தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உகர ஈற்றுச் சிறப்பு விதிகள்

  • 4.4 உகர ஈற்றுச் சிறப்பு விதிகள்

    உகர ஈறு இருவகைப்படும். 1. முற்றியலுகர ஈறு 2. குற்றியலுகர ஈறு. ஒரு மாத்திரை அளவாய் ஒலிக்கும் உகரம் முற்றியலுகரம் எனப்படும். ஒரு மாத்திரையிலிருந்து குறுகி அரை மாத்திரை அளவாய் ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். நன்னூலார் மொழிக்கு இறுதியாகும் பன்னிரண்டு உயிர்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கும் உகர உயிர் முற்றியலுகரமே ஆகும். குற்றியலுகரம் நன்னூல் ஆசிரியரால் மொழிக்கு இறுதியாகும் 24 எழுத்துகளுள் ஒன்றாகத் தனியே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நன்னூலார் உகர ஈற்றுச் சிறப்பு விதிகள் பற்றிக் கூறும்போது, முதற்கண் முற்றியலுகர ஈற்றுச் சிறப்பு விதிகளைக் (நன்னூல், 179 - 180) கூறுகிறார். அதன் பின்பே குற்றியலுகர ஈற்றுச் சிறப்பு விதிகளைக் கூறுகிறார். குற்றியலுகர ஈற்றுச் சிறப்பு விதிகள் அடுத்த பாடத்தில் காணப்படும். இங்கே முற்றியலுகர ஈற்றுச் சிறப்பு விதிகளே கூறப்படுகின்றன.

    • சில முற்றியலுகர ஈற்றுச்சொற்கள் முன்னர் வல்லினம்

    ஒடு என்னும் மூன்றாம் வேற்றுமை உருபுக்கும், அது என்னும் ஆறாம் வேற்றுமை உருபுக்கும், இயல்பாகவும், விகாரப்பட்டும் வரும் எண்ணுப்பெயர்களுக்கும், வினைத்தொகைக்கும், அது, இது, உது என்னும் சுட்டுப்பெயர்களுக்கும் இறுதியாகிய முற்றியலுகரத்தின் முன்னர் வருகின்ற வல்லினம் இயல்பாகும்.

    மூன்று, ஆறு உருபு, எண், வினைத்தொகை, சுட்டு, ஈறு
    ஆகும் உகரம் முன்னர் இயல்பாம்.                           (நன்னூல், 179)

    ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப் பெயர்களில் முற்றியலுகர ஈற்று எண்ணுப் பெயர் ஏழு என்பது மட்டுமே ஆகும். மற்ற ஒன்று, இரண்டு மூன்று முதலான எண்ணுப்பெயர்கள் எல்லாம் குற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயர்கள் ஆகும்.

    ஒன்று, இரண்டு, ஆறு, ஏழு என்ற நான்கு எண்ணுப் பெயர்களும் புணர்ச்சியில் விகாரப்பட்டு முறையே ஒரு, இரு, அறு, எழு என முற்றியலுகர ஈறாக வரும். இவற்றை மொழியியலார் எண்ணுப்பெயரடைகள் (Numerical Adjectives) என்று குறிப்பிடுகின்றனர். காரணம் இவை இரு கோடுகள், அறு படைவீடுகள் எனப் பெயருக்கு அடையாக வருவதால் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

    இந்நூற்பாவில் நன்னூலார் குறிப்பிடும் முற்றியலுகரப் புணர்ச்சி விதிகள் ஐந்து. இவற்றினைச் சான்றுடன் காண்போம்.

    1.

    மூன்றாம் வேற்றுமைக்கு உரிய ஒடு உருபின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.

    சான்று:

    இராமனொடு + சென்றான் = இராமனொடு சென்றான்
    கண்ணனொடு + படித்தான் = கண்ணனொடு படித்தான்

    2.

    ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது உருபின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.

    சான்று:

    இராமனது + கை = இராமனது கை
    கண்ணனது + தலை = கண்ணனது தலை

    3.

    (i) இயல்பாக வரும் முற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயர் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.

    சான்று:

    ஏழு + கடல் = ஏழு கடல்

    (எண்ணுப்பெயர்களில் ஏழு என்ற எண்ணைத் தவிர ஒன்று, இரண்டு முதலிய பிற எண்ணுப்பெயர்கள் குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் ஆகும்.)

    (ii) விகாரப்பட்டு வரும் முற்றியலுகர ஈற்று எண்ணுப்பெயர் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும். (விகாரப்பட்டு வருதல் = சொல் உருமாறி வருதல். ஒன்று என்பது ஒரு எனவும், இரண்டு என்பது இரு எனவும், ஆறு என்பது அறு எனவும் வருதல்)

    சான்று:

    ஒரு + கை = ஒரு கை
    இரு + படை = இரு படை
    ஒரு + புறம் = ஒரு புறம்
    இரு + புறம் = இரு புறம்
    அறு + படைவீடு = அறுபடைவீடு
    எழு + கடல் = எழுகடல்

    4.

    வினைத்தொகையில், முற்றியலுகர ஈற்று வினைப்பகுதிக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.

    சான்று:

    நடு + கல் = நடுகல் (நட்ட, நடுகின்ற, நடும் கல்)
    சுடு + சோறு = சுடுசோறு (சுட்ட, சுடுகின்ற, சுடும்சோறு)
    வரு + புனல் = வருபுனல் (வந்த, வருகின்ற, வரும்புனல்)

    5.

    அது, இது, உது என்னும் மூன்று சுட்டுப் பெயர்களின் முன் வரும் வல்லினம் இயல்பாகும்.

    சான்று:

    அது + கண்டான் = அது கண்டான்
    இது + சிறியது = இது சிறியது
    உது + பெரியது = உது பெரியது

    சுட்டுப் பெயர்களின் முன்னர் வல்லினம் இயல்பாகும் எனவே, எது என்ற முற்றியலுகர ஈற்று வினாப்பெயர் முன்னர் வரும் வல்லினமும் இயல்பாகும்.

    சான்று :

    எது + கண்டான் = எது கண்டான்?
    எது + சிறியது = எது சிறியது?

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 18:50:14(இந்திய நேரம்)