தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.2 சமணம்

 • 5.2 சமணம்

  AudioE

  துறவு கொண்டவர்களே வீடுபேறு பெறலாம் என்று சமண மதம் கூறுகின்றது. உயிர், உடம்பு முழுதும் பரவி நிற்கிறது. உடம்பின் உருவத்திற்கேற்றபடி உயிரின் அளவு அமையும். எறும்பின் உயிரும், யானையின் உயிரும் ஓர் அளவுடையனவல்ல. உயிர்கள் நல்ல அறிவும், நல்ல ஞானமும் பெற்று வினைகள் நீங்கி வீடுபேறு அடையலாம் என்பன சமணர்களின் கொள்கையாகும். இந்தச் சமயம் தமிழ்நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி மக்களிடையே நல்ல மதிப்பைப் பெற்றது.

  5.2.1 தமிழ்நாட்டில் சமணர்

  சந்திரகுப்த அரசருடைய சமய குரு பத்திரபாகு முனிவர் என்பவர். சந்திரகுப்தருடைய நாடாகிய மகத நாட்டில் பஞ்சம் பரவுவதை அறிந்து பத்திரபாகு முனிவர் பன்னிரண்டாயிரம் முனிவர்களோடு தென்னாட்டிற்கு வந்தார். அவர்களோடு சந்திரகுப்த அரசரும் வந்ததாகக் கூறுகின்றனர். பத்திரபாகு முனிவருடன் வந்த அவருடைய சீடர் விசாக முனிவர் என்பவரே தமிழ்நாட்டில் சமண சமயத்தைப் பரப்பியவர் ஆவார். தமிழ் நாட்டு மக்களுள் பலர் சமண சமயத்தைத் தழுவினர். சங்ககாலப் புலவர்களுள் சமண சமயத்தைத் தழுவியவர்கள் இருந்தனர்.

  5.2.2 சமண நெறிகள்

  வாழ்க்கையை இல்லறம், துறவறம் என இரண்டாகச் சமணர் பார்த்தனர். உலகத்தைத் துறந்து வீடுபேற்றைக் கருதித் தவம் செய்வதைச் சமண முனிவர் வற்புறுத்தினர். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை ஆசையிலிருந்து விலக்கி அடக்குதல், கொல்லாமை, வாய்மை, பிறர் பொருளைத் திருடாமை, பற்று இல்லாமை ஆகியவற்றை இந்தத் துறவு நெறி வற்புறுத்தியது. சமண முனிவர்கள் புழு பூச்சிகளுக்குக்கூடத் துன்பம் செய்யாமல் வாழும் நெறியை வற்புறுத்தினர். கடுமையான நோன்புகளை இந்த முனிவர்கள் கடைப்பிடித்தனர். நீராடுதல், பல் தேய்த்தல் போன்ற செயல்கள்கூடப் பிற உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று கருதிச் சமண முனிவர் அவற்றைச் செய்வதில்லை. இல்லறத்தில் இருந்த சமணர் கொல்லாமை, வாய்மை, பிறர் பொருளைத் திருடாமை, பிறர் மனைவியை விரும்பாமை, பொருள்மீது அளவற்ற ஆசை இல்லாமை ஆகிய ஐந்து நெறிகளைக் கடைப்பிடித்தனர். இவைகளே சமணர்கள் தம் வாழ்வில் மேற்கொண்ட நெறிகளாகும்.

  5.2.3 சமணர் பண்பாடு

  மனிதர்கள் அனைவரையும் சமமாக நோக்கும் பண்பைச் சமணர் வளர்த்தனர். உயர்வு தாழ்வு இல்லை என்பது அவர்கள் கருத்தாகும். துன்பப்படுபவர்களுக்கு உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்ற நான்கு தானங்களைச் செய்வதையே சமணர் பெரிய அறமாகக் கொண்டனர். தமிழர்கள் பண்பாட்டிலும் இத்தகைய கருத்துகளுக்கு இடமிருந்ததால், சமண சமயம் தமிழ்நாட்டில் பெருமதிப்புப் பெற்றது. தாய் மொழியை வளர்க்கும் ஆர்வம் உடையவர்களாகச் சமணர் இருந்தனர். மக்கள் அறியாத மொழிகளில் எழுதுவதை அவர்கள் தவிர்த்தார்கள். மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைச் சமணர்கள் போற்றவில்லை. அன்பு, அருள் ஆகியன சமணர்களின் அடிப்படைக் கொள்கையாய் இருந்தன. தமிழர்கள் பண்பாட்டில் அன்பும் அருளும் பெறுவதற்குச் சமணர்கள் காரணமாக இருந்தனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:54:20(இந்திய நேரம்)