தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • இராகவய்யங்கர்.மு.

    கி.பி 1878–1960

    முனைவர் த.கலாஸ்ரீதர்
    உதவிப்பேராசிரியர்
    ஓலைச்சுவடித்துறை

    இளமைப் பருவம்

    கி.பி 1878 ஆம் ஆண்டு சூலை திங்கள் 26 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரியக்குடியில் பிறந்தார். இவர் தந்தையார் சதாவதானம் முத்துசுவாமி அய்யங்கார், இளமையில் தந்தையாரை இழந்த இராகவய்யங்கார் பாலவனத்தம் குறுநில மன்னர் பாண்டித்துரைத் தேவரின் ஆதரவால் தமிழ்ப் பயிற்சி பெற்றார். இவர் தம் மாமனார் சூரியக்குட்டம் இருட்டைணமாச்சாரியரிடம் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றறிந்தார். தமது 18 ஆம் வயதில் பாண்டித்துரைத்தேவரின் அவைக்களப் புலவரானார். தமிழிலக்கிய ஆராய்ச்சியில் 20 ஆம் நூற்றாண்டில் தலைசிறந்து விளங்கிய மகாவித்துவான் ரா.இராகவய்யங்கார் இவர் தாய்மாமன் மகனாவார்.

    தமிழ்த்தொண்டு

    மதுரையில் பாண்டித்துரைத்தேவர் 1901இல் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய போது அச்சங்கத்தைச் சார்ந்த கல்லூரியில் இவரைத் தமிழாசிரியராக நியமித்தார். பின்னர் இவர்தம் புலமைத் திறத்தினைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் செந்தமிழ் என்னும் திங்களிதழுக்குத் துணையாசிரியராகவும் ஆக்கினார். அவ்விதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும் இவர் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் 1912இல் தமிழ்ப் பேரகராதியைத் (Tamil Lexicon) தயாரிக்க அரசு முனைந்தபோது இராகவய்யங்கார் அலுவலகத்தின் தலைமைப் புலவராக நியமிக்கப்பெற்றார். சென்னையில் தமிழ்க் கல்விச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “தமிழர்நேசன்” என்னும் திங்களிதழுக்கு மதிப்பியல் ஆசிரியராக இவர் ஊதியமின்றிப் பணியாற்றினார். மேலும் இவர் சென்னையிலிருந்து வெளிவரும் ‘கலைமகள்’ என்னும் திங்களிதழுக்கும் மதிப்பியல் ஆசிரியர்களுள் ஒருவராகி அவ்விதழிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் சென்னைப் பல்கலைக்கழகக் கல்விக்குழு தேர்வுக்குழு இரண்டிலும் பணியாற்றியுள்ளார். இவர் தாம் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் சிலவற்றை ஆங்கில மொழியாக்கம் செய்து ஆங்கில இதழ்களிலும் வெளியிடுமாறு செய்தார். சென்னையில் பேரகராதிப் பணி முடிவுற்ற பின் 1939இல் இவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி அரசாங்கத்தார் இவருக்கு இராவ் சாகிபு என்ற பட்டத்தினை வழங்கினர்.

    பின்னர் சென்னை இலயோலாக் கல்லூரியில் மதிப்பியல் தமிழ்ப் பேராசிரியராகவும், திருவிதாங்கூடர்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகவும் தொண்டாற்றினார்.இராமநாதபுரம் சமத்தானத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமித்தேவரும், அவர் புதல்வரான பாண்டித்துரைத்தேவரும் சிறந்த தமிழ்க் கவிஞர்களாகவும் செந்தமிழ் புரவலர்களாகவும் விளங்கியதை விளக்கும் வகையில் செந்தமிழ் வளர்த்த தேவர்கள் என்னும் நூலான நன்றிக் கடமையுடன் இயற்றினார்.

    சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தார் 1955இல் இவரது தமிழ்த் தொண்டினைப் போற்றிக் கேடயம் வழங்கிப் பாராட்டினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரது பன்னூற் புலமையினையும், பதிப்பாசிரியர் அனுபவத்தினையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பி இவரைக் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவில் சிறப்பிடம் பெறச் செய்தது. இவரது பேருதவியால் வெளிவந்த கம்பராமாயணச் சுந்தரகாண்டப் பதிப்பு அறிஞர்களால் இன்றும் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இவரது எண்பதாம் ஆண்டு நிறைவு விழா 1958இல் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. அவ்வமயம் இவர் எழுதிய வினைத்திரிபு விளக்கம் வெளியிடப் பெற்றது. வரலாற்று ஆய்வு நோக்கில் இவர் எழுதிய வேளிர் வரலாறு, சேரன் செங்குட்டுவன், கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி, ஆழ்வார்கள் காலநிலை, சேர வேந்தர் தாய் வழக்கு, இலக்கியச் சாசன வழக்காறுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவர்தம் வரலாற்று ஆய்வினைப் போற்றும் வகையில் கொழும்பு வி.சே.தம்பிப்பிள்ளை, வேளிர்வரலாறு என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

    இவர் நல்ல கவிஞர். இளமை முதல் முதுமை வரையில் அவ்வப்போது பாடிய கவிதைகள் பலவும் செந்தமிழ் முதலிய இதழ்களில் வெளியாகியுள்ளன.

    பதிப்பு நூல்கள்

    இவர் பதிப்பித்த நூல்களுள் அரிச்சந்திர வெண்பா, கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை, சந்திரலோகம், சிதம்பரப் பாட்டியல், திருக்கலம்பகம், திருச்சிராமலை அந்தாதி, திருவைகுந்தன் பிள்ளைத் தமிழ், நரிவிருத்தம், பெருந்தொகை விக்கிரமசோழனுலா ஆகியவை சொந்தப் பதிப்புகளாகும். இவற்றைத் தவிர ஆராய்ச்சித் தொகுதி, இலக்கியக் கட்டுரைகள், கட்டுரைமணிகள், தெய்வப் புலவர் கம்பர் ஆகியவை இவர் மகன் வழி வெளிவந்த பதிப்புகளாகும். சேரவேந்தர் தாய வழக்கு, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, வேளிர் வரலாறு ஆகிய மூன்றும் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்புகளாகும். ஆழ்வார்கள் காலநிலை, இலக்கியச் சாசன வழக்காறுகள் கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி, செந்தமிழ் வளர்த்த தேவர்கள், சேரன் செங்குட்டுவன் திருக்குறள் பரிமேலழகருரை (ஆராய்ச்சி குறிப்புகளுடன்) திருவிட வெந்தை எம்பெருமான் நூற்பொருட் குறிப்பு (ஆராய்ச்சி குறிப்புகளுடன்) ஆகியவை பிற பதிப்புகளாகும். நிகண்டகராதியும் இவரால் செப்பம் செய்யப் பெற்றுள்ளது. நல்லாசிரியராகவும், இதழாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும், வரலாற்றாய்வாளராகவும், நாநலமுடையவராகவும், கவிஞராகவும், தமிழ்த் தாய்க்குத் தொண்டாற்றிய இவர் 2.2.1960இல் காலமானார்.

    துணை நூல்கள்

    டாக்டர் வே.இரா.மாதவன், சுவடிப் பதிப்பியல், பக். 83 டிசம்பர் 2000. பாவை வெளியீட்டகம், 30 நட்சத்திர நகர், முதல் தெரு, தஞ்சாவூர் – 5.

    வாழ்வியல் களஞ்சியம், தொகுதி மூன்று, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர்-10, பக். 495.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:16:27(இந்திய நேரம்)