தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்-5.4 காதல்

 • 5.4 காதல் பண்பாடு

  Audio

  காதல் என்பது பாலுணர்ச்சியால் பருவமுற்ற ஆணும் பெண்ணும் ஒருவர்பால் ஒருவர் கொள்ளும் ஈடுபாடு. மற்றவர்கள் அறியாதவாறு காதலர்கள் தங்கள் பார்வையால் அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள். காதல் என்பது உயிரோடு பிணைந்தது. நினைத்தவாறு திருமணம் முடியாவிட்டால் காதலர் இறப்பைத் தேடிக்கொள்ளவும் அஞ்சமாட்டார்கள். காதல் கொண்ட உள்ளம் மாறுவதோ, விட்டுக் கொடுப்பதோ இல்லை. உலகெங்கினும் எல்லாப் பண்பாடுகளிலும் காதல் உறுதியானதாகவும் தெய்வீகமானதாகவும் இருக்கிறது. அப்படியானால் தமிழர் பண்பாட்டில் காதலுக்குரிய சிறப்பிடம்தான் யாது? போன பிறவியிலே கணவன் மனைவியாக இருந்தவர்கள்தாம் இந்தப் பிறவியிலும் கணவன் மனைவி ஆகிறார்கள்; இனிவரும் பிறவிகளிலும் இவர்களே கணவன் மனைவியராக இருப்பார்கள் என்ற நம்பிக்கை தமிழர் பண்பாட்டில் உள்ளது.

  இம்மை மாறி மறுமை ஆயினும்
  நீயாகியர் என்கணவனை
  யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே

  (குறுந்தொகை : 49)

  /courses/degree/c031/c0311/html/c03110ad.gif (1294 bytes)

  என்று குறுந்தொகை கூறுகிறது. இதன் பொருள் என்ன தெரியுமா? இந்தப் பிறவி மாறி அடுத்த பிறவியிலும் நீதான் என் கணவன் நான்தான் உன் மனைவி என்பதுதான் இதன்பொருள். நீயாகியர் என் கணவனை என்றால் நீயே என் கணவன் ஆவாய் என்பது பொருள். யானாகியர் நின்நெஞ்சு நேர்பவள் என்றால் யானே உன் நெஞ்சில் இருப்பவள் என்பது பொருள். எனவே காதல் என்பது ஏதோ திடீரென்று இருவர் சந்தித்துக் கொள்வதில் ஏற்பட்டு விடுவதன்று என்பது தெரியவரும்.

  5.4.1 களவும் கற்பும்

  திருமணத்திற்கு முன் ஒருவனும் ஒருத்தியும் பிறர் அறியாதவாறு காதல் கொள்வர். தாயும் பிறரும் அறியாதவாறு சந்தித்துக் கொள்வர். இதனைத் தமிழர் பண்பாடு களவியல் என்று போற்றுகின்றது.  தலைவியின் தோழி களவுக் காதலுக்குத் துணை செய்வாள். மெல்ல மெல்லக் களவுக் காதலை ஊரார் அறிவர்; அறிந்து மூக்கில் விரல்வைத்து இரகசியமாகப் பேசுவர். ஊரார் இவ்வாறு மறைமொழியாகப் பேசும் நிலை அம்பல் எனப்படும். பின்னர் எல்லாரும் அறியுமாறு தலைமக்களின் காதலைப் பேசுவர். இதனை அலர் தூற்றுதல் என்பர். இந்நிலையில் தோழியும் தலைவியும் தலைவனைத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யத் தூண்டுவர். தலைவியின் காதல் அறிந்த பெற்றோர் தலைவியை வீட்டிலேயே வைத்துப் பாதுகாப்பர். பெற்றோர் முதலில் களவுக்காதலை அனுமதிக்க மாட்டார்கள். பின்பு தலைமக்களின் உள்ள உறுதி அறிந்து உடன்படுவர். பெற்றோர் உடன்படாத நிலையில் தலைவனும் தலைவியும் யாரும் அறியாதவாறு வேற்றூர் செல்வர். இதற்கு உடன்போக்கு எனப் பெயர்.

  திருமணத்திற்குப் பின் நிகழும் வாழ்க்கையைக் கற்பு என்று கூறுவர். கற்பு என்பதற்குக் கல்வி என்பதே பொருள். ஒன்று மறியாத பேதையாக இருந்த தலைமகள் எப்படி இதையெல்லாம் கற்றுக் கொண்டாள் என்று பெற்றோர் வியந்து பேசுவர். தலைவன் வீட்டில் வசதியற்ற சூழ்நிலை இருப்பினும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வாள். தன் முயற்சியால் அந்தக் குடும்ப நிலையை உயர்த்துவாள். "ஒரே ஒரு பசு மாடு மட்டுமே இவள் வந்தபோது இந்த வீட்டில் இருந்தது. இப்போது வருகின்றவர்களுக்கு எல்லாம் விருந்து அளிக்கும் விழாவுடையதாக இந்த வீடு மாறிவிட்டது" என்று வியந்து போற்றும் அளவுக்குத் தலைவி பாடுபடுவாள். கற்பு வாழ்க்கையில் அறவோர், அந்தணர், விருந்தினர் ஆகியோரை இல்லறத்தார் பாதுகாப்பர்.

  5.4.2 திருமணம்

  திருமணம் என்பது ஒரு சடங்கு. ஒருவனையும் ஒருத்தியையும் கணவன் மனைவி என ஆக்கும் இந்நிகழ்ச்சி ஒரு பண்பாட்டின் அடையாளம். மிகப் பழங்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டுதல் இல்லை. வீட்டிற்கு முன்பு இட்ட திருமணப் பந்தலில் மணமக்களை நீராட்டுதல், மக்களைப் பெற்ற மூத்த மகளிர் நெல்லும் மலரும் தூவி வாழ்த்துதல், உழுந்தால் செய்யப்பட்ட களியை எல்லார்க்கும் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளே இருந்தன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தீ வளர்த்தல், தீயை வலம் வருதல், பார்ப்பனர் மந்திரம் ஓதல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல் போன்ற வழக்கங்கள் தமிழர் திருமணத்தில் புகுந்தன. இடைக்காலத்தில் நகரமக்கள் வாழ்வில் திருமணம் வேதநெறிச் சடங்காகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இந்த நிலை மாறியது. பகுத்தறிவு சார்ந்த திருமணங்கள், தமிழ்த் திருமணங்கள் ஆகியன நடைபெறத் தொடங்கின.

  5.4.3 குடும்பக் கடமைகள்

  குடும்பத்தின் தலைவனாகிய ஆண் பொருளைச் சம்பாதிக்க வேண்டும். மனைவி குடும்ப வருவாய்க்குத் தக்க நிலையில் குடும்பத்தை நடத்த வேண்டும். வறுமையை எதிர்த்துத் தலைமக்கள் போராடுவர். பழங்காலக் குடும்ப நிகழ்ச்சி ஒன்றைக் குறுந்தொகை என்ற இலக்கியம் சொல்வதைக் கேளுங்கள்!

  “காந்தள் மலர் போன்ற விரலால் முற்றிய தயிரைப் பிசைந்தாள். பிசைந்த விரல்களை உடுத்திய ஆடையில் துடைத்துக் கொண்டாள். குவளை மலர் போன்ற அவள் கண்களில் குழம்பைத் தாளித்த மணம் சென்று பொருந்தியது. இவ்வாறு தலைவி சமைத்த இனிமையும் புளிப்புமுடைய குழம்பைக் கணவன் இனிதாயுள்ளது என்று உண்டான். அதனால் தலைவியின் மனம் மகிழ்ந்தது.

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குடும்பக் கடமைகளை விளக்கும் குடும்ப விளக்கு என்ற நூலைப் படைத்துள்ளார். இந்த நூலில் பெண் கல்வி கற்றவளாய், இசை முதலிய கலைகள் அறிந்தவளாய், கடைவீதி வணிகம் செய்யத் தெரிந்தவளாய், பொதுத் தொண்டில் விருப்பம் உள்ளவளாய்ப் படைக்கப்பட்டுள்ளாள்.

  பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு
  கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்;
  செம்பு தவலை செழும்பொன் ஆக்கினாள்;
  பைம்புனல் தேக்கினாள்; பற்ற வைத்த
  அடுப்பினில் விளைந்த அப்பம் அடுக்கிக்
  குடிக்க இனிய கொத்துமல்லி நீர்
  இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு
  நிறக்க அன்பு நிறையப் பிசைந்த
  முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்
  "அத்தான்" என்றனள்; அழகியோன் வந்தான்.
  /courses/degree/c031/c0311/html/c03110ad.gif (1294 bytes)

  இவ்வாறு குடும்பக் கடமைகளைச் செய்யும் பெண்ணைக் காட்டுகிறார். ஆண்மகன் வீட்டின் புறத்தே வேலை செய்வான். போர் உண்டாகும்போது பங்கேற்பான். வேறுநாடு சென்று பொருள் ஈட்டி வருவான். வேட்டையாடுதல், கடலில் மீன் பிடித்தல், ஆனிரைகளை மேய்த்தல், வயலை உழுதல் போன்ற அந்தந்த நிலத்துக்குரிய பணிகளைச் செய்வான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 16:16:53(இந்திய நேரம்)