தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்

  (1855 – 1942)

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

  சோழவள நாட்டிலே தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம் புகைவண்டி நிலையமருகிலுள்ள உத்தமதானபுரம் என்னும் ஊரில் 19.02.1855 அன்று வேங்கட சுப்பையருக்கும் சரசுவதியம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள். இவருடைய இயற்பெயர் வேங்கடராமன் (பாட்டனார் பெயர்) என்பதாகும். இளமையில் ‘சாமா’ எனப் பெற்றோர்கள் அழைத்து வந்ததையே இவருடைய ஆசிரியர் சாமிநாதன் எனத் திருத்தி அமைத்தார். பின்னர் அதுவே அவருடைய பெயராயிற்று.

  ஐயரவர்களுடைய தந்தை வேங்கட சுப்பையர் இலக்கண இலக்கியப் பயிற்சியும் இசைப்புலமையும் பெற்றவர். தந்தையிடம் சிறந்த கல்விப் பயிற்சி பெற்ற சாமிநாத ஐயர் அரியலூர் சடகோப ஐயங்கார், செங்கணம் விருத்தாசல ரெட்டியார் போன்றோரிடமும் பாடங்கேட்டார். பின்னர் பலரின் உதவியுடன் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைத் தம் பதினேழாம் வயதில் ஆசிரியராகப் பெற்றார். ஐயர் அவர்கள் பிள்ளையவர்களை நிழல் போலத் தொடர்ந்து நூல்கள் பலவற்றையும் பாடங்கேட்டார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பானையோலையில் எழுதப் பழகிய ஐயர், பிள்ளையவர்களின் பாடல்களைப் பானையோட்டில் எழுதலானார். இவரிடம் ஆறு ஆண்டுகள் கல்வி கற்ற இவர் கோபாலகிருட்டிண பாரதியாரிடம் இசைப் பயிற்சியும் பெற்றார்.

  கல்லூரி ஆசிரியர்

  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் காலமான பின் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரிடம் சில ஆண்டுகள் கல்வி கற்க ஐயர் ஆசிரியராகவும் மாறினார். பிள்ளையவர்களின் முதல் மாணவராகிய தியாகராசச் செட்டியார் தாம் கும்பகோணம் கல்லூரியில் ஆற்றிய தமிழாசிரியர் வேலையை ஐயருக்கு வாங்கி அளித்தார். அதுவே இவருடைய தமிழ்ப் பணிக்கு முதற்படியாயிற்று.

  பதிப்புப் பணி

  கும்பகோணத்தில் முன்சீபாக இருந்த சேலம் இராமசாமி முதலியார் ஐயரிடம் சீவகசிந்தாமணியைப் பாடங்கேட்க விரும்பி ஒரு நாள் ஒரு பழைய புத்தகத்தை எடுத்து வந்தார். அதிலிருந்து பிழைகளை எடுத்துக்காட்டிய ஐயரிடம் முதலியார் அவர்கள் தாங்களே இந்நூலை ஏன் திருத்தி அச்சிடக்கூடாது என வினவினார். அதன்படி ஐயரவர்கள் ஏடுகளைத் தேடத் தொடங்கினார். எல்லாச் சுவடிகளையும் ஒப்பிட்டு நோக்கி 1887 ஆம் ஆண்டில் சிந்தாமணியை வெளியிட்டார். இவருடைய இம்முதல் பதிப்புப் பணியே இவருக்கு மிகுந்த புகழை அள்ளித்தந்தது.

  1888 ஆம் ஆண்டு பத்துப்பாட்டு நூலையும், 1892 இல் சிலப்பதிகாரத்தையும், பிறகு புறநானூறையும், 1898 இல் மணிமேகலையையும் பதிப்பித்து வெளியிட்டார். இவருடைய நூல்கள் யாவும் பல ஓலைச்சுவடிப் பிரதிகளை முறையாக ஆராய்ந்து திருத்தமான பாடங்கண்ட பிறகே வெளிவரலாயின. இதற்காக இவர் மேற்கொண்ட உழைப்பு ஆண்டுக்கணக்கிலாகும்.

  நூல் வெளியீட்டுப் பணியில் முழுநேரமும் ஆர்வங்கொண்ட ஐயருக்குச் சென்னையில் பணி கிடைத்ததும் அவருடைய வளர்ச்சிக்குப் பெருந்துணையாயிற்று. சென்னை மாகாணக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பூண்டி அரங்கநாத முதலியார் சாமிநாத ஐயரின் தமிழார்வத்தைக் கண்டுமெச்சி அவரைத் தம் கல்லூரியில் வேலைக்கு அமர்த்தினார். அதன் பின்னர் 1903 ஆம் ஆண்டில் ஐங்குறுநூறு நூலையும், 1904 இல் பதிற்றுப்பத்து நூலையும், 1918 ஆம் ஆண்டில் பரிபாடலையும் ஐயர் பதிப்பித்து வெளியிட்டார். 1919 ஆம் ஆண்டில் மாகாணக் கல்லூரி ஆசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தில்லையில் இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அமைத்த மீனாட்சி கல்லூரியின் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஐயர் பல பதவிகளையும் பட்டங்களையும் பெற்றார்.

  1906 ஆம் ஆண்டில் மகா மகோபத்யாயர் பெரும் பேராசான் என்னும் சிறப்புப் பெயருடன் ஆயிரம் வெண்பொற் காசுகளும் இவருக்கு அளிக்கப் பெற்றார்.

  பாரத தர்ம மகாமண்டலத்தார், அவையினர் இவருக்குத் திராவிட வித்யா பூஷணம் (திராவிடக் கலையழகன்) என்னும் பட்டத்தையும், காஞ்சி காமகோடி பீடத்தலைவர் அவர்கள் தாட்சிணாத்ய கலாநிதி (தெற்கத்திய கலைச்செல்வன்) என்னும் பட்டத்தையும் வழங்கிச் சிறப்புச் செய்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் ஐயாயிரம் வெண்பொற் காசுகளை வழங்கி அவரை வாழ்த்தினர்.

  ஐயரவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் (இலக்கியப் பேரறிஞர்) பட்டத்தை வழங்கியது. இப்பட்டத்தைப் பெற்ற ஐயரவர்கள் தான் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர் என்றும் இது தமிழக்குக் கிடைத்த மதிப்பு என்றும் மிகுந்த அடக்கத்துடன் கூறினார்.

  சென்னை, அண்ணாமலை நகர், மைசூர், காசி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக்கழகத் தமிழ்க் குழுக்களில் உறுப்பினராயிருந்த ஐயரவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வுக் குழுத் தலைவராகப் பல்லாண்டுகள் பணியாற்றினார். இவருடைய தமிழ்த் தொண்டினைப் பாராட்டதார் இல்லை என்றே கூறலாம். மகாகவி பாரதியார் இவரை நேரில் கண்டு வாழ்த்திய பாடல்களே இதற்குப் பெருஞ்சான்றாகும்.

  முன் இவன் அப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்

  இவன் பெருமை மொழிய லாமோ

  என்றும்,

  பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்

  காலமெலாம் புலவோர் வாயில்

  துதி அறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்

  இறப்பின்றித் துலங்கு வாயே

  என்றும் மிக்க உணர்ச்சிப் பெருக்கோடு இவரை வாழ்த்துவர் பாரதியார்.

  தமிழ் நூல்கள்

  கல்லூரியாசிரியர் வேலையைத் தவிர மற்ற காலங்களில் எல்லாம் நூல்பதிப்புப் பணியிலே மூழ்கியிருந்த ஐயரின் நூல்கள் மிகப்பல. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவை மட்டுமின்றிப் பல நூல்களையும் அவர் வெளிக்கொணர்ந்தார். தக்கயாகப் பரணி, பாசவதைப் பரணி, உரை, சங்கரலிங்க உலா, திருவாரூர்க் கோவை, பழலைக் கோவை, கலைசைக் கோவை, சீகாழிக் கோவை, சிராமலைக் கோவை, சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், மீனாட்சி சுந்தரம்பிள்ளை பிரபந்தத்திரட்டு, திருமயிலைத் திரிபந்தாதி, திரு இலஞ்சி முருகன் உலா, திருக்கழுக்குன்ற உலா, திருப்புவாணநாதர் உலா, திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, கடம்பர் கோயில் உலா, மதுரை சொக்கநாதர் உலா, தேவை உலா, மான்விடு தூது, தமிழ்விடு தூது, அழகர் கிள்ளைவிடு தூது, வண்டுவிடு தூது, சிவசிவவெண்பா, திருமலையாண்டவர் குறவஞ்சி, மகரநெடுங்குழைக்காதர் பாமாலை, தனியூர்ப்புராணம், நன்னூல் மயிலைநாதர் உரை, மதுரை மும்மணிக்கோவை, வலிவல மும்மணிக்கோவை, திருவாவடுதுறைக் கோவை ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட ஐயரவர்கள் நல்லுரைக் கோவை, புதியதும் பழையதும், நினைவு மஞ்சரி, தமிழ் நெறி விளக்கம், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், தியாகராசர் செட்டியார் வரலாறு, என் சரித்திரம் போன்ற பல அரிய உரைநடைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இத்துடன் அவர் ஆயிரக்கணக்கான சுவடிகளையும் சேகரித்துள்ளார்.

  தமிழரின் பழமையைப் பறைசாற்றும் பெருநூல்களான சங்க இலக்கியங்களை இவர் அள்ளித்தந்ததும், பொது அறிவுக் களஞ்சியங்களான உரைநடை நூல்களையும் இவர் படைத்துத் தந்ததும், தமிழாய்வு செய்யும் பலருக்கு இன்றும் பயனளித்து வருகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:20:44(இந்திய நேரம்)