தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருக்காவலூர்க் கலம்பகம்

  • 3.3 திருக்காவலூர்க் கலம்பகம்

    கிறித்தவக் கலம்பகங்களாக ஆறு கலம்பகங்கள் கிடைக்கின்றன. சாமிநாதப் பிள்ளை இயற்றிய ‘நசரைக் கலம்பகம்’ (1885), ஜெகராவு முதலியார் எழுதிய ‘திரு எண்ணூர்க் கலம்பகம்’ (1914), பவுல் இராம கிருட்டினர் எழுதிய ‘ஆதிக் கலம்பகம்’ (1977) ஆகியன குறிப்பிடத்தக்கவை. இங்குப் பாடமாக அமைந்துள்ளது திருக்காவலூர்க் கலம்பகம். இதனை வீரமாமுனிவர் இயற்றினார். இந்நூல் 1843இல் வெளிவந்துள்ளது.

    • ஆசிரியர்

    வீரமாமுனிவர் இத்தாலி நாட்டினர். சமயப் பணிக்காகத் தமிழகம் வந்தவர்; தேம்பாவணி என்னும் காப்பியத்தைப் படைத்தவர். மாலை, அந்தாதி, அம்மானை வகை சிற்றிலக்கியங்களையும் படைத்தவர். தற்காலத் தமிழ் உரைநடையின் முன்னோடிகளில் ஒருவர். இவர் சதுரகராதியையும் வெளியிட்டுள்ளார். திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்துள்ளார்.

    3.3.1 திருக்காவலூர்க் கலம்பகம் - அமைப்பும் பொருளும்

    திருக்காவலூர் என்பது திருச்சி - அரியலூர் அருகே உள்ள ஒரு சிற்றூர். வீரமாமுனிவர் இங்குக் கிறித்தவச் சபையைத் தோற்றுவித்து, ஓர் ஆலயமும் கட்டினார். இவ்வூருக்குத் ‘திருக்காவலூர்’ எனப் பெயரும் வழங்கினார். திருக்காவலூரில் கோவில் கொண்டுள்ள அடைக்கல மாதாவே இக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவி ஆவார். இந்நூலில் அன்னையின் பெருமைகளும், கிறித்துவின் புகழும் கூறப்பட்டுள்ளன.

    • அன்னையின் பெருமை

    வீரமாமுனிவர் அன்னை மீது கொண்ட பக்தி உணர்வு, கிறித்தவக் கோட்பாடுகளில் உள்ள உறுதி ஆகியன இந்நூலில் சிறப்பாக வெளிப்படுகின்றன. தாமரையை ஒத்துள்ள அன்னையின் திருவடிகளை நிலா சுமந்து கொண்டிருக்கிறது. அதைப் போல வண்டாய் மாறி, புகழ்ந்து பாடிக் கொண்டு அன்னை அணிந்துள்ள மாலையில் உள்ள தேனை உண்ண மாட்டேனா! எனப் பலவாறு ஏங்கிப் பாடுகிறார் புலவர்.

    தாளணிந்த மதிமுதலாத் தமியனுமக்
         கமலத்தாள் தாங்கிலேனோ
    கோளணிந்த குழலணிதார் குடைவண்டார்ப்ப
         புகழ்பாடி மதுவுண் ணேனோ

    (பாடல் எண் - 36)

    (மதி = நிலவு; தமியன் = வறியவன்; கமலத்தாள் = தாமரையைப் போன்ற திருவடி; கோள் = விண்மீன்)

    • அன்னையின் கையில் ஜெபமாலை

    அன்னையின் கையில் ஜெபமாலை உள்ளது. அதனை வியந்து போற்றுகிறார் புலவர். எளியவர்கள் மீட்புப் பெற வானோர்கள் இட்ட வடமோ, வினை தீர்க்கும் பாசமோ! அன்புடைய உயிர்களை இணைக்கும் பிணையோ! என ஜெப மாலையைப் புகழ்ந்து போற்றுகிறார் புலவர்.

    ‘எளியவர்க் கிரங்கி கதியேற வானோர் இடும் வடமோ?
         தெளிவற்ற தீவினை கொய்தெறியும் பாசமோ தேவரருளால்
    களி அன்பருயிரைப் பிணிக்கும் தளை கொலோ’

    (பாடல் எண் - 65)

    (வடம் = கயிறு; தீவினை = பாவவினை; தளை = பிணை; கதி = மீட்பு)

    • அன்னை தரும் நன்மைகள்

    அன்னையை நாடுவோர் அடையக் கூடிய நன்மைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். அன்னையின் அருள் நிலைத்திருப்பதால்தான் பக்தர்கள் வருத்தம் இல்லாமல் உள்ளனர் என்றும், பயிர்கள் செழிக்கின்றன என்றும் கூறுகிறார். இனிய அமுதாக, பாவம் போக்கும் மருந்தாக, முக்திக்கு வழித்துணையாக நம்மைக் காக்கவே காவலூரில் அன்னை தங்கியிருக்கிறாள் என்கிறார். கருணை கொண்டவள்; மீட்பு நல்குபவள்; கனிவு உடையவள்; முடிவில்லாதவள்; எனவே, அன்னையின் பொலிவுடைய திருவடிகளை நாளும் தொழ வேண்டும் என மக்களை அழைக்கிறார் வீரமாமுனிவர்.

    கருணையள் கதியினள் கனிவினள் கடையிலள்
    பூவடி நாளும் பணிந்து தொழுவீர்.

    (பாடல் எண் - 38)

    • அன்னையின் அழகுக் கோலம்

    அன்னை தேரில் வரும் காட்சியை அழகுறப் பாடுகிறார் புலவர். விண்மீனைத் தலையில் சூடி, சந்திரனைத் திருவடிகளில் ஏந்தி, சூரியனை ஆடையாக உடுத்தி ஒளி சிறந்து விளங்கும் அன்னையின் தோற்றத்தைப் பக்தி உணர்வு பொங்கப் பாடுகிறார் புலவர்.

    இங்ஙனம், அன்னையின் சிறப்புகளைப் பலவாறாகப் பாடி மகிழ்கிறார் வீரமாமுனிவர்.

    1.

    கிறித்தவச் சிற்றிலக்கியங்களின் பண்புகள் யாவை?

    2.

    கிறித்தவர்கள் கையாண்டுள்ள சிற்றிலக்கிய வடிவங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

    3.

    கிறித்தவச் சிற்றிலக்கிய முன்னோடிகள் இருவரைக் குறிப்பிடுக.

    4.

    ‘பெத்லகேம் குறவஞ்சியில்’ குறவஞ்சியின் பங்கு யாது?

    5.

    திருக்காவலூர் அன்னையின் சிறப்புகளை வீரமாமுனிவர் எவ்வாறு கூறுகிறார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 14:46:05(இந்திய நேரம்)