தளத்தில் வெளியிடப் பெறுகின்றன. இதுவும் ஒரு முதல் மற்றும் சிறப்பு முயற்சியாகும்.

  தமிழ் ஆர்வலர்கள் விரும்பும் வண்ணம் இவற்றைப் பயன் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

  இத்திட்டத்திற்கு அனுமதி அளித்த தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம.திருமலை அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகின்றோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:09:18(இந்திய நேரம்)