தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.5 பௌத்தர் தமிழ்த் தொண்டு

 • 5.5 பௌத்தர் தமிழ்த் தொண்டு

  English AudioE

  சமயப் போராட்டத்தில் பௌத்த நூல்கள் பல அழிந்துவிட்டன. இன்று தமிழிலுள்ள பௌத்த நூல்கள் மிகச் சிலவேயாகும். இலக்கியம், இலக்கணம், பிரபந்தம் என்ற மூன்று வகையான படைப்புகளைப் பௌத்தர் தமிழுக்கு அளித்துள்ளனர்.

  பௌத்தரின் தமிழ்ப் படைப்புகள்

  இலக்கியம்

  காப்பியம்

  மணிமேகலை, குண்டலகேசி

  * பிற

  விம்பிசார கதை, சித்தாந்தத் தொகை, திருப்பதிகம்.

  இலக்கணம்

  வீரசோழியம்

   * இம்மூன்று நூல்களும் காலத்தினால் அழிந்தவை. குண்டலகேசி முழுமையாகக் கிடைக்கவில்லை.

  5.5.1 இலக்கியம்

  தமிழில் இன்றைக்கு முழுமையாக கிடைக்கும் பௌத்த இலக்கியம் மணிமேகலை என்ற ஒன்றாகும். இது சிலப்பதிகாரக் கதையைத் தொடர்ந்து எழுதப்பெற்ற ஒரு காப்பியமாகும். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலை பௌத்த நெறியைத் தழுவி அறங்கள் பல செய்ததை இந்நூல் கூறுகின்றது. இந்த நூலை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பவர் ஆவார். வைதிக சமயத்தை இந்த நூல் கடுமையாக மறுத்து உரைக்கின்றது. இந்தச் சமயத்திற்குரிய மற்றொரு காவியம் குண்டலகேசி ஆகும். இந்த நூல் கிடைக்காது போயினும், இதன் செய்யுள்கள் சில பிற நூல்களில் எடுத்தாளப் பெற்று நமக்குக் கிடைக்கின்றன. இதேபோல விம்பிசார கதை என்ற நூலும் நமக்குக் கிடைக்கவில்லை. இது விம்பிசாரன் என்ற அரசனுடைய கதையாகும்.

  5.5.2 இலக்கணம்

  பௌத்த சமயத்திற்குரிய இலக்கண நூல்களில் நமக்கு முழுமையாக இன்று கிடைப்பது வீரசோழியம் என்ற நூலாகும். இந்த நூலை இயற்றியவர் புத்தமித்திரனார் என்பவர். கச்சியப்ப சுவாமிகள் கந்தபுராணத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பொழுது, திகடசக்கரம் எனத் தொடங்கும் பாட்டைப் படித்தார். 'திகழ் + தச + சக்கரம்' என்பதே திகடசக்கரமாகும் என்பது அவர் கருத்து. இவ்வாறு அளித்தற்கு இலக்கணம் எங்கே உள்ளது என்று அவையில் இருந்தவர்கள் கேட்டார்கள். இந்த இலக்கணம் வீரசோழியம் என்ற நூலில் காணப்படுகிறது என்று சுட்டிக் காட்டிய பின்னர் அவையோர் அவ்வாறு சொற்கள் சேர்வதை ஒத்துக் கொண்டார்கள். இந்த நூல் வடமொழி நெறியைத் தழுவி இருந்தாலும், தமிழர்களுக்குரிய பண்பாட்டைக் கூறத் தவறவில்லை.

  5.5.3 பிற நூல்கள்

  சித்தாந்தத் தொகை என்ற பௌத்த நூல் ஒன்று அச்சமயத்தின் சாத்திரக் கருத்துகளைக் கூறுவதாக அமைந்தது. 'நல்வாய்மை அறிந்தவரே பிறப்பறுப்பார்' என்று இந்த நூல் கூறுகின்றது. திருப்பதிகம் என்ற நூல் புத்தர் மீது இயற்றப்பெற்ற தோத்திர நூலாகும். இந்நூலில் தானம், சீலம் முதலான நல்ல குணங்களை உடைய பெருமானாகப் புத்தர் பேசப்படுகிறார். இவ்விரு நூல்களும் இன்று கிடைக்கவில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-10-2017 14:40:41(இந்திய நேரம்)