Primary tabs
-
6:5 தொகுப்புரை
நட்பை விட இந்த உலகில் தேடிச்சென்று பெறக்கூடிய அரிய
பொருள் ஏதாவது இருக்கின்றதா? ஒரு செயலில் இறங்கும் பொழுது,
துணை வேண்டியிருப்பின், பாதுகாவலாக உடன் நிற்பது நட்பைத்
தவிர வேறு எது? நட்பின் சிறப்பை விளக்க வந்த வள்ளுவர்
வினவும் கேள்விகள் இவை.
நட்பின் இலக்கணம் இடுக்கண் (துன்பம்) களைவது; உணர்ச்சியால்
ஒன்றுவது; தவறும் நேரங்களில் இடித்துரைத்து நெறிப்படுத்துவது.
இத்தகைய நட்பிற்கு உகந்தவர் பண்புடையவரும் நல்ல
குடிப்பிறந்தவரும் ஆவர். நட்புக்கொள்ளத் தகுதியற்றவர்கள்
‘சொல்வேறு செயல்வேறு’ என்றிருப்பவரும் அறிவிலிகளும். நட்பின்
பெருமையாலும் அது தரும் உரிமைகளாலும், நண்பர்போல் நடிக்க
முயல்வர் பகைவர் - அவர்களிடம் எச்சரிக்கை வேண்டும்.மேற்கூறிய செய்திகளே இப்பாடத்தின் சுருக்கமாகும். சமூக இயல்,
உளவியல் போன்ற அறிவுத்துறைகள் உருவெடுப்பதற்குப்
பல்லாண்டுகளுக்கு முன்னரே சமுதாயப் பழக்க வழக்கங்களையும்,
தனிமனிதரின் செயல் வகைகளையும் ஊன்றிக் கவனித்து, அலசி,
ஆய்ந்து அறிந்த உண்மைகளின் சாரம் தான் இந்தச் செய்திகள்.
எனவே தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும்
தொடர்பு அறாமல், பயன்தரும் அறிவுரைகளாகி, அறநெறியாக
அவை விளங்குகின்றன.