Primary tabs
சங்க காலம் வரையில் தமிழ்நாட்டில் சமயம் ஓர் ஆழமான இடத்தைப் பெறவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் தமிழர் வாழ்வில் சமயம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ சமணர்; அவருடைய அண்ணன் செங்குட்டுவன் சைவன்; இளங்கோவின் நண்பர் சீத்தலைச் சாத்தனார் பௌத்தர். இந்தச் சமய வேறுபாடுகள் அவர்களைப் பிரித்து வைக்கவில்லை. வைதிக சமயம், பௌத்தம், சமணம், ஆசீவகம், சாங்கியம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு காலத்தில் வளர்ந்தன. பிற்காலத்தில் சமயப் போராட்டங்கள் நிகழ்ந்தன. சான்றோர் இப்போராட்டங்களைக் கண்டித்துச் சமரச வாழ்வை வற்புறுத்தினர்.
என்று இராமலிங்க அடிகளார் சமயங்கள் என்ற ஆறுகள் எல்லாம் இறைவன் என்ற கடலை அடைகின்றன என்றார். தமிழகத்தில் சமயப் போர்கள் பூசல்கள் குறைவாகவே நிகழ்ந்துள்ளன. பிற்காலத்தில் இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயங்கள் தமிழகத்தை அடைந்தன.
5.5.1 நல்லிணக்கம்
சமணர்களுக்கு மலைகளில் குகைகளை அரசர்களும் வணிகர்களும் செய்து தந்தனர். சைவநெறியில் வந்த அரசனின் அவையில் சமண பௌத்த நூல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. பௌத்த இலக்கண நூலாகிய வீரசோழியம் வீரராசேந்திரன் என்ற சைவநெறி தழுவிய சோழன் பேரால் அமைந்தது. நாகைப்பட்டினத்தில் புத்தவிகாரை கட்டுவதற்கு இராசராச சோழன் இடமளித்தான். தில்லையில் ஒரே வளாகத்தில் நடராசர் சன்னதியும் கோவிந்தராசப் பெருமாள் சன்னதியும் இன்றும் அமைந்து வழிபாடு செய்யப்படுகின்றன. வள்ளல் சீதக்காதி பிற சமயப் புலவர்களை ஏற்றுப் பாராட்டிப் பொருள் உதவி செய்துள்ளார். ஜீவரத்தின கவி என்பவர் மதீனா நகர்மீது கலம்பகம் பாடியுள்ளார். இரண்டாம் சரபோசி மன்னரைச் சுவார்ட்சு பாதிரியாரே வளர்த்து அரசராவதற்கு உதவி செய்தார். இன்றும் கம்ப இராமாயணத்தை ஆராய்ந்து நூல்கள் படைக்கும் இசுலாமியர், தேம்பாவணியில் ஈடுபடும் சைவர், சைவ சித்தாந்த சாத்திரம் கற்கும் கிறித்துவர், சீறாப்புராணத்தை விரித்துரைக்கும் வைணவர் தமிழ்நாட்டில் உள்ளனர். சமய நல்லிணக்கம் தமிழர் பண்பாட்டின் இயற்கையான பண்பாகும்.
5.5.2 மனிதநேயம்
புத்தர் மயங்கி வீழ்ந்து கிடக்கிறார். ஆடு மேய்க்கும் சிறுவன் அவரைக் காண்கிறான். தான் அவரைத் தொடக்கூடாது எனக்கருதி ஆட்டை இழுத்து வந்து அவர் முகத்துக்கு அருகில் நிறுத்திப் பாலைக் கறந்து அவர் வாயில் விழச்செய்கிறான். புத்தர் மூர்ச்சை நீங்கிக் "கலயத்தில் பாலைக் கறந்துதர" வேண்டுகிறார். அவன் நான் தாழ்ந்த குலத்தவன் என்கிறான். உடனே புத்தர் "ஓடுகின்ற இரத்தத்தில், ஒழுகும் கண்ணீரில் தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதில்லை அப்பா! இரத்தம் எல்லார்க்கும் சிவப்பு நிறம். கண்ணீர் யாரிடத்திருந்து வந்தாலும் கரிக்கும் தன்மையுடையது. இதில் உயர்வு ஏது? தாழ்வு ஏது" என்று கூறி அவனிடம் பால் பெற்று அருந்துகின்றார். சாதி வேறுபாடின்மையைப் புத்தரும் ஞானியர் பலரும் எடுத்துக் கூறியுள்ளனர். கொலை செய்த கொடியவராயிருந்தாலும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும் அதுவே சீவகாருணியம் என்று இராமலிங்க வள்ளலார் கூறியுள்ளார்.
என்று பாரதிதாசன் மனிதநேயம் கொண்டு புதிய உலகம் படைக்கத் தூண்டுகிறார்
5.5.3 உயிரிரக்கம்
கொல்லாமை என்பது ஓர் அறம். ஊன் உணவு கொள்பவர்கள் கூடச் சில காலங்களில் அவ்வகை உணவை விலக்கி நோன்பு நோற்கின்றனர். உயிர்கள் பசி முதலிய துன்பத்தால் வருந்தும்போது அதனைப் போக்க வேண்டியது செல்வமுடையவர் கடமையாகும்.
என்று இல்லாதவர்க்கு உணவிடுதலைத் திருவள்ளுவர் பெரிய அறம் என்கிறார். கண்ணியும் வலையும் தூண்டிலும் கண்டபோதெல்லாம் உள்ளம் நடுங்கினேன் என்கிறார் இராமலிங்க வள்ளலார். வண்டுகள் பூக்களில் தேன் அருந்தும்போது இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தேரின் மணிகளை ஒலி செய்யாதவாறு இழுத்துக் கட்டிவிட்டான் அருள் உணர்வுடைய தலைவன் என்று கூறுகிறது பழந்தமிழ் இலக்கியம். தேர் செல்லும்போது மழைக்காலத்தில் தம்பலப் பூச்சிகள் சக்கரத்தில் சிக்காதவாறு ஒதுக்கி ஓட்டினான் என்றும் அவ்விலக்கியம் கூறுகின்றது. எந்த உயிரையும் பாதுகாப்பதே மனிதனின் கடமையாகக் கருதியது தமிழ்ப் பண்பாடு.