தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.4

  • 2.4 இறைமையும் அறமும்

    அறத்தினை இறைவனாக உருவகப்படுத்திக் கூறுவது உலகின்
    பல்வேறு நாடுகளிலும் இருந்து வரும் வழக்கமாகும். பண்டைத்
    தமிழரும் இம்மரபினைப் போற்றியுள்ளனர்.


    • பண்டைய இலக்கியங்களும் அறக்கடவுளும்

    தொல்காப்பியத்திலும் அறக்கடவுள் பற்றிய குறிப்பு
    இடம்பெற்றுள்ளது .


         அறன் அழித்துரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல்

    (தொல். பொருள்: 270)


    என்பதில் அறக் கடவுளைப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

    புறநானூற்றிலும் அறக்கடவுள் பற்றிய செய்தி உள்ளது.
    வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் கிள்ளிவளவன் என்னும்
    மன்னனை அறக்கடவுள் போல், நீதி வழங்குவாயாக என்று
    வேண்டுவதாக ஒரு பாடல் இடம் பெற்று உள்ளது.


        அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து

    (புறம்: 35)

    (அன்ன = போல, நாட்டத்து =ஆராய்ந்தால்)

    என்ற பாடல் வரி இதை மெய்ப்பிக்கிறது. வள்ளுவரும் அறத்தை
    இறைவனாக உருவகப்படுத்தியுள்ளார்.


    2.4.1 இன்பமும் அறமும்

    பண்டைத் தமிழர் அறம் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே
    கருதிப் போற்றினர். ஒழுக்க நெறிக்கு உரிய விதிமுறைகளின்
    தொகுப்பாகவே அறம் கொள்ளப்பட்டது. இத்தகைய மரபில்
    வந்தவர் வள்ளுவர்.

    அறத்தோடு வாழ்ந்தால் இன்பம் கிடைக்கும். அந்த இன்பம்
    நிலையான இன்பம். உண்மையான இன்பம். அறத்திற்குப்
    புறம்பான வகையில் வரும் இன்பம் உண்மையானது அல்ல.
    தற்காலிகமானது. எனவே இன்பம், பேரின்பம் என்பது
    அறத்தால்தான் வரும் என்கிறார் வள்ளுவர். இதனை


    அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
    புறத்த புகழும் இல


    (குறள்:39)


    (மற்று = பிற, புறத்த = புறம்பானவை)

    என்ற குறள் மூலம் குறிப்பிடுகிறார்.

    மேற்குறிப்பிட்ட குறளுக்குப் பொருள் கூறும் சிலர், வள்ளுவரால்
    இங்குக் குறிக்கப்படும் இன்பம் சிற்றின்பமே என்பர். இந்த
    உலகத்தில் வாழும் இல்லற வாழ்க்கையிலேயே வாழவேண்டிய
    அறநெறியில் வாழ்ந்தால் தெய்வத்தோடு வைத்து எண்ணக்கூடிய
    சிறப்பைப் பெறலாம் என்று இன்னொரு குறளில் (குறள்: 50)
    குறிப்பிடுகிறார். எனவே, இங்கு, இக்குறளில் இன்பம் என்பது
    இரண்டு வகையான இன்பத்தையுமே சுட்டுகிறார் என்று
    கொள்ளலாம்.

    இன்பத்தைச் சிற்றின்பம், பேரின்பம் என பாகுபாடு செய்வர்.
    இவற்றில் சிற்றின்பம் என்பது இல்லற வாழ்க்கையில் கிடைப்பது
    என்றும், பேரின்பம் என்பது வீடு (heaven) பேற்றில் கிட்டுவது
    என்றும் பொதுவாகச் சமயச் சார்புடையவர்கள் குறிப்பிடுவர்.

    அறத்தோடு வாழுங்கள். அவ்வாறு வாழ்ந்தால், இவ்வுலக
    இன்பத்தை மட்டும் அல்லாமல், மேல் உலக இன்பத்தை,
    அதாவது வீடுபேற்றில் பெறும் பேரின்பத்தையும் அடையலாம்
    என்கிறார் வள்ளுவர்.



    பயில்முறைப் பயிற்சி- III

    அறத்தோடு வாழச் சொல்வது சரி. ஆனால், ஆமாம், அறன்
    என்றால் என்ன? இதோ வள்ளுவரின் விளக்கம்:


    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற.


    (குறள்:34)


    வள்ளுவர் அறத்துக்குக் கூறும் விளக்கம் புரிகிறதா? இந்த
    நோக்கில் மேற்கண்ட பகுதியில் உள்ள குறளின் பொருளை
    எண்ணிப் பாருங்கள்.


    2.4.2 கேடும் அறமும்

    பிற உயிர்களுக்கு எத்தகைய சூழலிலும் தீங்கு விளைவிக்கக்
    கூடாது என்ற கொள்கை வள்ளுவருக்கு உண்டு. ‘புலால்
    உண்ணாமை’ என்ற அதிகாரம் அமைத்ததற்கு அடிப்படை
    வள்ளுவரின் இத்தகைய உணர்வே என்பர். இந்த இயல்பைச்
    சுட்டிக்காட்டி, இவரைச் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று
    கூறுவதும் உண்டு.

    பிறருக்குக் கேட்டைத் தருகின்ற தீமையான செயல்களை, ஒருவன்
    மறந்தும் மனத்தளவில் கூட எண்ணக் கூடாது. அவ்வாறு
    எண்ணினால், அவனுக்குக் கேடு வருமாறு அறக்கடவுள் எண்ணும்
    என்று எச்சரிக்கிறார் வள்ளுவர்.


    மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு


    (குறள்:204)


    (சூழற்க = எண்ணாதீர், சூழ்தல் = எண்ணுதல், கேடு = துன்பம்)

    ஒருவனது எண்ணமே, அவனது செயலுக்குக் காரணமாக அமையும்.
    நல்லதை எண்ணினால் நல்ல செயல்களைச் செய்வான். தீயவற்றை
    எண்ணுபவன் தீமையையே செய்வான். எனவே, ஒருவன் தன்
    மறதியில் கூட தீயவற்றை எண்ணக்கூடாது என்று குறிப்பிடுகிறார்
    வள்ளுவர். ஒருவனது எண்ணமே ஒருவனை அழித்துவிடும்.
    ‘மனசாட்சி படி நட’ ‘மனசாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை’
    ‘இவனுக்கு மனசாட்சியே இல்லை’ என்று அடிக்கடி மனசாட்சியைப்
    பற்றி நம் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடுகின்றோம். இதற்கு
    என்ன காரணம்? நம் மனம் நடுநிலைமையானது, அறவயப்பட்டது.
    நன்மை எது தீயது எது என்பதை அறியும் ஆற்றல் வாய்ந்த
    ஒன்று. அதற்கு மாறுபட்டு நடக்கின்ற பொழுதுதான் அடிக்கடி
    மனசாட்சியைப் பற்றிக் குறிப்பிடுகின்றோம். இந்த மனசாட்சியையே,
    வள்ளுவர் அறம் என்றும் அறக்கடவுள் என்றும் சுட்டுகிறார்.

    அறவயப்பட்ட மனத்திற்கு மாறுபாடான ஒன்றை, அறத்திற்குப்
    புறம்பான ஒரு செயலை ஒருவன் செய்வானானால், அவன்
    மனசாட்சியே அவனைத் தண்டிக்கும். மனம் நம் உள்
    உணர்வுகளை வெளிப்படுத்தும். நம் செயல்களையும் அடிக்கடி
    நினைத்துக் கொள்ளும்.

    நம்மை முழுமையாக நம்பி இருந்த நண்பனுக்குத் துரோகம்
    செய்தால், அந்தத் துரோகச் செயல் அடிக்கடி நம் மனக் கண்
    முன்னால் வந்து நம்மைத் துன்புறுத்தும். அதை மறக்க பலமுறை
    முயன்றாலும் நம்மால் அதை மறக்க முடியாது நெஞ்சில் ஒரு
    முள்ளாகக் குத்திக் கொண்டே இருக்கும். நம் மன நிலையே
    நமக்கு நரகமாக அமையும்.

    தன் செயலுக்குத் தண்டனை அனுபவிக்க வேறு எங்கும் செல்ல
    வேண்டியதில்லை. அவன் மனமே அவனுக்குத் தண்டனை
    வழங்குகிறது. எனவேதான் வள்ளுவர் மறந்தும் பிறருக்குத் தீங்கு
    நினைக்காதே, அவ்வாறு நினைத்தால், அறவயப்பட்ட உன்
    மனசாட்சி உனக்குத் தீங்கு கொடுக்கும் என்று எச்சரிக்கிறார்.

    மனசாட்சியின் உருவில் அறக்கடவுள் அமைந்துள்ளது என்பதுவும்
    வள்ளுவரின் இறைமைக் கோட்பாட்டில் ஒன்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:57:35(இந்திய நேரம்)