Primary tabs
-
3.0 பாட முன்னுரை
இலக்கியத்தின் வகையும் வடிவும் காலந்தோறும் மாறுவன. அரசியல், சமுதாயம், பண்பாட்டு நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுவதுண்டு. 17, 18, 19ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய ‘சிற்றிலக்கியங்கள்’அமைப்பாலும் பண்புகளாலும் காப்பியங்களிலிருந்து வேறுபட்டவை; கற்பனை மிகுந்தவை; கடவுளர், மன்னர் முதலியோரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுபவை. இவற்றைப் ‘பிரபந்தங்கள்’ என்ற பெயரால் குறிப்பிடுவதுண்டு.
தமிழில் 96 வகையான சிற்றிலக்கியங்கள் உள்ளதாகக் குறிப்பிடும் மரபு உள்ளது. பாட்டியல் எனப்படும் இலக்கண நூல்கள் சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியக் கூறுகளாகிய தூது, உலா போன்றவை பிற்காலத்தில் தனித்தனி இலக்கிய வகைகளாக வளர்ந்துள்ளன. ‘கலம்பகம்’ என்னும் சிற்றிலக்கியம் பல கூறுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான சிற்றிலக்கியங்கள் தமிழில் எழுந்துள்ளன. பெரும்பான்மையான சிற்றிலக்கியங்கள் கடவுளரைப் பாடும் பக்திச் சிற்றிலக்கியங்களாகவே அமைந்துள்ளன.
அந்தாதி, அம்மானை, உலா, கலம்பகம், குறவஞ்சி, சதகம், தூது, பதிகம், பள்ளு, பிள்ளைத் தமிழ், மாலை முதலிய பல்வேறு சிற்றிலக்கிய வகைகளில் கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன. கும்மி, சிந்து, புலம்பல், வண்ணம் முதலிய வடிவங்களையும் கிறித்தவப் புலவர்கள் கையாண்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட சிற்றிலக்கிய வகைகளுள், அந்தாதி, அம்மானை, கலம்பகம், குறவஞ்சி, சதகம் ஆகிய ஐந்து சிற்றிலக்கிய வகைகள் மட்டும் இப்பாடப்பகுதியில் விரிவாக விளக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு சிற்றிலக்கிய நூல் தெரிந்து கொள்ளப்பட்டு விளக்கப்படுகிறது.