Primary tabs
-
2.0 பாட முன்னுரை
தமிழ் அக இலக்கியத்தில் பெருமளவில் பங்கு கொள்பவள் தலைவி.
தலைவனைச் சந்தித்து அவனோடு தொடர்பு கொண்டு வாழும்
களவு ஒழுக்கத்திலும், கற்பு ஒழுக்கத்திலும், மிகுதியான
மனப்போராட்டங்களும், உடல் துன்பமும் அடைபவள் தலைவியே.
களவு ஒழுக்கக் காலத்தில், தலைவனது வருகைக்காகக்
காத்திருக்கும்பொழுதும், ஊர் அலர் தூற்றுவதைக் கண்டு அஞ்சும்
பொழுதும், தலைவனின் பிரிவின் பொழுதும் அவள் பலவிதமான
போராட்டங்களுக்கும் உடல் பாதிப்பிற்கும் ஆளாகிறாள்.
அப்பொழுது அவள் வெளிப்படுத்தும் அவளது உணர்வுகள்,
கூற்றுகள் ஆகியவை, அவளது உண்மையான இயல்புகளை
வெளிப்படுத்திக் காட்டுகின்றன. இவையே இப்பாடத்தில் தொகுத்துக்
கூறப்பட்டுள்ளன.