தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D04114- எழுத்தியல் மாற்றங்கள்

  • 4.4 எழுத்தியல் மாற்றங்கள்

        ஓர் எழுத்தானது ஒரு சொல்லில் எந்த இடங்களில் அமைந்து     வருகிறதோ     அதற்கு     ஏற்றாற்போல் அவ்வெழுத்தின் தன்மை மாறுகிறது. இதைப் பற்றி இங்கே காண்போம்.

    4.4.1 சகர மாற்றம்

    <ச> என்பது சொல்லுக்கு முதலில் வரும்போதும் (சந்தனம்), சொல்லுக்கு இடையில் இரண்டு உயிர்களுக்கு நடுவில் வரும்போதும் (அசல்) /s/ என்ற ஒலியை உடையது; சொல்லுக்கு இடையில் இரட்டித்து வரும்போதும் (அச்சம்), ட, ற என்னும் இரண்டு வல்லின ஒலிகளுக்குப் பின்பு வரும்போதும் (ஆட்சி, பயிற்சி) /c/ என்ற ஒலியை உடையது. <ச>     என்பது சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் சொல்லுக்கு இறுதியில் வருவதில்லை. ஆனால் தற்காலத்தில் பிறமொழிச்     சொற்கள் மிகுதியாகக் கலந்துவிட்டதாலும், அச்சொற்களை பிறமொழிகளுக்கே உரிய ஒலியமைப்பில் எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாலும் <ச> என்பது சொல்லுக்கு இறுதியில் /c/, /s/ என்னும் இருவகை ஒலி அமைப்பில் வரலாயிற்று. எனவே /c/, /s/ என்னும் இருவகை ஒலிகளும் தற்காலத் தமிழில்     வேற்றுநிலை வழக்கில் காணப்படுகின்றன என்கின்றனர் மொழியியலார்.

    சான்று:

         ‘கோச் /ko:c/ ரயில்பெட்டி’

         ‘கோஸ் /ko:s/ ‘முட்டைக்கோஸ்’

    வேற்றுநிலை வழக்கில் இல்லாமல் வேறுபல சொற்களிலும் சொல்லுக்கு இறுதியில் இந்த ச், ஸ் என்னும் எழுத்துகள் வருகின்றன.

         பீச்,      மேச்

    போன்ற சொற்களின் இறுதியில் சகரம் /c/ என்ற ஒலியும்,

         ‘காங்கிரஸ்’
         ‘போலீஸ்’
         ‘கிளாஸ்’
         ‘ரைஸ்’

    போன்ற சொற்களின் இறுதியில் ஸகரம் /s/ என்ற ஒலியும் வருகின்றன. இச்சொற்களின் புணர்ச்சி மாற்றமாக எழுத்துமாற்றம் நடைபெறும் முறை காணப்படுகிறது. அதனைக் கீழே காண்போம்.

    ஸகர ஈற்றுச்     சொற்கள், வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது அச்சொற்களின் இறுதியில் உள்ள ஸகரத்தைச் சகரமாக மாற்றி எழுதும் மரபைச் சிலர் கையாளுகின்றனர்.

    சான்று:

    ‘போலீஸ்’ - போலீஸ் + இல் = போலீசில்
         - போலீஸ் + ஐ = போலீசை
         - போலீஸ் + உக்கு = போலீசுக்கு

    ‘காங்கிரஸ்’ - காங்கிரஸ் + இல் = காங்கிரசில்
         - காங்கிரஸ் + ஐ = காங்கிரசை
         - காங்கிரஸ் + உக்கு = காங்கிரசுக்கு

    இங்கு உயிர் எழுத்தில் தொடங்கி வரும் வேற்றுமை உருபுகளோடு சேரும் போது புணர்ச்சியில் எழுத்துமாற்றம் நடைபெறுகிறது. இவ்வகையான புணர்ச்சி விதி முற்கால இலக்கண நூல்களில் இல்லை. இதில் கவனிக்க வேண்டியது எழுத்துமாற்றமே தவிர ஒலிமாற்றம் இல்லை எனலாம்.

    4.4.2 ஙகர மாற்றம் (ஙகர ஈற்றுப் புணர்ச்சி மாற்றம்)

    இன்றைய எழுத்துத் தமிழில் ‘ஙகர’ மெய்யை இறுதியாக உடைய பெயர்கள் காணப்படுகின்றன.

    சான்று:

         ‘அருண்சிங்’
         ‘சரண்சிங்’

    இந்தச் சொற்களோடு ஐ, ஆல் முதலான வேற்றுமை உருபுகள் சேரும் போது இடையே ககர மெய் தோன்றுகிறது.

    சான்று:

         ‘சிங் + ஐ = சிங்கை’
         ‘சிங் + ஆல் = சிங்கால்’
         ‘சிங் + இடம் = சிங்கிடம்’

    ஙகர ஈற்றுச் சொற்கள் உயிர்எழுத்தில் தொடங்கும் சொற்களை     ஏற்கும்     போது     இவ்விதமான     ஒரு புதிய புணர்ச்சி விதியை பெறுகிறது.

    4.4.3 மகர மாற்றம்

        பிறமொழிச் சொற்கள் மகர ஈற்றில் முடியும் வண்ணம் அமைந்துள்ளன. அவை தமிழில் இன்றைய வழக்கில் அதிகமாகக் காணப்படுகின்றன.

    சான்று:

         ‘முகாம்’
         ‘முஸ்லீம்’
         ‘ரூம்’

    இச்சொற்கள் ‘-கள்’ என்ற பன்மை விகுதி சேரும்போது எவ்வித மாற்றமும் அடையாமல் அப்படியே இயல்பாக அமைந்து விடுகின்றன. இது ஒரு புதிய புணர்ச்சி விதியாகும்.

         ‘முகாம் + கள் = முகாம்கள்’
         ‘முஸ்லீம் + கள் = முஸ்லீம்கள்
         ‘ரூம் + கள் = ரூம்கள்’

    இங்கு     ஆகாரம், ஈகாரம், ஊகாரம்     போன்ற உயிர்களை அடுத்துவரும் மகரம் இயல்பாகவே வருகிறது.

    பாரம், வேஷம் போன்ற பிறமொழிச் சொற்களிலும் மகரமே ஈறாக வருகின்றது. ஆனால் அச்சொற்களுடன் ‘-கள்’     என்ற பன்மை விகுதி     சேரும் போது மகரமெய் ஙகர மெய்யாக மாறிவிடுகிறது.

    சான்று:

         ‘பாரம் + கள் = பாரங்கள்’
         ‘வேஷம் + கள் = வேஷங்கள்’

    இங்கு மகரத்துக்கு முன்னால் ககர உயிர் இருப்பதால் மகரம் ஙகரமாக மாறுகிறது.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
      புணர்ச்சி என்றால் என்ன?
    2.
      சகர மாற்றத்திற்கான சான்று ஒன்று தருக?
    3.
    ஙகர ஈற்றுப் புணர்ச்சி மாற்ற விதியைக் கூறுக?
    4.
      மகர ஈற்றுச் சொற்களின் இரு புணர்ச்சி விதிகள் யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 10:32:08(இந்திய நேரம்)