Primary tabs
4.0 பாட முன்னுரை
உயிர் ஈற்றுப் புணரியலில் எல்லா உயிர் ஈறுகளுக்குமான சிறப்புப் புணர்ச்சியை விளக்கிக் கூறிய நன்னூலார் ஒவ்வோர் உயிர் ஈற்றிற்குமான புணர்ச்சி விதிகளை, அகர ஈற்றுச் சிறப்பு விதிகள், ஆகார ஈற்றுச் சிறப்பு விதிகள் எனத் தனித் தனியாகக் கூறுகிறார்.
மொழிக்கு இறுதியில் பன்னீர் உயிர்களும் வரும் என்கிறார் நன்னூலார். இவற்றுள் எ என்பது வினா எழுத்து என்ற நிலையில் மட்டும் ஈறாகும். இதனோடு நாற்கணமும் புணர்வது பற்றி உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சியில் ‘எகர வினா முச்சுட்டின் முன்னர்’ என்று தொடங்கும் நூற்பாவில் பேசினார். இதனைச் சென்ற பாடத்தில் பார்த்தோம்.
ஒ என்பது தனித்து ஈறாகாது. மெய்யோடு சேர்ந்து ஈறாகும்போது நகர மெய்யுடன் சேர்ந்து ‘நொ’ என்ற ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும். நொ என்ற சொல் புணர்ச்சியில் வருவது பற்றி ‘எண்மூ எழுத்து’ என்று தொடங்கும் பொதுப்புணர்ச்சி பற்றிய நூற்பாவில் கூறியுள்ளார், இதனையும் ஏற்கெனவே பார்த்துள்ளோம்.
ஔ என்னும் உயிர் கௌ, வௌ ஆகிய சொற்களில் மட்டுமே ஈறாகும். இவை சிறப்பில்லாதவை. எனவே எ, ஒ, ஔ ஆகிய மூன்று உயிர்களும் நீங்கலான பிற ஒன்பது உயிர் ஈற்றுச் சிறப்பு விதிகள் பற்றி, உயிர் ஈற்றுப் புணரியலில் பேசுகிறார்.
ஈகார ஈற்றுச் சிறப்பு விதியில் அவர் குறிப்பிடும் விதிகள் பெரும்பாலும் இடக்கர் அடக்கல் சொல் (பொது இடத்தில் பலர் முன் கூறத்தகாத சொல்) பற்றியனவாக உள்ளன.
எனவே ஈகார ஈற்றைத் தவிர்த்து, ஏனைய எட்டு உயிர் ஈற்றுச் சிறப்புவிதிகளை இப்பாடத்தில் ஒன்றன்பின் ஒன்றாகச் சான்றுகளுடன் விளக்கிக் காண்போம்.