Primary tabs
-
3.6 முக்தி வழி அம்மானை
அம்மானை என்பது பெண்கள் ஆடும் ஒருவகை விளையாட்டு. இது மூன்று காய்களில், ஒன்றை மாற்றி மாற்றி மேலே வீசி இரு கைகளாலும் பிடித்தாடும் விளையாட்டாகும். இப்படி ஆடும்பொழுது, இரண்டு கைகளும் ஒரே வேகத்தில் காய்களை வீசியும் பிடித்தும் சிறுமிகள் விளையாடும் போது, அவர்கள் வளையல்கள் ஒலிக்கின்றன. மேலே சென்ற காயை நோக்கும்போது காதணிகள் அசைகின்றன. தலை குனிந்து கீழே நோக்கும்போது, கூந்தல் கலைகிறது.
அம்மானை விளையாட்டைப் பாடிக்கொண்டே ஆடுவதுண்டு. இத்தகைய பாடல்கள் தனி இலக்கிய வகையாகத் தமிழில் உருவெடுத்துள்ளது. அம்மானை என்பது ‘அம்மனை’ என்பதன் விளி ஆகும். இதன் பொருள் ‘அம்மா’ என்பதாகும்.
தமிழில் நூற்றுக்கணக்கான அம்மானைகள் தோன்றியுள்ளன. கிறித்தவப் பொருண்மை கொண்ட எண்பதுக்கும் மேற்பட்ட அம்மானைகள் காணப்படுகின்றன. அக்கினேச அம்மானை (1843), வீரமாமுனிவரின் கித்தேரியம்மாள் அம்மானை (1849), தாவீது அம்மானை (1865), சவேரியார் அம்மானை (1913) முதலியன அவற்றுள் சில.
• ஆசிரியர்
‘முக்தி வழி அம்மானை’ இங்குப் பாடமாக அமைந்துள்ளது. இதனைச் சுவீகரனார் இயற்றியுள்ளார். இதனை, 1887 இல் ‘நற்போதகம்’ இதழில் முதலில் இவர் வெளியிட்டார். ஜான்பனியன் எழுதிய ‘மோட்சப் பிரயாணம்’ என்னும் நூலை இவர் நன்கு படித்தவர். சுவீகரனார் திருநெல்வேலி மாவட்ட ஆழ்வார்த்தோப்பு என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
3.6.1 முக்தி வழி அம்மானை - அமைப்பும் பொருளும்
முக்தி வழி அம்மானை, அடி வரையறை இல்லாத கலி வெண்பாவில் ஆக்கப்பட்டுள்ளது. எதுகை அமையப் பெற்றது. ஈரடிக் கண்ணிகள் ஆறாயிரம் உடையது. 165 விருத்தப்பாக்களும் இடையிடையே காணப்படுகின்றன. இதன் கண்ணிகள், ‘தான தான தந்த தானதான தந்த தானா தானனா’ என்பது போன்ற சந்தத்தில் பாடத்தகுந்தது.
பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, நூல்பொருள், நூல் பயன், அவையடக்கம் முதலியன கூறப்பட்டுள்ளன. இந்நூல் தழுவல் படைப்பாகும். ஆங்கிலத்தில் ஜான் பனியன் எழுதிய ‘மோட்சப் பிரயாணம்’ (Pilgrim's Progress) என்ற நூலைத் தழுவி இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. சாமுவேல் பவுல் ஐயர் இந்நூலை உரைநடைக் காவியமாகத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். சுவீகரனார் இதனை அம்மானையாகப் பாடியுள்ளார்.
• கதை
மூல நூலைத் தழுவி முக்தி வழி அம்மானையும் முற்றுருவகப் படைப்பாக அமைந்துள்ளது. அதாவது, இந்நூலில் உள்ள கதை மாந்தர்கள் அனைவரும் உருவகமாகப் படைக்கப்பட்டுள்ளனர். இக்கதையின் தலைவனாகிய ‘கிறித்தவன்’ முக்தி வழியில் முன்னேறிச் செல்கிறான்; இன்னல்கள், தடைகள், வேதனைகளைக் கடந்து செல்கிறான். இறைவனின் துணை கொண்டு முக்தி வழியில் வழுவாது சென்று பேரின்பம் அடைகிறான். இதுவே முக்தி வழி அம்மானையின் கதையாகும். இதனைச் சுவைபட விவரித்துள்ளார் கவிஞர்.
• கிறித்தவனின் பயணம்
கந்தை அணிந்த ஒரு மனிதன். அவன் பெயர் கிறித்தவன். முதுகில் பாரமான சுமை ஒன்று அவனை அழுத்துகிறது. அது பாவச் சுமை. கைகளில் விவிலியம் விரித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் படிக்க படிக்க அவன் கண்களில் கண்ணீர் வழிகிறது. இந்த நகரம் அழிந்து விடும்; நாம் தப்ப முடியாது என உணர்கிறான். கடவுளின் கோபத்திற்குத் தப்ப வழி தேடுகிறான். சுவிசேடகன் வழிகாட்ட ‘திட்டி வாசல்’ நோக்கி ஓடுகிறான். திட்டி வாசல் என்பது நிலையான வாழ்வை வழங்கும் இயேசுவைக் குறிக்கிறது. ஊரார் இவனைப் பைத்தியம் என்கின்றனர்; ஏசுகின்றனர்; வழி விட மறுக்கின்றனர்; அடர்ந்த காட்டு வழியாகச் செல்கிறான்; முதுகுச் சுமையால் தள்ளாடித் தள்ளாடிச் செல்கிறான் கிறித்தவன். சேற்று ஆறு குறுக்கிடுகிறது. அபயக் குரல் எழுப்புகிறான்.
உலையின் மெழுகாய் உருகினான் உள்ளம் எல்லாம்
கன வருத்தம் ஆகி அவன் கைகால் உளைவதிலும்
மன வருத்தம் இப்பொழுது மட்டு மிஞ்சி வந்ததுவே
வந்த துயராலே மனதை அசையாது இருத்தி
அந்தரத்தை நோக்கி அபயம் இட்டான் அம்மானை.
(முக்தி வழி அம்மானை - பக்கம் - 28)
(கன வருத்தம் = மிகுதியான வருத்தம்; அந்தரம் = வானம்; அபயம் = அடைக்கலம் வேண்டி எழுப்பும் குரல்)
• சிலுவைக் காட்சி
பல்வகைத் துன்பங்களைக் கடந்து செல்கிறான் கிறித்தவன். பின்னர் வழிப்போக்கர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள மணி மாளிகையில் கிறித்தவன் தங்குகிறான். வழியில் கண்ட காட்சிகள் பற்றி அங்குள்ள பெண்டிர் வினவுகின்றனர். கிறித்தவன், தான் கண்ட சிலுவைக் காட்சி பற்றியும், தன் முதுகில் இருந்த மூட்டை தானாக விழுந்தது பற்றியும் கூறுகிறான்.
இயேசுவின் சிலுவைப்பாடுகளை எல்லாம் மகளிர் விவரிக்கின்றனர். ஏழைப் பரதேசிகளை உய்விக்க வந்த சீயோனின் திருப்பாலரான இயேசுவின் பெருமைகளைக் கூறுகின்றனர். பிச்சைச்காரர்களையும் பரதேசிகளையும் பிரபுக்களாக்கிய இயேசுவின் மாண்பைக் கூறுகின்றனர்.
பீடுபெறு பூவுலகில் பிச்சை எடுப்போர்களையும்
வீடுமின்றிக் குப்பையதின் மேடுகளிலே வசித்து
இரக்கும் பரதேசி ஏழைகளிலே பலரைச்
சிறக்கும் பிரபுக்கள் போல் செய்துவிட்டார் கண்டாயே!
(முக்தி வழி அம்மானை - பக்கம் - 122)
• உச்சிதப் பட்டணம் சேரல்
நம்பிக்கை என்பவன் கிறித்தவனோடு சேர்ந்து கொள்கிறான். அவர்கள் நதியைக் கடந்து உச்சிதப்பட்டணம் சேர்கின்றனர். பின்னர் அலங்கார வாசலுக்கு வருகின்றனர். பல துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து வந்த அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. சொல்லுதற்கு அரிய மகிழ்ச்சியைப் பயணிகள் வெளிப்படுத்துகின்றனர். இறுதியில் கிறித்தவனும், நம்பிக்கையும் முக்தி வீடு அடைகின்றனர் எனக் கதை முடிகிறது. தடைகளை எதிர்கொண்டு நம்பிக்கையுடன் முன்னேறினால் எந்த இலக்கையும் அடையமுடியும் என்பது முக்தி வழி அம்மானை தரும் செய்தியாகும்.