தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.1

  • 2.1 இறைமை

    எங்கும் பரந்து கிடக்கின்ற பொருள்களைப் பார்த்து இறைந்து
    கிடக்கின்றன என்று குறிப்பிடுவோம். இறை என்பதற்கு, இங்குப்
    பரந்து என்ற பொருள். பொதுவாக ‘இறை’ என்றால் தங்குதல்
    அல்லது எங்கும் நிறைதல் (immanence) எனும் பொருள்கள்
    உண்டு. எனவே, அங்கு, இங்கு எனாதபடி எங்கும் நிறைந்த
    ஒரு பரம்பொருளை, இறை அல்லது இறைவன் என்று சுட்டுவர்.

    மேலும் ‘இறைமை’ என்பதற்குத் தலைமை, தெய்வத்தன்மை,
    அரசாட்சி, கடவுள், பரப்பு என்ற பொருள்களும் உள்ளன.
    இறைமை என்பது பொதுவாகச் சமயங்களைப் பொறுத்த
    வரையில் முழுமுதற் கடவுளையே குறிக்கும்.


    2.1.1 இறைமையும் நம்பிக்கையும்

    இயற்கை நிகழ்வுகளில் காணும் அளப்பரிய சக்தியின்
    வெளிப்பாட்டில் அச்சம் தோன்ற, புலனுக்குப்படாத அச்சக்தியை
    மரியாதை கலந்த அச்சத்துடன் மக்கள் நோக்கலாயினர் எனவும்
    அந்நோக்கே இறைமைக் கோட்பாட்டிற்கு வழிகோலியதாகவும்
    கூறுவர்.

    பெரும்பாலான     சமயங்கள்     இறை நம்பிக்கையின்
    அடிப்படையிலானவை.     இந்த உலகம் இறைவனால் உருவாக்கப்பெற்றது. இறைவன் மக்கள் இனத்தைப் படைத்தார். விலங்கு , பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, மரம், செடிகொடி, ஞாயிறு, மதி, விண்மீன்கள் முதலியவற்றையும் இறைவனே படைத்தார். அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பன போன்றவை அனைத்தும், சமயம் சார்ந்த நம்பிக்கைகள். இவற்றின் அடிப்படையிலேதான் இறைக்கோட்பாடுகளும், சமயத் தத்துவங்களும் தோன்றின.

    உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்குக் காரணமாகக்
    கருதப்படும் இறைவன் மனித ஆற்றலால் அறியமுடியாத ஒரு
    மலோன சக்தி என்றும் நம்பினர்.எனவே, இறைவனை வழிபடத்
    தொடங்கினர்.


    2.1.2 இறைமையும் பண்டைத் தமிழரும்

    பண்டைத் தமிழ் மக்கள், தாம் வாழ்ந்த நிலப்பரப்பையும்,
    வாழ்க்கைச் சூழலையும், தங்கள் பழக்க வழக்கங்களையும்
    அடிப்படையாகக் கொண்டே இறைவழிபாட்டையும் பின்பற்றினர்.

    மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தையும், காடு சார்ந்த முல்லை
    நிலத்தையும், வயல் பகுதியாகிய மருத நிலத்தையும், கடலை
    ஒட்டிய மணல் சார்ந்த நெய்தல் நிலத்தையும், வறட்சியின்
    காரணமாக மாறி அமைந்த பாலை நிலத்தையும் பின்புலமாகவும்,
    சூழலாகவும் கொண்டு வாழ்ந்தனர். வாழ்ந்த நிலத்திற்கு
    ஏற்பவே, தாம் வழிபடும் இறைவனையும் அமைத்துக் கொண்டனர்.


    • முருகன் வழிபாடு

    தமிழில் ‘முருகு’ என்றால் அழகு என்று பொருள். அழகான
    இயற்கைக் காட்சி நிறைந்த பகுதி மலையும் மலைச்சாரலும் ஆகும்.
    அந்த அழகை வழிபடும் நிலையில் அந்நிலப்பகுதியின்
    இறைவனுக்கு ‘முருகன்’ என்று பெயரிட்டு வழிபட்டனர்.
    பிற்காலத்தில் காப்புக்     கடவுளாகக்     காட்டில் வாழும்
    விலங்கினங்களிடத்திலிருந்து காப்பாற்றும் கடவுளாக வேலை
    உடைய முருகன் கருதப்பட்டான். பறவைகளிலேயே அழகான
    மயில் அவனது வாகனமாக அமைக்கப்பட்டது. முருகனின்
    பெருமை வெளிப்படும் வகையில் பத்துப்பாட்டில் ஒன்றான
    திருமுருகாற்றுப் படை எனும் நூல் இயற்றப்பெற்றது.
    இன்றைக்கும், அழகு மிகுந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாகிய
    முருகனே தமிழ்க் கடவுளாகக் கருதப்படுகிறான்.


    • பிற இறை வழிபாடு

    முல்லை நிலத்தினர் திருமாலையும், மருத நிலத்தினர்
    இந்திரனையும், நெய்தல் நிலத்தினர் வருணனையும், பாலை
    நிலத்தினர் கொற்றவை என்னும் பெண் தெய்வத்தையும் வழிபட்டு
    வந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தின் மூலம் அறிய முடிகிறது.


        மாயோன் மேய காடுறை உலகமும்
        சேயோன் மேய மைவரை உலகமும்
        வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
        வருணன் மேய பெருமணல் உலகமும்
        முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
        சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

    (தொல். அகத்திணை: 5)


    (மாயோன் = திருமால், மேய = பொருந்திய, உறை = தங்கும்,
    சேயோன் = முருகன், மை = கருமை, வரை = மலை,
    பெருமணல் = மணல் பகுதியான கடற்கரை (நெய்தல்)

    கொற்றவை வழிபாடும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.


        மறம்கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
        கொற்றவை நிலையும் அகத்திணை புறனே

    (தொல்: பொருள், புறத்திணை : 62)


    (மறம் = வீரம், கடை = முடித்தல்)

    வீரத்தினால் அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதற்குத்
    துடிநிலை என்று பெயர். அந்த வெற்றிக்குத் துணை செய்த
    தெய்வம் கொற்றவை. அந்தத் தெய்வத்தைப் புகழ்ந்து வாழ்த்திட
    வணங்கும் விழாவுக்குக் கொற்றவை நிலை என்று பெயர்.

    மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து எவை தெரிகின்றன? பண்டைத்
    தமிழர்களிடையே இறை நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதுவும்,
    பயன் கருதியும் பாதுகாப்புக் கருதியும் இறைவனை வழிபட்டனர்
    என்பதுவும் தெரிகின்றன.


    2.1.3 இறைமையும் சமயச் செல்வாக்கும்

    பண்டைத் தமிழர்களிடம் சமயங்களுக்கான அடிப்படைத்
    தத்துவங்கள் இருந்தன. சங்க நூல்களில் இவற்றைக் காணலாம்.


    • பல சமயங்கள்

    இன்று தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி வருகின்றனர்.
    சைவம், வைணவம், பௌத்தம், சமணம், இசுலாம், கிறித்துவம்
    போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்க சமயங்களாகும். சங்க
    காலத்தில், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகியவை
    மட்டுமே இருந்தன. இவற்றுள் பொதுமையைக் காணும் நோக்கில்,
    இசுலாமும் கிறித்துவமும் இந்திய மண்ணில் காலூன்றுவதற்கு
    முன்னரே ஆறாம் நூற்றாண்டில், திருமூலர்,


        ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
         நன்றே நினைமின்!’

    (திருமந்திரம்: 2066)


    (நினைமின் = நினையுங்கள்)

    என்ற தத்துவத்தை வெளியிட்டார். திருமூலர்க்கு முந்தைய
    திருவள்ளுவரிடமும் இந்தப் பொதுமைத் தன்மையைக் காண
    முடிகிறது. இதைத் திருக்குறளின் ‘கடவுள் வாழ்த்து’ எனும்
    அதிகாரத்தில் காணமுடியும். அதில் எந்த ஒரு தனி சமயத்தின்
    பெயரையோ, தனி ஒரு கடவுளின் பெயரையோ குறிக்கவில்லை.
    இந்த நிலையைத் திருவள்ளுவர், திருக்குறளின் இறுதிவரையிலும்
    பின்பற்றியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:57:22(இந்திய நேரம்)