தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.0-பாட முன்னுரை

  • 6:0 பாட முன்னுரை

    மனித வாழ்க்கை, கூட்டாகச் சேர்ந்து வாழும் சமூக அமைப்பு
    முறையைச் சார்ந்ததாகும். ஒருவருக்கு     ஒருவர் இயைந்து,
    துணையாக நின்று, ஊக்கமும் ஆதரவும் தந்து, ஒன்றாக உயரும் வாழ்க்கையாகும். அதே நேரத்தில் ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு
    ‘தனித்துவம்’ குடிகொண்டிருக்கும்; பிறரிடம் இல்லாத பண்பு,
    ஆற்றல், திறமை எனச் சில அவரைப் பிறரிடம் இருந்து பிரித்துக்
    காட்டும். இத்தனித்துவம்     காரணமாக     ஒருவற்கு, அவர்
    சார்ந்திருக்கும் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்கள் அனைவர்
    மீதும், ஒரே அளவிலான பரிவும் இயைபும் தோன்றுவதில்லை.
    சிலரிடம் அதிகமாகவும், சிலரிடம் குறைவாகவும் தோன்றும்.
    உங்கள் அலுவலகம், நீங்கள் சார்ந்திருக்கும் ஒரு மன்றம் அல்லது
    கழகம், உங்கள் வகுப்பறை     என ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அலுவலகப் பணியாளர், மன்ற உறுப்பினர்,
    வகுப்பறை மாணவர் எனப் பலருடன் நீங்கள் தினமும் பழகவும்,
    சேர்ந்து செயலாற்றவும் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் பழகும்
    அனைவரிடமும் உங்கள் உறவு நிலை ஒரே தரத்தினதாக உள்ளதா?
    எண்ணிப்பாருங்கள். சிலரிடம் உங்கள் ஒட்டுதல் கூடுதலாகவும்,
    உங்களை நெருங்கவைத்த     நோக்கத்திற்கு     அப்பாலும்,
    விரிவடைவதாக அமையும் இல்லையா? இப்படிச் சிலரிடம் மட்டும் நெருக்கம் கூடுவதற்கு என்ன காரணம்?

    ஒத்த மனம், இயல்பு, சார்பு ஆகியவை இருவரை நண்பர்களாக
    இணைக்கின்றன. சாதி, மதம், இனம், மொழி, நாடு என்ற
    வரம்புகள் இப்படி ஒன்றுபட்ட மனங்களைக் கட்டுப்படுத்துவது
    இல்லை.

    இவ்வகை நட்பு இயற்கையாகத் தோன்றுவது, பழகப் பழக
    இறுகுவது; வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ அவசியமானது. எனவே
    தம் வாழ்வியல் கருத்துகளில் வள்ளுவர் நட்புக்கும் உரிய இடம்
    கொடுத்துள்ளார். நட்பு பற்றிய அவர் கருத்துகள் என்ன?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:05:32(இந்திய நேரம்)