தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பௌத்தம்

 • 5.3 பௌத்தம்

  AudioE

  Click here to view big image

  புத்தரால் தோற்றுவிக்கப் பெற்றதால் இந்தச் சமயம் பௌத்தம் எனப்பட்டது. உலக வாழ்க்கையை வெறுத்த சித்தார்த்தர் கடுமையான தவம் மேற்கொண்டு புத்தர் ஆனார். ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்று அவர் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு அளித்தார். புத்தரான பிறகு ஒருநாள் அவர் அரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தபோது சுஜாதை என்பவள் அவருக்குப் பால் உணவு ஒன்றை அளித்தாள். பசுக்களில் சிறந்த பசுவைத் தேர்ந்தெடுத்து, அதன் பாலைக் கறந்து அதைப் பலமுறை பக்குவம் செய்து சுவை சேர்த்து உலகத்தில் எங்கும் கிடைக்காத உணவாக அதை உருவாக்கியிருந்தாள். புத்தர் அதனை அருந்தினார். அவரிடம் உணவின் சுவையைப் பற்றிக் கேட்டார். புத்தர் புலன்களுக்கு அடிமையாகாதவராக இருந்ததனால் அந்த உணவு அவரைப் பெரிதும் கவரவில்லை. எனினும், நன்றாக இருந்தது என்று கூறினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தரை சுந்தன் என்ற வேடன் விருந்துக்கு அழைத்தான். வருவதாகப் புத்தரும் வாக்குறுதி கொடுத்துவிட்டார். விருந்தின் போது என்ன உணவு செய்திருக்கிறாய்? என்று கேட்டார். நல்ல பன்றியை நான் உணவாக்கி வைத்திருக்கிறேன் என்று சுந்தன் கூறினான். வாக்குறுதி கொடுத்துவிட்ட புத்தரால் அதனை மீற முடியவில்லை. பற்று இல்லாமல், சுவைக்கு அடிமை ஆகாமல் அந்த உணவை உட்கொண்டார்.

  Budhar

  இரவில் வயிற்றுவலியால் புத்தர் துடித்தார். இறப்பு அவரை நெருங்கியது. அப்போது தனக்குப் பக்கத்திலிருந்த ஆனந்தர் என்ற சீடரிடம் “புத்தருக்கு சுஜாதை அளித்த பாலுணவும், சுந்தன் கொடுத்த இறைச்சி உணவும் ஒன்றுதான். புத்தரின் இறப்புக்கு சுந்தன் அளித்த உணவு காரணமில்லை என்று கூறுங்கள் என்று கூறினார். இவ்வாறு எதையும் ஒரு பற்றில்லாமல் அணுகும் வாழ்க்கை முறையைப் பௌத்தம் வகுத்துத் தந்தது.

  5.3.1 தமிழ்நாட்டில் பௌத்தர்

  அசோகச் சக்கரவர்த்தி வடநாட்டு மௌரிய மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர். அவர் வெட்டி வைத்த கல்வெட்டுக்களில் தமிழ் நாட்டில் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் மருத்துவ நிலையங்கள் அமைத்தது குறித்துக் குறிப்புகள் உள்ளன. தர்ம வெற்றி என்ற அகிம்சை நெறியைத் தமிழ்நாட்டில் பரப்புவதை அம்மன்னர் தம் குறிக்கோளாகக் கொண்டார். இச் செய்திகளிலிருந்து அசோகர் காலத்திலேயே பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்பதை அறியலாம். தமிழ்நாட்டின் வழியாக இலங்கைக்கும் பௌத்தம் சென்றது.

  5.3.2 பௌத்த நெறிகள்

  பற்றின் காரணமாகவே பிறப்பும் இறப்பும் உண்டாகின்றன. பற்றைத் துறந்தால் பிறப்பு இறப்பு நீங்கி வீடுபேறு அடையலாம் என்று பௌத்தம் கூறுகின்றது. வீடுபேறு அடைவதைப் பௌத்தம், நிர்வாணம் எனக் குறிப்பிடுகிறது. இந்த நிலையை அடைவதற்கு நான்கு உண்மைகளை அடையவேண்டும் என்று பௌத்தம் கூறுகிறது. அவையாவன:

  1. துக்கம்

  2. துக்க உணர்வுக்குக் காரணம்

  3. துக்கத்தை நீக்கும் வழி

  4. துக்கத்தை நீக்குவதற்குரிய மருந்து

  பௌத்தம் ஐந்து வகையான நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு வற்புறுத்தியது. அவற்றைப் பஞ்சசீலம் என்று அவர்கள் கூறுவர். அவையாவன :

  1. கொல்லாமை

  2. பிறர் பொருளை விரும்பாமை

  3. தவறான இன்பத்தைக் கொள்ளாமை

  4. பொய் பேசாமை

  5. கள் அருந்தாமை

  தமிழகத்தில் பௌத்த நெறிகள் பலராலும் விரும்பப்பட்டன. இவை நல்ல நெறிகளாக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டன.

  5.3.3 பௌத்தர் பண்பாடு

  பௌத்தத் துறவிகளின் கூட்டத்தைச் சங்கம் என்றழைத்தனர். இந்தச் சங்கம் பௌத்த சமயக் கொள்கைகள் பரவுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது. இவ்வாறு சமயப் பெரியோர் அருளுணர்ச்சி உடையவராகவும் பண்பாடு மிக்கவராகவும் இருந்தனர். இவர்கள் துன்பங்களைத் தாங்கிப் பழகினர். பிறருக்குத் துன்பம் செய்வதை அறவே வெறுத்தனர்.

  உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
  அற்றே தவத்திற் குரு

  (குறள்; 271)

  Audio

  என்ற திருக்குறள் கூறும் நெறியே அவர்கள் நெறியாக அமைந்தது. வரும் துன்பத்தைத் தாங்குதல், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை இவையே தவத்திற்கு உரியன என்பது இதன் பொருள். பெண்களுக்கும் சமய உலகில் பேரிடம் உள்ளது என்பதைப் பௌத்தம் வற்புறுத்தியது. மணிமேகலை என்ற பெண் துறவு பூண்டு பலருக்கும் ஞானத்தைக் கற்பித்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1. வைதிக சமயம் என்பது யாது?

  2. வைதிகம், சமணம், பௌத்தம் ஆகியன கொண்டிருந்த கடவுள் சிந்தனைகளைக் கூறுக.

  3. சமண சமயம் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தது?

  4. சமணர் செய்த தானங்களைக் குறிப்பிடுக..

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 18:50:15(இந்திய நேரம்)