தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.5

  • 2.5 இறைவன்

    ‘இறை’ என்பதற்கு உரிய பொருளை முன்னர் பார்த்தோம்.
    எங்கும் நிறைந்து நிற்கும் பரம்பொருள் இறைவன் என்று
    அழைக்கப்படுகிறது. இறைவன் என்றால் யார்? அவன்
    எத்தகையவன் என்பன பற்றி ஒரு குறுகிய எல்லைக்குள்
    உட்படுத்த முடியாத, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற
    வகையிலான சிறந்த கருத்துகளை வழங்குகின்றார் வள்ளுவர்.


    2.5.1 அகரமாயிருப்பவன்

    இறைவனைப் பற்றிப் பல்வேறு வகையான விளக்கங்கள்
    கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, அவன் தொடக்கமும் முடிவும்
    இல்லாதவன் என்பதாகும். சமஸ்கிருதத்தில் இறைவனை ஆதியும்
    அந்தமும் இல்லாதவன் என்று குறிப்பிடுவர். தொடக்கமும்
    முடிவும் இல்லாத எல்லாம் வல்ல இறைவனே எல்லாவற்றிற்கும்
    தொடக்கமாக அமைகின்றான் என்கிறார் வள்ளுவர்.


    அகர முதல எழுத்து எல்லாம் - ஆதி
    பகவன் முதற்றே உலகு


    (குறள்: 1)


    (முதற்றே = முதலாவதாக)

    எழுத்துகள் எல்லாம் அகர ஒலியை     முதலாகவும்
    அடிப்படையாகவும் உடையன. அதைப்போல இறைவனும்
    உலகத்தின் முதலாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளான்.

    இக்குறளைப் பற்றிப் பலரும் பலவாறு, தத்தம் விருப்பத்திற்கு
    ஏற்ப விளக்கம் கொடுக்கின்றனர். பகவன் என்பது இறைவனைச்
    சுட்டாது. பகவு + அன் = பகவன் என்பது பகுத்தறிவு
    உடையவனையே சுட்டும் என்றும் குறிப்பிடுவர். ஆதிபகவன்
    என்று சுட்டுவது இறைவனையே என ஒரு சாரார்
    கருதுகின்றனர். இந்தக் குறளை முழுவதுமாக ஆய்ந்து
    நோக்கும்பொழுதும் வள்ளுவருக்கு இறை நம்பிக்கை இருந்தது
    என்பது தெளிவு.


    • தமிழ் எழுத்துகளின் தனிச் சிறப்பு

    தமிழிலுள்ள உயிர் எழுத்துகள் தனித்து இயங்கும். தனித்தும்
    பொருள் வழங்கும். மெய் எழுத்து அப்படியல்ல. உயிரைச்
    சார்ந்தே இயங்கும். உயிர் இல்லாமல் அது தனித்து
    இயங்காது. தொல்காப்பியர் உயிர், மெய் என்று எழுத்துகளுக்குப்
    பெயர் சூட்டி இருப்பதே அறிவியல் அடிப்படையில் என்பர்.

    நம் உடலை அதாவது மெய்யை இயக்குவது உயிர். உயிர்
    இல்லாவிட்டால் இந்த மெய் இயங்காது. உடலின் இயக்கம்
    நின்றுவிடும். இந்த உடலியல் அடிப்படை உண்மையை
    மனத்திற்கொண்டே தமிழ் எழுத்துகளுக்குத் தொல்காப்பியர்
    பெயர் சூட்டியுள்ளார். தமிழ் மொழிக்கு உயிராக விளங்கும்
    எழுத்துகளை உயிர் எழுத்து என்றும் உடலாக (மெய்யாக)
    விளங்கும்     எழுத்துகளை மெய் எழுத்து என்றும்
    குறிப்பிட்டுள்ளார்.


    • பாவாணரும் வள்ளுவரும்

    மேற்குறிப்பிட்டவற்றை மனத்திற்கொண்டே பாவாணர் இந்தக்
    குறளுக்கு நயவுரை கூறியுள்ளார். பாவாணரின் உரையின் சாரமே
    வள்ளுவரின் இறைக் கோட்பாட்டுத் தத்துவம் எனலாம்.

    தமிழ் எழுத்துகளில், அகரம் தனித்து உருவாகவும், பிற உயிர்
    எழுத்துகளில் நுண்ணியதாய்க் கலந்தும், மெய் எழுத்துகளை
    இயக்கியும் அருவாக அமைந்திருக்கும் சிறப்புடையது. அகரத்தின்
    இத்தன்மையை வள்ளுவர் கூறும் இறைத்தன்மையுடன் ஒப்பிட்டுக்
    கூறுகிறார் பாவாணர்.

    அருவாகவும் உருவாகவும் இருக்கும் இறைவன் தூணிலும்
    இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பர். உலகின்
    தொடக்கமாக இருக்கும் இறைவன் தொடர்ந்த உலக இயக்கத்தில்
    நீக்கமற நிலைத்திருக்கிறான் என்பதே இறைவன் பற்றிய
    வள்ளுவரின் கோட்பாடு ஆகும்.


    2.5.2 விருப்பு வெறுப்பு இல்லாதவன்

    மனிதன் ஏதாவது ஒருவகையில், ஏதாவது ஒன்றின்மீது பற்று
    வைத்திருப்பான். எனவேதான், வள்ளுவர், இன்னொரு இடத்தில்,
    பற்றுடைய மானிடனே, பற்று அற்றவனாக ஒருவன் இருக்கிறான்.
    அவன் இறைவன். அவன் மீது பற்றுக்கொள். அந்தப் பற்று இந்த
    உலகிலுள்ள பற்றை அழிப்பதற்கு அல்லது நீக்குவதற்கு வாய்ப்பு
    அளிக்கும் என்று குறிப்பிடுகிறார்.

    விருப்பு, வெறுப்பு எனும் இயல்பு மனிதனுக்கு உரியது. விருப்பு
    வெறுப்பு இல்லாத மனிதனைப் பார்ப்பது அரிது. விருப்பு,
    வெறுப்பு என்ற எல்லையைக் கடந்தவன் யார் கடவுள்தானே?
    எனவேதான் வள்ளுவர் இறைவன் எத்தகையவன் என்பதற்கு
    விளக்கம் கொடுக்கும்பொழுது அவன் விருப்பு வெறுப்பு
    இல்லாதவன். அத்தகைய இறைவனை வழிபடுபவனுக்குத்
    துன்பம் இல்லை என்று குறிப்பிடுகிறார்.


    வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல


    (குறள்:4)


    (வேண்டுதல் = விருப்பம், வேண்டாமை = வெறுப்பு, அடி = கால்,
    யாண்டும் = எப்பொழுதும், இடும்பை = துன்பம், இல = இல்லை)

    தனக்குரிய துன்பங்களை நீக்குவதற்கு யாரை அணுகுவது? யாரை
    வணங்குவது? இறைவனை. அந்த இறைவன் எத்தகையவன்
    என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார்     வள்ளுவர். விருப்பு
    உடையவன் வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவான். வெறுப்பு
    உடையவன் வேண்டாதவர்களைப் பழிவாங்குவான். அவன்
    மனிதன். ஆனால் இந்த இரண்டும் இல்லாதவன் இறைவன்.
    எனவே அவனிடம் நம் குறைகளை - துன்பங்களை முறையிட்டால்
    விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் நமக்கு நன்மை
    விளைவிப்பான் இறைவன் என்று இறைமைக்கு விளக்கம்
    தருகிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:57:40(இந்திய நேரம்)