தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.4 சமணர் தமிழ்த் தொண்டு

 • 5.4 சமணர் தமிழ்த் தொண்டு

  சமண சமயம் தமிழகம் வந்த பிறகு தமிழறிஞர்கள் பலர் சமணத்தைத் தழுவினர். ஊன் உணவு இல்லாத காய்கறி உணவை இப்போது சைவ உணவு எனக் கூறுகிறோம். ஆனால், பழங்காலத்தில் இவ்வகை உணவு ஆருகத உணவு எனப்பட்டது. ஆருகதம் என்பது சமணத்தின் மற்றொரு பெயர் ஆகும். மகாவீரர் என்ற சமணப் பெரியவர் மோட்சம் அடைந்த நாளே தீபாவளி ஆகும். இதனை இந்து சமயம் பிற்காலத்தில் தங்களுடைய விழாவாக ஆக்கிக் கொண்டது. இவ்வாறு மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்திய சமணர்கள், இலக்கிய, இலக்கணங்கள், நிகண்டுகள், சிறு பிரபந்தங்கள் ஆகியவற்றை இயற்றித் தமிழை வளமுடையதாக்கினர்.

  5.4.1 இலக்கியம்

  சங்க காலத்தில் சமண அறிஞர் பலர் இலக்கியப் பணிகளைச் செய்துள்ளனர். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் சமண சமயக் கருத்துகள் பலவற்றைக் கூறும் நூலாகும். சீவக சிந்தாமணி சமண முனிவராகிய திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டதாகும். ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி என்ற மற்றொரு காவியமும் சமணர் அளித்த நன்கொடையாகும். நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, சிறுபஞ்சமூலம், அறநெறிச்சாரம் ஆகிய அறநூல்கள் சமணர் அளித்தவையேயாகும்.

  5.4.2 இலக்கணம்

  தொல்காப்பியம் உயிர்களை ஆறு வகையாகப் பகுத்துக் கூறுகின்றது. அது சமண சமயத்தைச் சார்ந்த கருத்தாகும் என அறிஞர்கள் கூறுகின்றனர். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலும் இதற்குப் பின்னர்த் தோன்றிய நேமிநாதம், நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய இலக்கண நூல்களும் சமணர் படைத்து அளித்தவையேயாகும். தமிழில் அதிக இலக்கண நூல்களை எழுதிய பெருமை சமணர்களையே சார்ந்ததாகும்.

  5.4.3 பிற நூல்கள்

  செய்யுள் நூல்களுக்கு விரிவாக உரை எழுதுகின்ற ஒரு நிலையைச் சமணர்கள் வளர்த்தனர். இது கல்வி பெறுவதற்கு அடிப்படையாக ஆயிற்று. தொல்காப்பியத்திற்கு முதன்முதல் உரை எழுதியவர் இளம்பூரணர் என்ற சமணரே ஆவார். இவர் தமிழ்ப் பண்பாட்டு நிலையைத் தழுவி அந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார். அவரை அடுத்து உரை ஆசிரியர் பலர் தோன்றியுள்ளனர்.

  இந்தக் காலத்தில் அகராதி என்ற நூல் வகையை நாம் அறிவோம். அந்த அகராதிகளுக்கு மூல நூல்கள் என்று குறிப்பிடப்படுவன நிகண்டுகள் என்பனவாகும். நிகண்டுகள் என்பன செய்யுள் வடிவில் உள்ள அகராதிகளேயாகும். அந்த நிகண்டினைத் தோற்றுவித்த பெருமை சமணர்களையே சாரும். திவாகரம், சூடாமணி, பிங்கலந்தை என்ற நிகண்டுகள் சமணர்களால் படைக்கப்பட்டன.

  சிறு காப்பியங்கள் எனச் சொல்லப்படும் ஐந்து நூல்களைச் சமணர்கள் இயற்றித் தந்தனர். மேருமந்தர புராணம் என்ற புராண நூலைத் தந்தவரும் சமணரே ஆவர். இவ்வாறு பலவகை நூல்களைத் தந்த பெருமை சமணர்களுடையதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:54:28(இந்திய நேரம்)