தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெத்லகேம் குறவஞ்சி

  • 3.2 பெத்லகேம் குறவஞ்சி

    ‘குறவஞ்சி' சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். ‘வஞ்சி’ என்ற சொல் பெண்ணைக் குறிக்கும். குறவஞ்சி என்றால் ‘குறப்பெண்’ என்பது பொருள். குறவஞ்சி இலக்கியத்தில் இடம் பெறும் கதை மாந்தர்களுள் குறப்பெண் சிறப்பிடம் பெறுகிறாள். கதைத் தலைவர் கடவுளராகவோ மன்னராகவோ இருப்பர். குறவஞ்சி இலக்கியம் நாடகப் பாங்கான கதை அமைப்பைக் கொண்டது; ஆங்காங்கு இசைப் பாடல்கள் கலந்து எழுதப்படுவதாகும். கிறித்தவக் குறவஞ்சி நூல்களுள் ‘பெத்லகேம் குறவஞ்சி’ (1800) தனிச் சிறப்பு வாய்ந்தது. இதனை எழுதியவர் வேதநாயகம் சாஸ்திரியார். அண்மையில் ‘தாமஸ் மலைக் குறவஞ்சி’ என்ற நூலும் வெளிவந்துள்ளது. இதனை இயற்றியவர் பேராசிரியர் சத்தியசாட்சி. 18ஆம் நூற்றாண்டில் எழுந்த ‘மருதப்பக் குறவஞ்சி’யில் கிறித்தவக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.

    • ஆசிரியர்

    வேத நாயகம் சாஸ்திரியார், தஞ்சை சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராக இருந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவர் ஞான அந்தாதி, ஞான உலா, பெண் விடு தூது, பராபரன் மாலை முதலிய சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். இவற்றில் கும்மி, ஏத்தப்பாட்டு, புலம்பல் முதலிய நாட்டுப்புற இலக்கிய வடிவங்களைக் கையாண்டுள்ளார்.

    3.2.1 பெத்லகேம் குறவஞ்சி – அமைப்பும் பொருளும் 

    பெத்லகேம் குறவஞ்சி இறைவாழ்த்து, இயேசுவின் உலா, தேவ மோகினி காதல், குறத்தி குறி கூறல், சிங்கன் வருகை என்னும் ஐந்து பெரும் பகுதிகளைக் கொண்டது; பாயிரம் முதலாக வாழ்த்து ஈறாக 72 உட்பிரிவுகளைக் கொண்டது

    • இறைவாழ்த்து

    இப்பகுதியில் வரும் கடவுள் வாழ்த்து, சரணத் தரு, தோடையம், மங்களம், தோத்திரத் தரு ஆகியன இறைவாழ்த்தாக அமைந்துள்ளன. ‘மங்களம்’ என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ள,

    சீரேசு நாதனுக்கு செய மங்களம்,
    ஆதி திரியேக நாதனுக்குச் சுப மங்களம்

    எனத் தொடங்கும் பாடல் இன்றளவும் கிறித்தவர் வழிபாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    (சீரேசு = சீர்+இயேசு, சிறப்பு வாய்ந்த இயேசு; திரி = மூன்று, ஏகம் = ஒன்று, மூவொரு கடவுள்)

    • இயேசுவின் உலா

    கட்டியங்காரனாக யோவான் வருகிறார். அவர் இயேசு உலா வரப் போவதை முன்னரே அறிவிக்கிறார். இயேசுவின் பெருமைகளை எடுத்துரைக்கிறார். இயேசுவின் வருகைக்காக எருசலேம் நகரம் விழாக் கோலம் கொள்கிறது. நகர மாந்தர்களும், தேவத்தூதர்களும் கூடுகின்றனர்; திருச்சபை கன்னியரும் கூடுகின்றனர்; இயேசு உலா வருகிறார்.

    • இயேசுவைக் கண்ட மகளிர்

    உலா வரும் இயேசுவைப் பார்த்து அனைவரும் வியக்கின்றனர். ஒளி பொருந்திய மகளிர் தம் கைகளில் உள்ள இலைக் கொத்துக்களை அசைக்கின்றனர்: ‘ஓசன்னா’ என்ற வாழ்த்தொலியை எழுப்புகின்றனர்.

    தேசு மாதர்கள் பாசமாய்
    வாச மேவு விலாச மரக்கிளை
    மாசிலாது எடுத்து ஆசையா
    யோசன்னா, பவ நாசன்னா என
    ஓசையாய் கிறிஸ்தேசுவே
    நீச வாகன ராசனே எங்கள்
    நேசனே எனப் பேசவே - பவனி

    (பவனிச் சிந்து - பாடல் 3)

    இவ்வாறு, இயேசு பெருமான் உலா வருகிறார்.

    (தேசு = ஒளி; பவ நாசன் = பாவத்தை அழித்தவன்; நீச வாகனம் = கழுதை; ஓசன்னா = மகிழ்ச்சியில் எழுப்பப்படும் குரல் (மூலம் : எபிரெய மொழி)

    • கதைத் தலைவி அறிமுகம்

    சீயோன் மகள் என்னும் தேவ மோகினி இக்கதையின் தலைவி. திருச்சபையே தலைவியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. தலைவி அழகு நிறைந்தவள்; பக்தி மிகுந்தவள்; கருணை மிக்கவள். இயேசுவைக் கண்டு காதல் கொள்கிறாள். காதல் மிகுதியால் நிலவு சுடுகிறது; தென்றலும் சுடுகிறது. அவற்றைப் பழித்துப் பேசுகிறாள்; மன்மதனையும் பழித்துப் பேசுகிறாள். இத்தகைய தலைவியின் அழகினை வேதநாயகம் சாஸ்திரியார் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார்.

    வில்லைப் புருவம் அமைத்து எல்லைப் பொருது முத்துப்
    பல்லினாள் - வேத
    மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தைப் பெற்ற
    சொல்லினாள்

    (நாட்டியத்தரு - பாடல் - 3)

    என, தலைவியின் அழகை வருணிக்கிறார்.


    • குறவஞ்சியின் வருகை

    தலைவி உணவும் உறக்கமும் இன்றி, தலைவனை நினைத்து ஏங்கித் தவிக்கிறாள். இவ்வேளையில் குறத்தி (சிங்கி) வருகிறாள். இடுப்பில் கூடையுடன், கையில் கோலுடன் அவள் ஒய்யாரமாக நடந்து வருகிறாள்.

    சிங்கி வந்தனளே - விசுவாசச்
    சிங்கி வந்தனளே

    (சிங்கி வரவுச் சிந்து - பல்லவி)

    என, குறத்தியின் வருகையைச் சாஸ்திரியார் பாடுகிறார்.

    • நாடு, நகர், மலைவளம்

    சிங்கியின் வரவு கண்டு, தலைவி அவளை அழைத்து வருமாறு சொல்கிறாள். குறத்தி தன்னுடைய நாட்டுவளம், நகர் வளம், மலை வளம் ஆகியவற்றை நயம்பட எடுத்துக் கூறுகிறாள். அப்பொழுது விவிலியச் செய்திகளையும், இயேசுவின் சிறப்புகளையும், கிறித்தவர்களின் மேன்மைகளையும் குறத்தி பலவாறு எடுத்துரைக்கிறாள். தம் தலப் பெருமை பற்றிக் கூறும் குறத்தி பின்வருமாறு கூறுகிறாள். இப்பகுதியில் இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன.

    நாசரேத்து ஆண்டவனார் வாழ்ந்த தலம் அம்மே
    தேசிகனார் பாடுபட்டு மரித்த தலம் அம்மே

    (தலவளம் - பாடல் - 4)

    (நாசரேத்து = இயேசுவின் ஊர்; தலம் = ஊர்; தேசிகனார் = கிறிஸ்துவைக் குறித்து வருகிறது)

    மேலும் ஏசுவின் அருளால் நிகழ்ந்த அற்புதங்களைச் சுட்டிக் கூறுகிறாள்.

    • குறத்தி குறி கூறல்

    இயேசுவின் பெருமைகளைக் கேட்கக் கேட்கத் தலைவி நாணம் கொண்டு முகம் சிவக்கிறாள். தன் கரத்தினைக் குறி சொல்லும் குறத்தியிடம் நீட்டுகிறாள். தலைவியின் கரங்களைப் புகழ்ந்து, தன்குறி பொய்க்காதிருக்கக் கடவுளை வணங்குகிறாள் குறத்தி. பின் குறி சொல்லத் தொடங்குகிறாள். ‘பெத்லகேம் நாதர் உன்னை மணம் கொள்ள நாளை வருவார்; சேலை வரும்; மாலை வரும்; சிலுவை முத்திரை மோதிரமும் வரும்’ என குறத்தி குறி சொல்கிறாள். இதனைக் கேட்ட தலைவி மகிழ்ச்சி அடைகிறாள். குறத்திக்குப் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து அனுப்பிவைக்கிறாள்.

    • சிங்கன் வருகை

    சிங்கன் பெத்லகேம் நாதனைப் பாடிக் கொண்டே வருகிறான். பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை முதலிய பாச வலைகளில் சிக்கித் தவிக்கும் மக்களைச் சேர்க்கும் ‘ஞான வலை’ அவனிடம் இருக்கிறது. பறவை வேட்டையில் சிங்கனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சிங்கியின் நினைவு வருகிறது. குறத்தியைத்தேடி, சிங்கன் வருகிறான். பின்னர் சிங்கன் சிங்கியைக் கண்டுவிடுகிறான். அவர்களிடையே நிகழும் உரையாடல் சுவையாக அமைந்துள்ளது.

    இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல்
    எங்கே நீ சென்றனை சிங்கி? - மா
    பெத்தலே கேம் நகர் சீயோன் குமாரிக்குப்
    பத்திக்குறி சொலச் சிங்கா

    (சிங்கன் சிங்கியோடு சம்பாஷித்தல் - பாடல் -1)

    (பத்தி = பக்தி)

    இவ்வாறு இருவரும் உரையாடுகின்றனர்.

    குறத்தி அணிந்துள்ள பல்வேறு அணிகலன்களையும் பார்த்து வியந்து சிங்கன் வினவுகிறாள். அதற்குச் சிங்கி நயமாகப் பதிலளிக்கிறாள். பின்னர் இருவரும் கடவுளைப் போற்றுகின்றனர், இறுதியில் வாழ்த்து அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 17:01:48(இந்திய நேரம்)