தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.2-யாரை நண்பராகக் கொள்வது?

  • 6:2 யாரை நண்பராகக் கொள்வது?

    E

    எல்லோரிடமும்     நட்புக்கொள்ள முடியாது. திருடனோடு
    நட்புக்கொள்ள முடியுமா? திருடனோடு நட்புக் கொண்டால்,
    நாமும் அவனது திருடும் இயல்புக்கு அடிமை ஆகிவிடுவோம்.
    எனவே நல்லபண்பு உள்ளவர்களிடமே நட்புக்கொள்ள
    வேண்டும். அதுதான் நட்பின் பெருமை என்று குறிப்பிடுகின்றார்
    வள்ளுவர்.

    ‘பேயொடு ஆனாலும் பிரிவது கடினம்’ என்பார்கள். எனவே
    ஒருவருடம் பழகி நட்புக் கொண்ட பின், அவரிடம் இருந்து
    விடுபட்டுப் பிரிந்து வருவது என்பது மிகவும் கடினம். தீய நட்பு,
    ‘தான் சாகிற வரைக்கும்’, ஒருவனுக்குத் துன்பம் தரும். எனவே
    நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் முன் எச்சரிக்கையாக
    இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


    நாடாது நட்டலின் கேடு இல்லை; நட்டபின்
    வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு.



    (குறள் எண்: 791)


    (நாடாது = ஆராயாது; நட்டலின் = நண்பராக ஆவதைவிட;
    வீடு = விடுதல், விமோசனம்)

    ஆராயாமல், தெளிவாகச் சிந்தித்து முடிவு செய்யாமல், ஒருவருடன்
    நட்பு பாராட்டுதலால் விளையும் கேட்டினைப் போல் வேறு கேடு
    இல்லை. ஏன் என்றால் நட்பு என்ற உரிமை ஒருவரைச்
    சார்ந்தபின், அவ் உரிமையில் இருந்து அவரைப் பிரிப்பது
    என்பது இயலாது. நண்பராக இணைந்தபின் அப்பிணைப்பை
    முறித்தல் கடினம். அப்படி ஆயின் எப்படிப்பட்டவரை நண்பராகக்
    கொள்ள வேண்டும்?


    அழச்சொல்லி, அல்லது இடித்து, வழக்கறிய
    வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்



    (குறள் எண் : 795)


    நாம் ஏதேனும் குற்றம் புரியும்பொழுது, அக்குற்றத்தை நாம்
    உணர்ந்து, அதற்காக நம் உள்ளம் வருந்துப்படிக்கு, அதை
    எடுத்துச் சொல்கின்றவர் (‘அழச்சொல்லி’); நெறிதவறி நடக்கும்
    பொழுது, அதைச்சுட்டிக்காட்டித் திருத்துபவர் (‘இடித்து’); நமது
    சூழலையும் அச்சூழலுக்கு உகந்த நடப்பு வழக்கங்களையும்
    நன்கு புரிந்து அவற்றிற்கு ஏற்றவாறு நம்மை வழி நடத்திச்
    செல்லும் திறன் பெற்றவர் (‘வழக்கறிய வல்லார்’) - என
    இவ்வகைப்பட்ட நல்லவரின் நட்பைத் தெரிந்து ஏற்க வேண்டும்
    என்கிறார் வள்ளுவர்.


    6.2.1 பண்புடையார் நட்பு

    பண்புடையார் என்றால் யார்? எப்படி அவர்களைக்
    கண்டுபிடிப்பது? வள்ளுவர் அதற்கும் வழி சொல்கிறார்.

    பண்புடையர் என்போர் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல்,
    பிறரோடு அன்பு செலுத்துகின்ற, பிறருக்கு உதவி செய்கின்ற
    நல்ல இயல்புகள் உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும்
    குடிப்பெருமையும் இருக்க வேண்டும். குடிப்பெருமையை
    எப்படி அறிந்து கொள்வது?

    ‘கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்குச் சுட்டாலும்
    வெண்மை தரும்’ என்பது தமிழில் உள்ள ஒரு பழமொழி.
    எத்தகைய துன்பம் அல்லது சோதனை வந்தாலும், நல்ல
    குடியில் பிறந்த மக்கள், தங்கள் இயல்புகளில் இருந்து
    கொஞ்சம் கூட நெகிழமாட்டார்கள். அவர்களுக்கு வரும்
    துன்பமும், சோதனையும் அவர்களின் நல்ல பண்புகளை மேலும்
    மேலும் வளிப்படுத்தும். சங்கைச் சுடச் சுட அது எப்படி மேலும் மேலும் தூய்மையாகவும் வெண்மையாகவும் மாறுமோ, அதுபோல்
    தான், நல்ல குடிப்பிறந்தார் சிறப்புடன் திகழ்வார்கள். எனவே,
    மேற்குறிப்பிட்ட வகையில்     செயல்படுபவரே     நல்ல
    குடிப்பெருமை உடையவர்கள். இத்தகையோரை நண்பர்களாக
    ஏற்றுக் கொள்ளலாம், என்கிறார் வள்ளுவர்.

    தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஏனென்றால், தவறுவது
    மனித இயல்பு (To err is human). அப்படி ஆயின், நல்ல
    நண்பர்களைத் தேர்வு     செய்வது எப்படி? நண்பராக
    ஆகவிரும்பும் ஒருவரின் குணத்தைக் கணக்கிடுங்கள்; குற்றம்
    குறையும் கவனத்தில் கொள்ளுங்கள். அவரது குறை எத்தகையது?
    சூழலால் நேர்ந்த குறையா? அல்லது குற்றத்தையே தம்
    வழியாகக் கொண்டவரா? என்பன போன்றவற்றை நன்கு
    ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும்.

    சிலர் நம்மோடு பழகும் முறையை வைத்து, அவர்களைப் பற்றிச்
    சில கருத்துகளை அமைத்திருப்போம். ஆனால், அவர்களை,
    வேறு சில இடங்களில், வேறு சூழலில், தீயவர்கள் மத்தியில்
    பார்க்கும் பொழுது ‘இவர் எப்படி இந்த இடத்தில்?’ என்று
    மிகவும் அதிர்ச்சி அடைவோம். அவர்கள் நம்மிடம் காட்டிய
    நட்பையும், நடவடிக்கைகளையும், இப்பொழுது இருக்கும்
    சூழலையும், சுற்றத்தையும் நினைத்துப் பார்ப்போம். நமக்கு
    ஏமாற்றமாக இருக்கும். ஒருவனை நண்பனாக ஏற்றுக்
    கொள்வதற்குமுன் அவன் சுற்றத்தையும் பார்க்க வேண்டும், அது
    முக்கியம்.

    மேற்குறிப்பிட்டவைகளையே,     பண்புடையவர்கள் என்று
    அடையாளம் காண்பதற்கு உரிய வழி என்று வள்ளுவர்
    கூறுகிறார்.

    தன் மதிப்பீடு: வினாக்கள் - I

    1. நட்பிற்கு வள்ளுவர் கூறும் இலக்கணம் யாது?

    1. உண்மையான நட்பு எது?

    1. எத்தகையோரை நண்பராகக் கொள்ளலாம்?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:05:41(இந்திய நேரம்)