தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.2-தலைவியின் அன்பு

  • 2.2 தலைவியின் அன்பு

    E


        தலைவன் மீது மிகுந்த அன்பு உடையவள் தலைவி. அவன்
    நினைவிலே வாழ்பவள். அந்த அன்பைப் பல நிலையிலும்,
    பலவகையிலும் வெளிப்படுத்துகிறாள். தன் கண்ணினுள்ளும்,
    நெஞ்சினுள்ளும் நீக்கமற நிலைத்துள்ளான் தலைவன். அதை
    யாரும், எதுவும் பிரிக்க முடியாது; பிரிக்கவும் கூடாது என்று
    எண்ணுகிறாள் அவள்.


    2.2.1 கண்ணுள் நிறைந்த காதலன்


        பெண்கள்,     தம்     கண்ணை
    அழகுபடுத்துவதற்குக் கண்ணில் மை
    தீட்டுவது வழக்கம். கண்ணை
    அழகுபடுத்த விரும்பிய தலைவி,
    மைதீட்டுவதற்கு முன் ஒரு கணம்
    சிந்தித்துப் பார்க்கிறாள். மை
    தீட்டும்பொழுது,     கண்ணினுள்
    மைத்துளிகள் விழலாம். விழாமல்
    இருப்பதற்காகக்     கண்ணை

    மூடவேண்டும். கண்ணை மூடினால் கண்ணினுள் நிறைந்து நிற்கும்
    தலைவன் மறைந்து விடுவாரே என்று அஞ்சுகிறாள்.
    கண்ணை
    மூடிய பின்னரே மை தீட்ட இயலும். எனவே கண்ணை மூடுவதற்குத்
    தயங்குகிறாள். ஏன்? கண்ணுக்கு மை தீட்டும் அந்தச் சிறிது
    நேரத்தில் கூட, தலைவன் மறைவதை அவளால் தாங்கிக் கொள்ள
    முடியாது. எனவே, கண்ணுக்கு அழகு சேர்க்கும் மை தீட்டுவதையே
    நிறுத்திவிட்டேன் என்கிறாள் தலைவி.


    கண் உள்ளார் காதலர் ஆகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக்கு அறிந்து




    (குறள்: 1127)


    (எழுதேம் = எழுதமாட்டேன், கரப்பாக்கு = மறைவது)

    தலைவன் மீது கொண்ட அன்பைத் தன் கண்ணுக்கு அழகு
    சேர்க்கும் செயலில் கூட வெளிப்படுத்துகிறாள் தலைவி.


    2.2.2 நெஞ்சினுள் நிறைந்த காதலன்


        கண்ணுள் நிறைந்துள்ள காதலன், தலைவியின் நெஞ்சினுள்ளும்
    நிறைந்துள்ளான். எனவே சூடான உணவை அருந்துவதற்கும்
    அவள் அஞ்சுகிறாள். ஏனென்றால், சூடான உணவை
    உண்ணும்போது தலைவியின் நெஞ்சினுள் நிலைத்திருக்கும்
    தலைவனையும் அது சுடும் என்று நினைக்கிறாள்.


    நெஞ்சத்தார் காதலவராக வெய்துஉண்டல்
    அஞ்சுதும் வேபாக்கு அறிந்து



    (குறள்: 1128)


    (வெய்து = சூடாக, வேபாக்கு = வேகும்)

    தன் உள்ளம் கவர்ந்த, தனது அன்புக்குரிய தலைவன்
    பாதிக்கப்படுவானே, என்று நினைத்து உணவு அருந்துவதற்குக்கூட
    தயங்குகிறாள் தலைவி. உணவு அருந்தாமல் உயிர் வாழ்வது அரிது.
    இருப்பினும், தன் உயிரைவிடத் தன் அன்புக்கு உரிய தலைவனின்
    உயிர்தான் பெரியது என்று நினைக்கிறாள் தலைவி.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:51:47(இந்திய நேரம்)