Primary tabs
-
4.5 ஒலியியல் மாற்றங்கள்
ஒருசொல்லில் பல எழுத்துகள் சேர்ந்து வருகின்றன. அவ்வாறு வரும் எழுத்துகளின் ஒலி அது வரும் இடத்திற்கு தகுந்தாற் போல் ஒலிமாற்றம் பெறுகிறது. இதனை இங்குக் காணலாம்.
4.5.1 ஈற்றுக்குரல் (இலா) வல்லெழுத்து இரட்டிப்பு
வல்லெழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும்போது குரல் ஒலியாகவோ (voiced sound), குரல் இலாஒலியாகவோ (voiceless sound) உச்சரித்தாலும் அவற்றிற்கு இடையே புணர்ச்சி மாற்றம் மட்டும் காணப்படுகிறது.
குரல் இலா ஒலி (voiceless sound)
/p/ - டேப் /te:p/ டேப்பில்
- பைப் /paip/ பைப்பில்
/c/ - பீச் /bi:c/ பீச்சில்
/k/ - ஈராக் /irra:k/ ஈராக்கில்
- பிளாஸ்டிக் /pla:stik/ பிளாஸ்டிக்கில்
/t/ - குஜராத் /kujara:t/ குஜராத்தில்குரல் உடைய ஒலி (voiced sound)
/b/ - பல்ப் /balb/ பல்ப்பில்
- பஞ்சாப் /panja:b/ பஞ்சாப்பில்
/d/ - வசந்த் /vasand/ வசந்தின்இச்சொற்களைப் பார்க்கும்போது குரல் இலா வல்லொலிகள், உயிர் எழுத்தை முதலாக கொண்ட விகுதிகள் சேரும்போது இரட்டிக்கும் என்றும், குரல் உடைய வல்லொலிகள் அவ்வாறான விகுதிகள் சேரும்போது இயல்பாகவே இருக்கும் என்றும் தெரிய வருகின்றது. அதே சமயத்தில் ‘-கள்’ என்ற பன்மை விகுதி இவ்விரு ஒலிகளுடன் சேரும்போது இடையே ‘உகரம்’ மிகுகிறது.
சான்று:
/p/ பிளாஸ்டிக் + உ + கள் = பிளாஸ்டிக்குகள்
/b/ பல்ப் + உ + கள் = பல்புகள்இவ்விரு சான்றுகளை நோக்கும்போது உகர ஒலி ஒலித்துணையாக வருகிறது என்று கொண்டு அதன் பின்னரே பன்மை விகுதி (-கள்) சேருவதாகக் கொள்ள வேண்டும்.
4.5.2 ஒலிக்குறிப்புச் சொல்லில் புணர்ச்சி மாற்றம்
ஒரு நிகழ்ச்சியைக் குறிக்க அல்லது விளக்க ஒரு சில சொற்களைக் கையாண்டு உணர்த்துகிறோம். அச்சொற்களையே ஒலிக்குறிப்புச் சொற்கள் என்பர்.
சான்று:
‘நறுக்’
‘பளீச்’இதில் உள்ள ‘நறுக்’ என்ற சொல் துல்லியமாக, சிறியதாக அதோடு விளக்கமாகவும் அமையும் வண்ணம் இருப்பதற்குக் கூறப்படும் சொல் ஆகும். அது போன்றே ‘பளீச்’ என்ற சொல்லும் ஆகும். இவ்வகையான சொற்களை ஒலிக்குறிப்புச் சொற்கள் என்கிறோம். இச்சொற்களைப் பயன்படுத்தும்போது இருவகையான எழுத்துமுறைகள் காணப்படுகின்றன. ஒன்று, மேற்கோள் குறியிட்டு வல்லின ஈறாக எழுதுவது.
சான்று:
‘நறுக்’ என்று
‘பளீச்’ என்றுஇன்னொரு முறை நிரப்பியைச் (complimantizer) சேர்த்து எழுதும்போது அவ்வல்லெழுத்தை இரட்டித்து எழுதுவது.
சான்று:
‘நறுக்கென்று’
‘பளீச்சென்று’இவ்வாறான புணர்ச்சி விதிகள் முன்பு இல்லாதவையாகும் எனலாம். ஏனெனில் இவை புதுச்சொற்களாகப் பயன்பாட்டில் அமைந்து வருகின்றன.
4.5.3 ஒலிபெயர்ப்பால் ஏற்படும் முரண்பாடு
பொதுவாக வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவது சற்றுக் கடினமான ஒன்றாகும். ஏனெனில் அச்சொற்களுக்கு ஏற்ற சரியான எழுத்துகள் தமிழில் இல்லை என்று முன்னைய பாடத்தில் பயின்றோம். இங்குச் சில ஆங்கில மொழிச் சொற்களை ஒலிபெயர்ப்பதால் ஏற்படும் முரண்பாடு மற்றும் மாற்றங்கள் பற்றிக் காண்போம்.
சான்று:
‘ரோடு’ ‘road’
என்ற சொல்லை ‘ரோட்டை, ரோட்டில்’ என்னும் வேற்றுமை உருபு ஏற்ற வடிவங்களாகப் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துவது பெரும்பான்மை வழக்கு. இது ஆங்கிலத்தில் ‘ரோட் - road’ என்று குரல் உடைய வல்லொலியை இறுதியாக உள்ள சொல்லாகும். இச்சொல்லைத் தமிழில் உச்சரிக்கும்போது ‘ரோடு’ என்கிறோம். தனி நிலையில் உகரம் சேர்த்தே உச்சரிக்கிறோம். எழுதவும் செய்கிறோம். இங்கு நெடில் தொடர்க் குற்றியலுகர ஈற்றுச்சொல்போல் (மாடு - மாட்டை) செயல்படுகிறது.