தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • காஞ்சிபுரம் சி.எஸ்.சபாபதி முதலியார்

    முனைவர் த.கலாஸ்ரீதர்
    உதவிப்பேராசிரியர்
    ஓலைச்சுவடித்துறை

    இவர் மகாவித்துவான் என்று அழைக்கப்பட்டவர். காஞ்சி பச்சையப்பன் பள்ளியில் சில காலம் தமிழாசிரியராக இருந்தவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் இவரைத் தம் ஆசிரியராகக் கருதி மரியாதை தந்துள்ளார். இவர் உரையாசிரியர் எனவும் சிறப்பிக்கப்பட்டவர்.

    பதிப்பு நூல்கள்

    சைவத் திருமுறைகளை முதலில் பதிப்பித்தவர். இவரது தேவாரப் பதிகங்கள் திருஞான சம்பந்த சுவாமிகள் திருமுறை 1864 இல் சென்னை கலாநிதி அச்சுக்கூடத்தில் அச்சிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பிரமோத்தரக் காண்டப் பொழிப்புரையையும் சைவ சமய விளக்க வினாவிடையையும் இவர் வெளியிட்டுள்ளார். இச்சைவ சமய விளக்க வினாவிடையையும் ரெவ்.டி.ஃபவுல்க்ஸ் (T.Foulkes) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். “The work Contains a useful Compendium of Saivism என்று ஜான் மர்டாக் தமது நூலில் கூறியுள்ளார்.

    நீதிநெறி விளக்கவுரை, திருக்கழுக்குன்றச் சிலேடை போன்ற நூல்களையும் இவர் செய்துள்ளார். திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதியை 1837 இல் திருவேங்கடாசல முதலியாரது சரஸ்வதி அச்சுக்கூடத்தில் பரிசோதித்து அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். பல நூல்கள் இவரது மேற்பார்வையில் அச்சிட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.

    திருஞானசம்பந்த சுவாமிகள் தாலாட்டு, திருக்குழந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ் (1896) அருணாசல சதகம் (193), பெரியபுராணம் பதிப்பித்துள்ளார். இதில் 4299 பாடல்கள் தரப்பட்டுள்ளன. ஆறுமுக நாவலர் 1884 இல் பதிப்பித்ததில் 4286 பாடல்கள் உள்ளன. காஞ்சிபுரம் சபாபதி முதலியார் பெயரில் சென்னை கொண்டித் தோப்பில் ஒரு தெரு உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:19:53(இந்திய நேரம்)