தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்-5.3 பண்பாட்டில்

  • 5.3 பண்பாட்டில் மக்கள் பங்களிப்பு

    Audio

    தமிழர் நீண்ட காலமாகக் கடைப்பிடித்த வாழ்க்கை நெறிகளும் பண்புகளுமே அவர்தம் பண்பாடாக உருவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு தமிழனும் இதற்குத் தன் பங்களிப்பைச் செய்து வந்துள்ளான்.

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
    அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
    ஆரம் படைத்த தமிழ்நாடு

    (பாரதியின் தமிழ்நாடு : 7)

    /courses/degree/c031/c0311/html/c03110ad.gif (1294 bytes)


    திருவள்ளுவர்

    இதோ திருவள்ளுவரின் நெடிய சிலையைக் காணுங்கள்! இதோ இளங்கோவடிகள். அவர் உருவாக்கிய கண்ணகி கையில் சிலம்புடன் நிற்கும் கோலம் காணுங்கள். தமிழ்ப் பண்பாட்டை உருவாக்கிய பெரியோர்கள் எல்லாம் சென்னைக் கடற்கரையில் சிலைவடிவில் நிற்பதைக் காணுங்கள். தமிழர் பண்பாட்டிற்குத் தகுந்தாற்போல் இராமாயணக் கதை நிகழ்ச்சிகளை மாற்றி எழுதினானே கம்பன் அவன் புன்னகைப்பது காணுங்கள்.

    5.3.1 ஆண்

    தமிழர் பண்பாட்டில் ஆண்மகனுக்கெனச் சில பங்களிப்புகள் இருந்துள்ளன. போர்ச்சூழல் நிரம்பிய பழைய காலச் சமூகத்தில் ஆணின் பங்கு பெரிதாக இருந்தது.

    வினையே ஆடவர்க் குயிரே

    என்று கூறுகிறது பழைய இலக்கியம். இதன் பொருள் என்ன தெரியுமா? ஆண்மக்களுக்குத் தொழில்தான் உயிர் என்பது இதன் பொருள். ஒரு குடும்பத்திற்கு வேண்டிய பொருளை ஆண்மகன் சம்பாதிக்க வேண்டும். சமூகத்தில் பிறர்க்கு உதவவும் அறம் செய்யவும் வேண்டும். பொருளை அவன் தேடியாக வேண்டும். பொருள் தேடுவது என்பது எளிதான செயலா? மனைவி மக்களைப் பிரிந்து சென்று, உடம்பை வருத்திப் பொருளைச் சம்பாதிக்க வேண்டும்.

    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்

    (குறள்: 615)

    /courses/degree/c031/c0311/html/c03110ad.gif (1294 bytes)

    என்கிறார் திருவள்ளுவர். அப்படியென்றால் என்ன? இன்பத்தை விரும்ப மாட்டான். தொழிலைப் பெரிதென்று கருதுவான். இப்படிப்பட்டவன்தான் தன் உறவினரின் துன்பம் துடைக்கும் தூண் போன்றவன் என்பதாகும்.

    5.3.2 பெண்

    தமிழ்ச் சமூகத்தில் பெண் எப்படிப்பட்டவள் தெரியுமா? பெண்ணைக் குடும்ப விளக்கு என்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளைக் கொண்டவள் அவள். அச்சம் என்பது அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுதல். அதாவது தவறு செய்ய அஞ்சும் மனம் பெற்றிருத்தல். நாணம் என்பது வெட்கம். மடம் என்பது தனக்கென்று அறிவு இருந்தாலும் தந்தை, தாய், கணவன் ஆகிய பெரியோர்கள் காட்டிய வழியில் அவ்வழியிலிருந்து தவறாமல் செல்லும் போக்கு. மூத்தோர் கற்பித்த வழியில் ஆராய்ச்சி செய்யாமல் நடப்பதே மடம். பயிர்ப்பு என்பது தனக்கு அறிமுகம் இல்லாதவற்றிடமிருந்து ஒதுங்கி நிற்கும் மனப்பாங்கு. இந்நான்கும் தமிழ்ப்பெண்ணின் பண்புக் கூறுகள். ஆனாலும் அவள் வீரமில்லாதவளாகவும் போர்க்குணம் இல்லாதவளாகவும் இருக்க மாட்டாள். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அவள் செயல்படுவாள். ஒரு பெண்பாற்புலவர் பாடும் பாட்டின் கருத்தைக் கேளுங்கள்!

    “பெற்றுப் பாதுகாத்தல் என்னுடைய கடமையாகும்.
    வீரனாக்குதல் தந்தைக்குள்ள கடமையாகும்.
    வேலை அடித்துத் திருத்திக் கொடுத்தல் கொல்லனுடைய கடமையாகும்.
    நல்லொழுக்கத்தைக் கற்பித்தல் அரசனுடைய கடமையாகும்.
    ஒளிவிடும் வாட்படையால் போரில் ஆண்யானைகளை வென்று வருதல் ஆண்மகனது கடமையாகும்"

    என்கிறார் புலவர்.

    வீரக்குடியிற் பிறந்த பெண் இப்படித்தான் இருப்பாள். முதல்நாள் போரிலே தந்தை இறந்துவிட்டான். மறுநாள் கணவன் இறந்துவிட்டான். இந்த நிலையில் இன்றும் போர்ப்பறை கேட்கிறது. என்ன செய்வாள்? வீரக்குடும்பத்துப் பெண் என்ன செய்தாள் தெரியுமா? தனக்கு ஒரே ஒரு மகன் இருப்பதை நினைந்தாள். அவனை அழைத்து வந்து வெள்ளையாடை உடுத்தித் தலையை ஒழுங்குசெய்து. போருக்குப் போ என அனுப்பினாள்.  இந்தச் செய்தியைப் புறநானூற்றில் காணலாம்.

    5.3.3 சான்றோர்

    ஒரு சமூகத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் சான்றோர்க்குப் பெரும்பங்கு உண்டு. அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்து பண்புடையவர் இச்சான்றோர். இவர்களைக் கொள்கைச் சான்றோர் என்றும், புலன்களைக் கட்டுப்படுத்தி அடங்கிய நிலையில் இருப்பவர் என்றும் குறிப்பிடுவர். ஒரு மகனைச் சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடன் என்பர். சான்றோர் என்பவர் அரசன் தவறு செய்தாலும் அஞ்சாமல் திருத்துபவர்.

    கோவூர் கிழார்

    கோவூர் கிழார் என்ற சான்றோர் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியைக் காணுங்கள்! கிள்ளிவளவன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் மலையமான் என்ற அரசன் மீது படையெடுத்துச் சென்று வென்றான். மலையமானின் மகன்கள் இருவரையும் சிறைப்பிடித்து வந்து யானையை ஏவி அவர்களைக் கொல்லுமாறு கூறினான்.  இதைப் பொறுக்காத கோவூர் கிழார் என்ற சான்றோர் கிள்ளிவளவனிடம் சென்றார்.

    "அரசே! நீ புறாவொன்று அடைக்கலமாக வந்ததென்று காப்பாற்றிய சிபிச் சோழன் மரபில் வந்தவன். இந்தச் சிறுவர்களோ புலவர்களின் வறுமைத் துயரைத் துடைக்கும் வள்ளலின் பிள்ளைகள். யானையைக் கண்டவுடன் தம் அழுகையை மறந்து ஒருவித அச்சத்தோடு இச்சிறுவர்கள் இருக்கிறார்கள். இத்தகைய துன்பத்தை இவர்கள் இதற்குமுன் கண்டதில்லை. இது நான் கூறவிரும்பும் செய்தி. பிறகு நீ விரும்பியதைச் செய்துகொள்"

    என்று கூறினார். உடனே கிள்ளிவளவன் சிறுவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டான். பொன்னாலும் மணியாலும் முத்தாலும் செய்யப்பட்ட அணிகலன்கள் கெட்டுப் போகுமானால் அவற்றைச் சரி செய்து கொள்ளலாம். சான்றோர்களின் உயர்ந்த பண்புகள் கெட்டுவிடுமானால் திருத்திப் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது.

     

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1. தமிழரின் புகழ் விருப்பத்தை விளக்குக.

    2. விருந்தோம்பல் தமிழர் வாழ்வில் பெற்ற இடத்தைக் காட்டுக.

    3. வீரத்தைத் தமிழர் போற்றிய வண்ணம் காட்டுக..

    4. பண்பாட்டில் ஆணின் பங்கு யாது?

    5. பண்பாட்டில் பெண்ணின் பங்களிப்பு யாது?

     

புதுப்பிக்கபட்ட நாள் : 21-07-2017 15:44:39(இந்திய நேரம்)