தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.1 வட இந்தியச் சமயங்கள்

 • 5.1 வட இந்தியச் சமயங்கள்

  AudioE

  வட இந்தியாவில் ஆரிய நெறியினரால் உண்டாக்கப் பெற்ற நான்கு வேதங்கள் வைதிக சமயம் உருவாக அடித்தளமாக அமைந்தன. வேத நெறியைக் கூறுவதே வைதிக சமயமாகும். அக்னி, வாயு, வருணன், இந்திரன், எமன் முதலான பல தெய்வங்களை வழிபாடு செய்து கொண்டிருந்த வைதிக சமயம் ஒரு தெய்வக் கொள்கை உடையதாக உருப்பெற்றது. அச்சமயத்தால் குறிப்பிடப்பெற்ற ஒரு தெய்வம் பிரஜாபதியாகும். மனிதன் செய்யும் கருமங்களுக்குத் தகுந்தாற்போலப் பிறவிகள் அமையும் என்ற கருத்தை வேதங்கள் கூறுகின்றன. உயிரானது பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; புதிதாக உண்டாகிவிடுவதும் இல்லை; உண்டாகி இல்லாமல் போவதும் இல்லை; உயிர் மரணம் அடைவதும் இல்லை. இறப்பை அடைவது உடல் மட்டுமே என்று வைதிக சமயத்தின் முக்கியமான நூலாகிய பகவத்கீதை கூறுகின்றது.

  வைதிக சமயத்திற்கு எதிராக வடநாட்டில் தோன்றிய சமயங்கள் லோகாயதம், சமணம், பௌத்தம் ஆகியனவாகும். இவற்றில் சமணமும், பௌத்தமும் மக்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றன. இதற்குக் காரணமானவர்கள் மகாவீரரும் புத்தரும் ஆவார்கள்.

  5.1.1 வைதிக மறுப்பு

  வைதிக சமயம் கூறிய ஆத்மாவைப் பற்றிய கொள்கையில் சமண பௌத்த சமயங்கள் மாறுபாடு கொண்டிருந்தன. ஆத்மாக்கள் பல என்பது சமணர்களுடைய கருத்தாகும். உலகத் தோற்றத்திற்கு மூலப்பொருள் ஒன்றில்லை. அவை பலவாகும். அவற்றை ஜீவன், அஜீவன் என்று இரண்டு வகைப்படுத்தலாம் என்பது சமணர்களுடைய கொள்கையாகும். பௌத்த சமயம் கடவுளைப் பற்றியோ ஆத்மாவைப் பற்றியோ ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஒரு பொருளைக் காணுதல் அதனைப் பற்றிக் கருதுதல் ஆகியவற்றின் வழியாகவே உண்மையை அறியமுடியும் என்று கூறும் பௌத்தம், வேத விளக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு வைதிக சமயத்தை மறுத்த இருபெரும் சமயங்களாகச் சமணமும் பௌத்தமும் திகழ்கின்றன.

  5.1.2 கடவுள் சிந்தனையில் மாறுபாடு

  வைதிக சமயம் பல்வேறு தெய்வங்களை வழிபட்ட நிலையிலிருந்து பிரஜாபதி அல்லது விசுவகர்மன் எனும் ஒரு தெய்வம் உள்ளதென்ற கருத்துக்கு வந்தது. நானே கடவுள் என்று ஒவ்வொரு ஆத்மாவும் உணரவேண்டுமென்பதே வைதிக சமயத்தின் கருத்தாகும். சமண சமயம் இந்த உலகத்தைப் படைக்க ஒரு கடவுள் வேண்டியதில்லை என்று கூறுகின்றது. உலகம் படைக்கப்பட்டது என்றும் சமணர் கூறுவதில்லை. கடவுள் இல்லை என்ற வாதத்தைத் தோற்றுவித்தவர் சமணர்களே ஆவர். சமணம் அறிவு பக்குவம் அடைந்த மனிதனைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி வழிகாட்டச் செய்கின்றது. பௌத்தர் கடவுளைப் பற்றிய எக்கருத்தும் கொண்டவர்களாக இல்லை. வினையைத் தனக்கு உரியவர்களோடு சேர்க்க ஒரு கடவுள் வேண்டியதில்லை என்பது பௌத்தக் கொள்கையாகும். இவ்வாறு கடவுளைப் பற்றிய கருத்தில் சமணம், பௌத்தம் வைதிகத்தோடு மாறுபடுகின்றன.

  5.1.3 புதிய அறநெறிகள்

  சமண, பௌத்த சமயங்கள் தமிழர்கள் பண்பாட்டில் பல புதிய அறநெறிகளை வகுத்தளித்தன. அவற்றில், கொல்லாமை ஒன்று.

  வைதிக சமயத்தில் உயிர்ப் பலிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. பழந்தமிழர் வாழ்விலும் வழிபாட்டிலும் பலியிடுதல் இடம் பெற்றிருந்தது. சமண, பௌத்த சமயங்களின் நுழைவிற்குப் பிறகு தமிழ்நாட்டில் கொல்லாமை ஒரு பெரிய அறமாகக் கருதப்பட்டது. அதேபோலக் கள்ளுண்ணுதலும் புறக்கணிக்கத்தக்க ஒரு செயலாகச் சமண, பௌத்த சமயங்களால் கூறப்பட்டது. தமிழ்நாட்டிலே பண்டை இலக்கியங்கள் கள்ளுண்ணுதலைத் தவறானதாகக் கூறவில்லை. திருக்குறள் போன்ற அறநூல்கள் கள்ளுண்ணுதலைக் கண்டிக்கின்றன. அதற்குக் காரணம் சமண, பௌத்த சமயங்களின் பரவலே என்று அறிஞர் கூறுகின்றனர். உயிர், உடம்பு, பொருள், இளமை ஆகியன நிலையாக நில்லாமல் மறைந்துவிடக் கூடியன. அவற்றை உணர்ந்து ஒரு மனிதன் அறத்தைச் செய்பவனாக மாறவேண்டுமென்று சமண, பௌத்த சமயங்கள் வற்புறுத்தின. துறவுநெறி, பணிவு, மனித நேயம் என்று சமண, பௌத்த சமயங்கள் கற்பித்தன. இந்நெறிகள் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:54:17(இந்திய நேரம்)