தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • தாண்டவராய முதலியார்

  (-1850)

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

   

  புதுவையை அடுத்த சூணாம் பேட்டையைச் சார்ந்த வில்லிபாக்கம் என்ற வில்லிய நல்லூரில் பிறந்தவர். கந்தசாமி முதலியரது குமாரர். உழலூர் வேலப்ப தேசிகர், தொல்காப்பிய வரதப்ப முதலியார், சீர்காழி வடுகநாதன் தம்பிரான் ஆகியோரிடம் தமிழை முறையாகப் பயின்றவர். ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்துஸ்தானி, மராட்டி சமஸ்கிருதம் ஆகிய பிறமொழிகளையும் கற்றறிந்தவர். இராமானுசக் கவிராயருடனும் அவர்தம் மாணவர் சரவணப் பெருமாளையருடன் இலக்கண இலக்கியங்களைக் குறித்து வாதம் செய்தவர்.

  இவர் சென்னைக் கல்விச் சங்கத்துத் தலைமைப் புலவராக 1839 வரை இருந்தவர். இவரிடம் 22 மாணவர்கள் பாடங்கேட்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்று உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்’ முதற்பகுதியில் 56 ஆம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திரு தாண்டவராய முதலியார் பதவி உயர்வு காரணமாக விசாகப்பட்டினம் சென்றார். 1843இல் செங்கற்பட்டு நீதிமன்றத்தில் சதர் அமீனாக மாவட்ட சுதேச நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.

  ஒரு தமிழ்ப் புலவர்க்கு இத்தகைய பதவி கிடைப்பது அரிதாகவே அக்காலத்திலிருந்து வந்தது. இவர் ஆங்கிலேயரிடமிருந்து பல நன்கொடைகள் பெற்றவர். இவர் உரைநடையில் தமிழ் இலக்கணம் பற்றி இலக்கண வினாவிடையை 1820லும் பஞ்சதந்திரக் கதையை மராட்டி மொழியிலிருந்து பெயர்த்து 1826 லும் கதா மஞ்சரியை 1826 லும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும், திருத்தணிகைமாலை, திருப்போரூர் பதிகம் முதலியவற்றையும் இவர் இயற்றியுள்ளார்.

  பதிப்பித்த நூல்கள்

  வீரமாமுனிவர் தொகுத்த சதுர் அகராதியின் மூன்று மூன்று பகுதிகளை 1824இல் பிறர் உதவியுடன் சேர்ந்து அச்சிட்டுப் பதிப்பித்தார். சூடாமணி நிகண்டு முதல் பத்துப் பகுதிகளை 1839இல் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். இவர் நாலடியாரையும் திவாகரம் முதல் எட்டுத் தொகுதிகளையும் ஆராய்ந்து பதிப்பதற்குச் செப்பஞ் செய்திருந்தார். பின்னர் பதவி உயர்வு காரணமாகத் தம்மால் கவனமாகச் செய்ய முடியாததால் புதுவை நயனப்ப முதலியாரைத் தம் சார்பில் பதிப்பிக்கும்படி அனுமதி கொடுத்தார். அவர் திவாகரம் 9-10 ஆம் பகுதிகளையும் பரிசோதித்து அளித்தார். தாண்டவராய முதலியார் அவர் பரிசோதித்த சேந்தன் திவாகரம் எட்டுப் பகுதிகள் அச்சிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. 1839இல் கொற்றமங்கலம் இராமசாமி பிள்ளை அவர்களின் துணையுடன் இத்திவாகர நிகண்டு நூலை முதன் முதல் கி.பி 1835 இல் பதிப்பித்தவர் வித்துவான் தாண்டவராய முதலியார் இவரே பல சூத்திரங்களைப் புதியனவாக இயற்றிச் சேர்த்து அச்சிடுவித்தார்கள். இவ்வாறு புதுப்பித்த திவாகரமே இப்போது வழங்குவது. இப்பதிப்பின் தலைப்பு பக்கம் வருமாறு. புத்தகந்டோறுமொன்றில் கொண்றொவ்வாது வழு உக்களாற் பொதிவுற்றுக் கிடந்தமையாலவ் வழு உக்களைப் பல புத்தகங்களைக் கொண்டு களைந்தும் வேண்டுமிடத்துப் புதுச் சூத்திரங்கள் செய்து உடுக்குறியிட்டுச் சேர்த்தும் பெயர் பிரித்தும் -அச்சில் பதிப்பிக்கப்பட்டது என்று தி.ச.வையாபுரிப்பிள்ளை தமது புறத்திரட்டுகள் எனும் நூலின் 206 ஆம் பக்கத்தில் எடுத்துக் காட்டியிருப்பது இங்கு நினைவுப் படுத்தத்தக்கதாகும்.

  1835 இல் இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூல் மூலமும் அகப்பொருள் மூலமும் புறப்பொருள் இலக்கியத்தோடு வெண்பாமாலை மூலமும் தாண்டவராய முதலியாரும் அ.முத்துசாமிப் பிள்ளையும் சேர்ந்து அச்சிட்டுப் பதிப்பித்துள்ளனர். 1880இல் மன்மத விலாசம் எனும் நாடக நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். தாண்டவராய முதலியார் 1850இல் இறந்து போனார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:18:10(இந்திய நேரம்)