தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.2

  • 2.2 இம்மையில் இறைமை

    காலந்தோறும் இறைமை பற்றிய கருத்துகள் சமயவாதிகளாலும்,
    பிறராலும் பலவிதமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. சூழலுக்கேற்ப
    மாற்றப்பட்டும் உள்ளன. ஆனால், ‘இறைமை’ பற்றிய வள்ளுவரின்
    கருத்துகள் நிலைத்த தன்மையைக் கொண்டு எல்லோர்க்கும்,
    எல்லாக் காலத்திற்கும் பொருந்துகின்ற வகையில் அமைந்துள்ளன.


    2.2.1 அரசருள் இறைமை

    இறை என்ற சொல்லின் பொருளை முன்பு பார்த்தோம். ‘இறை’
    என்பது அரசனையும் சுட்டும். எனவே ‘இறைமாட்சி’ என்ற
    தலைப்பின் கீழ், அரசனின் கடமைகளையும், சிறப்புகளையும்
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் நேர்மையான முறையில்
    ஒரு மன்னனது ஆட்சி அமையவேண்டும். அத்தகைய ஒரு நல்ல
    ஆட்சியை வழங்கும் மன்னன் இறைவனாகக் கருதப்படுவான்
    என்கிறார் வள்ளுவர்.


    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், ‘மக்கட்கு
    இறை’ என்று வைக்கப்படும்


    (குறள்:388)


    ‘முறை’ என்றால், நடுநிலை பிறழாத நல்ல முறையேயாகும். நல்ல
    முறையில் ஒரு மன்னன் ஆட்சி செய்வானானால், நாடு நலம்
    பெறும். மக்களும் பாதுகாக்கப்படுவார்கள்.

    இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? இறை அல்லது இறைமை
    என்பது செயல்படும் அல்லது பயன்படும் தன்மையில்தான்
    அமைந்துள்ளது. எனவே செயல்தான் முக்கியம். சடங்குகளோ
    சம்பிரதாயங்களோ முக்கியம் அல்ல என்பது வள்ளுவர் கருத்து.

    மக்களுக்கு நல்லதைச் செய்து அவர்களுக்குப் பாதுகாப்பாக
    அமையும் அரசன் இறைமைத் தன்மை உடையவன். அவனும்
    இறைவனாகக் கருதப்படுவான். எனவேதான், ‘இறை’ என்று
    வைக்கப்படும் அல்லது கருதப்படும் என்று குறிப்பிடுகிறார்
    வள்ளுவர்.

    மேற்குறிப்பிட்டவாறு இறைமை பற்றிய தன் கருத்தை இக்குறள்
    மூலம் வெளிப்படுத்துகிறார் வள்ளுவர்.


    2.2.2 மனிதருள் இறைமை

    ஆன்மா வேறு, உடல்வேறு. ஆன்மா அழியாது. உடல்
    அழிந்துவிடும். இந்த உலகமும் நிலை இல்லாதது, அழியக்
    கூடியது.     எனவே     அழிவு இல்லாத வானுலகத்தை,
    வீடுபேற்றை அடைவதே இவ்வுலக வாழ்க்கையின் குறிக்கோள்
    என்பது பெரும்பாலான சமயங்கள் தரும் தத்துவங்கள். அதனால்
    இந்த மண்ணுலக வாழ்க்கைக்கு, அதிலும் குறிப்பாக இல்லற
    வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என்பர்.
    ஆனால் வள்ளுவர், இத்தகைய மறு உலகச் சிந்தனைகளுக்கு
    முற்றிலும் மாறாக இவ்வுலகத்தில் வாழும் இல்வாழ்க்கைக்குச்
    சிறப்புக் கொடுக்கிறார்.

    இல்வாழ்க்கை பற்றிப் பல அதிகாரங்களை வள்ளுவர்
    இயற்றியுள்ளார். காரணம் என்ன? இது இல்வாழ்க்கைக்கு
    வள்ளுவர் கொடுத்த சிறப்பு.

    ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது இயற்கை. இதன்
    வளர்ச்சியான நெறிப்படுத்தப்பட்ட இல்வாழ்க்கையைப் பற்றி
    வள்ளுவர் பல கருத்துகளைக் கூறியுள்ளார்.

    இந்த உலக வாழ்வில், இல்வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய,
    நல்ல நெறிகளை ஒழுக்கங்களை ஒருவன் பின்பற்றி
    வாழவேண்டும். அவ்வாறு பின்பற்றி வாழ்ந்தால், அவன்
    வானுலகத்தில் வாழ்வதாகக் கருதப்படும் இறைவனோடும் சமமாக
    எண்ணப்படுவான் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

    நல்ல நெறிகளைப் பின்பற்றி ஒழுங்காக வாழ்ந்தால் என்ன பயன்
    கிட்டும்? என்ற வினா எழுவது இயல்பு. அதற்குச் சமயங்கள்
    ‘இந்த உலக வாழ்விலிருந்து விடுபட்டு, பிறப்பற்ற முழு
    விடுதலையாகிய வீடுபேறு கிட்டும்’ என்று விளக்கம்
    கொடுக்கின்றன. ஆனால் வள்ளுவர் சமயவாதிகளின் இக்கருத்தை
    முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இம்மையிலும் அதாவது
    இவ்வுலக வாழ்விலும் வீடுபேற்றைப் பெறலாம் என்கிறார்.

    சமயவாதிகள் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தபொழுது
    ‘வாழ்க்கை வேண்டும், வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று
    வலியுறுத்தியவர் வள்ளுவர். மேலும் அந்த வாழ்க்கை
    வாழவேண்டிய முறையில் வாழ்ந்து நிறைவு உடையதாக, இருந்தால்
    அந்த வாழ்க்கையின் பயன்      வீடுபேறு பெறுவதற்குச் சமம்;
    வீடுபேற்றை இந்த உலகிலேயே, உலக வாழ்விலேயே பெற்று
    மகிழலாம் என்கிறார் வள்ளுவர். எனவே, வாழவேண்டிய
    முறையில் வாழும் இல்லறத்தானும் இறைமைத் தன்மை
    உடையவன். அவனும் இறைவனுக்குச் சமமானவன் என்று
    குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

    இந்த உலகில், நிலையற்ற வாழ்க்கை என்று கருதப்படும்
    இல்வாழ்க்கையிலும்,     ஒருவன் தான் ஆற்றவேண்டிய
    கடமைகளை ஒழுங்காக முறையாக ஆற்றுவானானால், அவனும்
    இறைமைத் தன்மை உடையவனே என்று வள்ளுவர் கூறுகிறார்.


    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்


    (குறள் :50)


    இம்மை உலகிலேயே விழுமிய பேரின்பத்தை ஒரு மனிதன்
    பெற இயலும் என்பதே வள்ளுவர் கண்ட இறைமைத்தன்மை.
    பொதுவாக இந்தியச் சிந்தனை வரலாற்றில், வாழ்க்கை வெறுப்பு
    என்ற போக்கு நிறையக் காணப்படுகின்றது. ஆனால் அவற்றிற்கு
    எதிராக வள்ளுவர் செய்த புரட்சி திருக்குறளாக மலர்ந்தது
    என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை.



    பயில்முறைப் பயிற்சி- I

    மாணவர்களே,

    இம்மையில் - இப்பிறப்பில்-இறைமையை எய்தும் நெறி
    பற்றி வள்ளுவரின் கருத்தைப் படித்தீர்கள். இதோ
    அந்நெறியை விளக்கும் மற்றுமொரு குறள். இறைமையை
    அடைய விரும்பும் ஒருவன் செய்ய வேண்டுவன எவை
    என்பதையும் செய்ய வேண்டாதன எவை என்பதையும்
    இதில் குறிப்பிடுகிறார்.


    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்


    (குறள்: 280)


    இங்கு இறைமையை எதற்கு ஒப்பாகப் பார்க்கிறார்
    வள்ளுவர்? சிந்தியுங்கள்.


    2.2.3 இல்லற மாண்பில் இறைமை

    பெண்ணுக்குரிய இலக்கணம் சொல்லும்பொழுது, தன்னையும் (தன்
    கற்பையும்) தன் கணவனையும், வாய்மையையும் காத்து
    வாழ்பவளே பெண் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். அடுத்த
    நிலையில் அவ்வாறு தன்னை அதாவது தன் கற்பைக்
    காப்பாற்றுகின்ற பெண், தன் கணவனையே தெய்வமாகக்
    கொண்டு தொழுது வாழ்வாளானால், அவள் மழைதரும்
    மேகத்தைப் பார்த்து, ‘மேகமே நீ இப்பொழுதே மழையைப்
    பெய்வாயாக’ என்று
    கட்டளையிட்டால், உடனே மழை பெய்யும்’
    என்கிறார் வள்ளுவர்.


    தெய்வந் தொழாஅள் கொழநன்தொழுது எழுவாள்
    பெய்எனப் பெய்யும் மழை


    (குறள்: 55)


    (கொழுநன் = கணவன்)

    இறைவன் ஒருவனே. அந்த இறைவன் காதலிக்குக் காதலனாய்த்
    திகழ்கிறான். பின்னர் ஏன் காதலி இரண்டாவது இறைவனை
    வழிபடவேண்டும் என்பதே வள்ளுவரது வினா என்று
    குறிப்பிடுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார்
    அவர்கள். எனவேதான் தெய்வத்தைத் தொழாமல் கணவனையே
    தொழுகிறாள். அத்தகைய பெண்ணின் கற்பின் ஆற்றல் எல்லை
    இல்லாதது. மழையைக்கூடப் பெய்யச் செய்யும் ஆற்றல்
    உடையது. இயற்கையையும் ஏவல் கொள்ளும் ஆற்றல்
    உடையது.


    • காதலர்களிடையே இறைமை

    இதில்,     ஒரு பெண்ணின் கற்பின் திண்மையையும்,
    இல்வாழ்க்கையில், கணவன் மனைவியின் இடையே உள்ள
    அன்பின் பிணைப்பையும் வெளியிட விரும்பிய வள்ளுவர்
    அவரது இறைமைக் கோட்பாட்டையும் வெளியிட்டுள்ளார்.

    திரு.வி.கலியாணசுந்தரனார், இக்குறளுக்குக் கொடுக்கும் விளக்கம்
    இதை மெய்ப்பிக்கிறது.

    எவர், எவர்; எந்த, எந்த வழியில் தன்னைக் கருதி வழிபட்டாலும்,
    அவர்களுக்கு அவர், அவர் வழியில் நின்று, அருள் புரியும்
    தன்மை வாய்ந்தவர் இறைவன். இயற்கையிலும், பிற இடங்களிலும்
    இறைவன் அன்பின் வடிவில் வீற்றிருக்கிறார். எனவே, ‘அன்பே
    தெய்வம்,’ ‘தெய்வமே அன்பு’ என்று குறிப்பிடுகின்றோம்.


    • காதலருக்குக் காதலன்

    அன்பின் நிலைகள் பல. அவற்றுள் காதல் சிறந்தது. காதல்
    இல்லாத உயிர்கள் உலகில் இல்லை. காதல் உயிர்களிடத்தில்
    இயல்பாய் அமைந்திருப்பது. ஒருத்தியையும் ஒருவனையும்
    ஒன்றுபடுத்துவது காதல். தம்மை ஒன்றுபடுத்தும் காதலைவிட
    மலோனதாக ஒன்று இருப்பதாக அவர்களுக்குத் தோன்றாது.
    அவளுக்கு இவனே எல்லாம். இவளுக்கும் அவனே எல்லாம்.
    எனவே காதலிக்கு இறைவன் காதலன் என்றும் கொள்ளலாம்.
    எல்லா இடத்திலும் தங்கியிருக்கும் அல்லது நிறைந்து இருக்கும்
    இறைவன் காதலிக்குக்     காதலனாகவும், காதலனுக்குக்
    காதலியாகவும் காட்சியளிக்கிறான்.

    அன்பால் பிணைக்கப்படும் காதலர்களிடையே காணப்படும்
    காதல் தன்மையையே இறைமை என்கிறார் வள்ளுவர்.


    2.2.4 சிந்தனைத் தெளிவில் இறைமை

    சிலர் எப்பொழுதும், எதைப்பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும்
    ஐயம் கொள்வர். தன் நிழலைக் கூட நம்ப மாட்டார்கள்.
    இத்தகையோர் வாழ்க்கையில் மன நிறைவு இல்லாமல்
    அமைதியின்றி அலைவார்கள். இதற்குக் காரணம் ஒரு பொருளை
    அல்லது கருத்தைப் பற்றிய முழுமையான அறிவும் (Knowledge),
    தெளிவான சிந்தனையும், மதிநுட்பமும் இல்லாமையே என்பர்
    உளவியலாளர்கள்.

    தான், தன் மனத்தில் நினைத்தது சரியானது; இதில் எந்தவிதமான
    ஐயமும் இல்லை என்று எண்ணுகின்றவன் தெளிவான சிந்தனை
    உள்ளவன்.     இந்தத் தெளிவான சிந்தனைக்கு அவனது
    ஆழ்ந்தபுலமையும், மதிநுட்பமுமே காரணம். இத்தகையோன்
    எந்தவித ஐயமும் இல்லாமல் இதுதான் உறுதியானது சரியானது
    என உய்த்து அறியத்தக்க ஆற்றல் வாய்ந்தவன். அவன்
    இறைவனோடு சமமாகக் கருதி மதிக்கப்படுவான் என்று
    குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


    ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
    தெய்வத் தோடு ஒப்பக் கொளல்


    (குறள்: 702)


    (அகம் = உள்ளம், கொளல் = கொள்ளவேண்டும்)

    ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை முகத்தாலும் கண்ணாலும்
    உணரவல்லவனை, அவன் மனிதனே ஆனாலும் தெய்வத்தோடு
    ஒப்பக்கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


    2.2.5 வினைத் திட்பத்தில் இறைமை

    ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து முயற்சித்து வெற்றி
    பெறாது போயின், தனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்;
    நாம் எவ்வளவு முயன்றாலும் வெற்றி கிட்டாது எல்லாம்
    விதிப்படிதான் நடைபெறும் என அப்படியே சோம்பி விடுவான்.
    வாழ்க்கையில் பலரும் இவ்வாறுதான் தம் முயற்சிகளின்
    நம்பிக்கையை இழந்து சோர்ந்து விடுகின்றனர். இத்தகைய மனம்
    படைத்தோரை மனத்திற் கொண்டுதான் வள்ளுவர், ‘சோர்ந்து
    விடாதே, மன உறுதிகொள் நீ உன் உடலை வருத்தி எவ்வளவு
    உழைக்கிறாயோ அந்த அளவுக்கு உனக்குப் பலன் கிட்டும்’ என
    நம்பிக்கை ஊட்டுகிறார். மன உறுதி அளிக்கிறார்.

    உன் உழைப்புப் பாழாகாது. உழைப்பிற்குத் தக்க பலன் கிட்டும்.
    எனவே, தொடர்ந்து முயற்சி செய். உடலை வருத்தி நன்கு
    உழைக்கக் கற்றுக்கொள் என்று வேண்டுகிறார் வள்ளுவர்.

    இன்றைக்கு உலக நாடுகளில் பொருளாதாரத்தில் முன்னேறிய
    நாடுகளின் நிலையை நினைத்துப் பாருங்கள். உழைப்புத்தான்
    அவர்களது மூலதனம். இதையேதான் வள்ளுவர் இரண்டாயிரம்
    ஆண்டுகளுக்கு முன்னர் அறிவுரையாக வழங்கியுள்ளார்.


    • வள்ளுவரின் முற்போக்குச் சிந்தனை

    வள்ளுவர் வாழ்ந்த காலம், ஊழ் நம்பிக்கை மிகுந்த காலம்.
    எனவே, ‘ஊழ்’ என்று ஓர் அதிகாரத்திற்கே தலைப்புக்
    கொடுத்துள்ளார். ஊழை விட வலிமை உடையது வேறு எதுவும்
    இல்லை என்றும் கூறியுள்ளார்.


    ஊழின் பெருவலி யாஉளமற்று ஒன்று
    சூழினும் தான் முந்துறும்?


    (குறள்: 380)


    (வலி = ஆற்றல், யாஉள = எது உண்டு, சூழினும் = சூழ்ந்தாலும்,
    முந்துறும் = முன்னால் வரும்)

    மேற்குறிப்பிட்டவாறு கூறிய வள்ளுவர், ஊழின் மேல் பழிசுமத்தி,
    முயற்சி எதுவும் செய்யாமல், தம் வாழ்நாளை வீணாக்கிச்
    சோம்பியிருக்கும் மக்களையும் நினைத்துப் பார்க்கிறார். சமுதாயச்
    சிந்தனையாளராகிய வள்ளுவர், மக்களின் இந்த மனப்போக்கை
    மாற்றவே, இன்றையளவுக்கும் முற்போக்குச் சிந்தனையாகக்
    கருதப்படும் அரிய கருத்தாகிய, முயற்சியால் ஆகாதது எதுவுமே
    இல்லை என்ற கருத்தை வழங்கியுள்ளார்.

    வேறு சில இடங்களில் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்று
    குறிப்பிட்டுள்ளார்.     இக்கருத்து     உலகளாவியநிலையில்
    சொல்லப்பட்ட மிக உயர்ந்த ஒரு கருத்து. இன்றைக்கும்
    முன்னேறிய     நாடுகளில்     நடைமுறையில் இருக்கின்ற
    நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு கருத்து.


    • தன் முயற்சி

    தங்கள் வாழ்வு வளம்பெற, கேட்பவற்றைக் கொடுப்பவன்
    இறைவன். அவன் எல்லாம் வல்லவன். அவன் நினைத்தால்
    கிட்டாதது ஒன்றும் இல்லை என்று இறைவன் புகழ் பாடி,
    இறைவனிடமே தம்மை ஒப்புவித்துச் சரணம் அடைந்து,
    புண்ணியப் பயணம் மேற்கொள்வர். இறை நம்பிக்கை
    உடையவர்கள். இத்தகைய மனநிலையை மக்கள் பெறுவதற்குரிய
    காரணம் யார்? சமயச் சிந்தனையாளர்கள். அத்தகைய
    சிந்தனையாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில்,
    ‘தன்முயற்சி’ என்னும் புதிய சிந்தனையை வழங்கியவர் வள்ளுவர்.

    எனவே, இறைவன் மீது பழிபோடாமல், எல்லாம் அவன்
    பார்த்துக் கொள்வான் என்று இறைவன் மீது நம் பாரத்தை
    இறக்கி வைக்காமல், நாமே நம் பாரத்தைச் சுமக்கும், நாமே
    நமக்குரிய தகுதியை நம் முயற்சியால் பெறும் மனப்பக்குவமே
    வள்ளுவர் வலியுறுத்தும் இறைமை.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I


    1.


    ‘இறை’ என்பதற்கு என்ன பொருள்?

    2.

    குறிஞ்சி நிலத்தின் கடவுள் யார்?

    3.

    யாரது ஆட்சி ‘இறை’ என்று வைக்கப்படும்?

    4.

    யார் வானுலகத்தில் வாழும் இறைவனோடு
    சமமாகக் கருதப்படுவாó¢è÷¢?

    5.

    யார் கட்டளையிட்டால் மழை பெய்யும்?


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:57:27(இந்திய நேரம்)