தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.5-தலைவியின் உள் உணர்வுகள்

  • 2.5 தலைவியின் உள் உணர்வுகள்

    E


        பெண்களின் இயல்புகளில் ஒன்று நாணம். பொதுவாக நாணம்
    உடைய பெண்கள் எதையுமே வெளிப்படையாகக் காட்ட
    மாட்டார்கள். தம் உணர்வுகளை மறைமுகமாகத்தான் தங்கள்
    மௌனத்தின் மூலமோ, அல்லது சில செயல்கள் மூலமோ
    வெளிப்படுத்துவார்கள். தலைவனை விரும்பும் தலைவியும் தனது
    விருப்பத்தை அல்லது அன்பை இவ்வாறுதான் மறைமுகமான
    பலமுறைகளால் புலப்படுத்துகிறாள்.


    2.5.1 தலைவன் மீது கொண்ட காதல்


        தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்கிறார்கள். தலைவன்
    நேரடியாகவே தலைவியை நிமிர்ந்து பார்க்கிறான். அவள்
    அழகைக் கண்டு மயங்குகிறான். அவளை உளமார விரும்புகிறான்.
    ஆனால் அவள், அவனை விரும்புகிறாளா என்பதை அவன் அறிய
    வேண்டும். நாணமுடைய பெண் வெளிப்படையாக அதை
    உணர்த்தமாட்டாள். அதை எப்படி அவன் அறிந்து கொள்வது?
    ‘நான் உன்னை விரும்புகிறேன் நீ என்னை விரும்புகிறாயா?’
    என்று கேட்பதற்குப் பயம். சிலவேளை, ‘இல்லை’ என்று
    சொல்லிவிட்டால்........ அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது.
    எனவே அவள் தனது ஏதாவது ஒரு செயலின் மூலம்
    வெளிப்படுத்தமாட்டாளா? என்று ஏங்கி, எதிர்பார்த்து நிற்கிறான்
    தலைவன். கூர்ந்து கவனிக்கிறான். கூர்ந்து கவனித்த பின்னர்
    அவளின் செயலால் அவளது பார்வையின் தன்மையால், தலைவி
    தன் மீது அன்பு கொண்டுள்ளாள் என்பதைப் புரிந்து கொள்கிறான்
    தலைவன். அதனை,

    யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்

    தான் நோக்கி மெல்ல நகும்

    (குறள்: 1094)


    (காலை = பொழுது)

    என்ற தலைவியின் செயலால் குறிப்பிடுகிறான்.


        நான் அவளைப் பார்க்கும்போது
    அவள் என்னை எதிர் நோக்காது,
    நிலத்தைப் பார்க்கிறாள். அதை
    அறிந்து கொண்ட நான், அவளைப்
    பார்க்காதவன் போல் நிற்கிறேன்.
    அப்பொழுது அவள் என்னைப்
    பார்க்கிறாள். பார்த்தது மட்டுமல்ல
    தனக்குள் மெல்லச் சிரித்தும்
    கொள்கிறாள். தலைவியின் இந்தச்
    செயலிலிருந்து, அவள் என்னை
    விரும்புகிறாள் என்பதை நான் நன்கு


    புரிந்து கொண்டேன் என்கிறான் தலைவன்.

        நாணத்தன்மை உடைய தலைவி, எந்தவித உள் உணர்வாக
    இருந்தாலும், அதை வெளிப்படையாக உணர்த்தமாட்டாள். அது
    அவளது இயல்பு. தலைவனைப் பார்த்ததும், அவனை அவள்
    விரும்பினாள்.     இருப்பினும் அதை அவள் உடனே வெளிப்படுத்தவில்லை. மிகவும் பக்குவமாகவும் - மறைமுகமாகவுமே
    வெளிப்படுத்துகிறாள். தலைவன் தன்னைப் பார்க்கும்பொழுது
    அவனை எதிர்நோக்காது, எங்கோ நோக்குவதைப்போல நிலத்தை
    நோக்குகிறாள். ஆனால், அவன் தன்னை நோக்காத நேரம்
    பார்த்து, அவனைப் பார்க்கிறாள். அதோடு, அவனைப் பார்த்து
    விரும்பிய மகிழ்ச்சியில் தனக்குள் மெல்ல நகைக்கிறாள். இவ்வாறு
    தான் தலைவனை விரும்பிய தன்மையினை நாணமிகுந்த இந்தச்
    செயலால் வெளிப்படுத்துகிறாள்.

        தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் முதல்
    சந்திப்பை, ஒரு நாடகக் காட்சிபோல், நம் மனக்கண் முன் கொண்டு
    நிறுத்துகிறார் வள்ளுவர்.


    2.5.2 மலரின் மணமும் மனமும்


        முதல் சந்திப்பில், மெல்ல நகைத்து, தன் விருப்பத்தை
    வெளிப்படுத்திய தலைவி, தொடர்ந்து நிகழ்ந்த களவு ஒழுக்கத்திலும்
    தன் இயல்பிற்கேற்ப தன் உணர்வுகளையெல்லாம் மறைமுகமாகவே
    புலப்படுத்தினாள். தலைவன் மீது தான் கொண்டுள்ள அன்பைக் கூட
    ஒரு குறிப்பினால் தான் உணர்த்துகின்றாள்.


    முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல்பேதை
    நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு



    (குறள்: 1274)


    (முகை = மொட்டு, மொக்குள் = மலரும் மொட்டு, பேதை = பெண்)

    மலரின் மொக்கு முதிர்ந்து மலரும் பொழுது, அதன்
    உள்ளிருந்து, மணம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். அதைப்போல,
    தலைவியின் மலரும் நிலையில் உள்ள புன்னகை ஆகிய
    மொட்டுக்குள்ளும் குறிப்பு ஒன்று உள்ளது. அது தலைவன்
    மீதுள்ள அன்பு.

        தலைவியின் மன இயல்பை வெளிப்படுத்துவதற்கு வள்ளுவர்
    பயன்படுத்தும் உவமை மிகவும் அருமையானது. மலரின் மொட்டு,
    மெல்ல மெல்ல விரியும். அது விரிய விரிய, சிறிது சிறிதாக அதன்
    மணம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். மலர் முழுமையாக
    மலரும்போது, அதன் மணம் முழுமையாக வெளிப்படும். மலரின்
    மணம் வெளிப்பட்ட பின்னரே, மலரின் தரமும் தன்மையும்
    புலப்படும். அதுபோல, தலைவன் மீது தலைவி கொண்டுள்ள
    அன்பு முதலில் மெல்ல, மெல்ல, பிறகு முழுமையாக வெளிப்பட்ட
    பின்னரே, அ வளது அன்பின் தன்மை வெளிப்படும். தலைவி,
    தலைவன் மீது எத்தகைய அன்பு கொண்டுள்ளாள் என்பதும்
    புலப்படும்.

        மலரினும் மெல்லியளாகிய தலைவியின் அன்பு, மலரிலிருந்து
    வெளிப்படும் நறுமணம்போல வெளிப்படுகிறது என்பதை எவ்வளவு
    நயமாக வள்ளுவர் விளக்குகிறார் பாருங்கள்!

        தலைவி, தலைவனைப் பார்த்த உடனே தன் காதலை
    வெளிப்படுத்தவில்லை.     தன்     அன்பையும் உடனேயே
    புலப்படுத்தவில்லை. சிறிது சிறிதாகத்தான், பழகப் பழக, நாள் ஆக
    ஆகத்தான் வெளிப்படுத்தினாள். எனவேதான், சிறிது சிறிதாக,
    மெல்ல மெல்ல, இதழ் விரிந்து, மலர்ந்து மணம் பரப்பும் மலரோடு
    தலைவியின் அன்பை ஒப்பிட்டுக் கூறுகிறார் வள்ளுவர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:51:59(இந்திய நேரம்)